இரத்த திட்டுக்கள்

இரவின் நிசப்தம், ஒரு சில சில்வண்டுகளின் ரீங்காரம் காதை துளைத்துக் கொண்டிருந்தன, வேறு சப்தங்கள் ஏதும் இல்லை மனதிற்குள் ஏதோ ஒரு குழப்பம். அதனை செய்வோமா வேண்டாமா என்று மூளையின் அனைத்து செல்களும் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தன. தலை இலேசாக வலிப்பது போல் ஒர் உண்ரவு.

காதுக்கு அருகில் அவள் எதனையோ முணு முணுத்துக் கொண்டிருந்தாள், மெதுவாக அவளை திரும்பி பார்த்தேன், எனது கோப பார்வையினை புரிந்து கொண்டது போல் அமைதியானாள். நான் மீண்டும் சிந்தனை வயப்பட ஆரம்பித்தேன், மெதுவாக கரங்களில் கிள்ளினாள், அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, மீண்டும் காதருகில் வந்து சத்தமாக ஏதோ முணு முணுக்க எனக்குள் இருந்த கோபம் மடைதிறந்த வெள்ளமாக வெளியேற கைகளை உயர்த்தி ஒரே அறை அவளின் மீது பட்ட கரங்கள் அருகில் இருந்த சுவற்றில் மோதி நின்றது, சுவரெல்லாம் இரத்த திட்டுக்கள்...எனக்குள் புன்னகைத்துக் கொண்டேன் அவளை அழித்துவிட்டேனென்று.., ஆனால் மீண்டும் அதே முணு முணுப்பு இப்போது வலது புற காதுக்கருகில்.
சே... சே இந்த கொசுக்களுக்கு வேலையே இல்லை என்று முணு முணுத்துக் கொண்டே எழுந்து கிளம்ப ஆயத்தமானேன்.

எழுதியவர் : சா.மனுவேந்தன் (5-Jul-19, 8:56 am)
சேர்த்தது : மனுவேந்தன்
Tanglish : iratha thittukkal
பார்வை : 1422

மேலே