நல்லார் சீர் குன்றார் ஒளியே மீக்கொண்டு நிற்பர் - சீர்மை, தருமதீபிகை 310

நேரிசை வெண்பா

எல்லா இளிவும் எளிதுறுத்தி ஈரவல்ல
பொல்லா வறுமை புகுந்தாலும் – நல்லார்சீர்
குன்றார் ஒளியேமீக் கொண்டுநிற்பர் தீப்புகினும்
பொன்றுமோ என்றுமே பொன். 310

- சீர்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

சிறுமைகள் பல நிறைந்த வறுமை புகுந்து வாட்டினும் மேலோர் தம் அருமை குலைந்துபடார்; நெருப்பில் இட்ட பொன் போல் மேலும் பெருமை மிகுந்தே பெருகி நிற்பர் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், சீரியர் எவ்வழியும் செவ்வி சிதையார் என்கின்றது.

‘பொல்லா வறுமை’ என்றது எவரையும் அல்லலுறுத்தி அவம்படுத்தும் அதன் கொடுமை உணர வந்தது.

சிறுமை பல செய்து இருமையும் சிதைக்கும் இயல்பினதான வறுமை புகுந்து வருத்தினும் மேலோர் தம் பெருமை குலையாது நிற்பர் என்றதனால் அவரது அருமை நிலை அறியலாகும்.

குணநலங்களையுடைய மேலோரை நல்லார் என்றது.

அல்லல்கள் அடர்ந்த பொழுதும் நல்லவர் தம் நிலைமை குலையார்; மேலும் தேசு மிகுந்து மேன்மை மீதூர்ந்து திகழ்வர் எனறதை ’சீர் குன்றார், ஒளியே மீக்கொண்டு நிற்பர்’ எனப்பட்டது; இது புனிதமான அவர்தம் உள்ளப்பான்மையை உணர்த்தி நின்றது. ஆன்ம பரிபாகமுடையவரது நீர்மை யாண்டும் மேலோங்கி வருகின்றது.

தீ, வறுமைக்கும், பொன், நல்லவர்க்கும் ஒப்பாம். பண்பும் பயனும் கருதி நல்லாரைப் பொன் என்றது.

அரும் பொன்னே! மணியே! என் அன்பே' எனக் கடவுளைக் கருதித் துதிக்குங்கால் பொன்னை முன்னதாகக் குறித்துள்ளார். அருமை பெருமைகள் உரிமையில் உயர்கின்றன.

பொன் எல்லாராலும் விரும்பிப் போற்றும் அருமைப்பாடு உடையது; அவ்வாறே நல்லோரும் பெருமை பெற்றுள்ளனர்.

கல், மண், இரும்பு, பித்தளை, செம்பு, வெண்கலம், வெள்ளி என உள்ளி உணரும்படி பல வகை நிலைகளில் பரவியுள்ள மனிதர் திரளில் குண சீலரான மேலோர் சிறந்த பொன்னைப் போல் பொலிந்து விளங்குகின்றார்,

உள்ளப் பண்புடைய நல்லவனைக் குறித்துப் பேசுங்கால் அது சொக்கத் தங்கம் என வழங்கிவரும் உலக வழக்கமும் ஈண்டு உணர்ந்து கொள்ளவுரியது.

வறுமைத் துயரம் வாட்டி வதக்கினும் நெருப்பில் இட்ட பொன்னைப் போல் சிறந்த தேசுடன் சீரியர் உயர்ந்து ஒளிர்கின்றார்.

தீப்புகினும் பொன்றுமோ என்றுமே பொன்? இந்த உவமை வாக்கியம் உபமேயத்தை ஊன்றி நோக்கி உணர வந்தது. எதையும் எரித்து ஒழிக்கின்ற நெருப்பு பொன்னை யாதொரு தீதும் செய்யாமல் நல்ல ஒளியாக்கி இனிது வெளி விடுகின்றது; எவரையும் ஈனமாக்கி இழித்தொழிக்கும் வறுமை நல்லோரை அல்லலில் ஆழ்த்தாமல் செல்லமாகப் போற்றி உயர்ந்த சீரியாக்கி ஒளி செய்தருள்கின்றது.

இழிந்த உலோகங்களைப் போல் கழிந்து படாமல் சிறந்த பொன்னைப் போல் மனிதன் உயர்ந்து வர வேண்டும். குணம் பெருக மனிதன் மணம் பெறவேண்டும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)

ஆற்று மின்னருள் ஆருயிர் மாட்டெல்லாந்
தூற்று மின்னறத் தோம்நனி துன்னன்மின்
மாற்று மின்கழி மாயமும் மானமும்
போற்று மின்பொரு ளாவிவை கொண்டுநீர். 19 வளையாபதி

நேரிசை வெண்பா

அறிவ தறிந்தடங்கி அஞ்சுவ தஞ்சி
உறுவ துலகுவப்பச் செய்து - பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது. 74 பொறையுடைமை, நாலடியார்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jul-19, 2:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 53

புதிய படைப்புகள்

மேலே