அதிசய விளைவு = கசல் துளிகள்

சேர்த்து வைத்த வார்த்தை எல்லாம்
செலவாக்கத் தெரியாத சிக்கனம் ஏன்
சிக்கனத்தை அள்ளி சீதனமாய் வழங்க
மௌனத்தைக் கலைத்திடு அக்கணம் தேன்
=
வார்த்தைகளைப் பூட்டி வாய்க்குள்ளே அடைத்து
வாராதே என்றோர் கட்டளை எதற்கு?
வாய்திறந்து பேசி வாய்ப்புகளை வழங்கு
வாய்புகழும் நீயோர் சிற்றலை எனக்கு
=
மௌனத்தை விற்க மொழியின்றி வந்தால்
இதயத்தால் வாங்க எப்படி முடியும்?
இதழ்களின் வாசலால் வெளிவரத் தயங்கும்
வார்த்தையின் செவிகளில் செப்படி புரியும்
=
வார்த்தையின் தேர்வர இதழ்களின் வீதியில்
மௌனக் குப்பைகள் களைவது அவசியம்
தேர்வரும் தெய்வமாய் தேவதை வாய்மொழி
தேனென பொழிவதில் விளைவது அதிசயம்,
=
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (5-Jul-19, 2:41 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 172

மேலே