சீலம் உடையார் சிறிதே வழுவினும் உட்கோலம் அழிந்து குலைவர் - சீலம், தருமதீபிகை 320
நேரிசை வெண்பா
சீலம் உடையார் சிறிதே வழுவினுமுட்
கோலம் அழிந்து குலைவரால் - சீலமிலார்
என்னபிழை நேர்ந்தாலும் எண்ணார் புளியுறின்பால்
பின்னமுறும் மோராமோ பேசு. 320
- சீலம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
புளி சிறிது படின் பால் முழுதும் கெடும்; மோர் யாதும் கெடாது; அது போல் நல்ல சீலம் உடையவர் சிறிய பிழை நேரினும் நிலை குலைந்து அயர்வர், சீலம் இல்லாதவர் எவ்வளவு வழுக்கள் நேர்ந்தாலும் கலக்கமின்றி நிற்பர் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் ஒழுக்கத்தைப் பாதுகாக்கும் பான்மை கூறுகின்றது.
புகழ் புண்ணியங்களுக்கு ஏதுவான தரும நலங்களைத் தழுவி ஒழுகும் தகைமையாளரையே சீலம் உடையவர் என ஞாலம் குறித்து வருகின்றது. அந்தப் புனித சீலர் மனித சமுதாயத்தில் தனி நிலையில் உயர்ந்து நிற்றலால் அவர் நிலைமை தலைமையாய் ஓங்கி உலகக் காட்சியில் ஒளி மிகுந்துள்ளது.
பொறி புலன்களுக்குரிய போக நுகர்வுகள் எங்கும் பொங்கி வெறி மண்டியுள்ளமையால் பிழையான வழிகளில் எவரும் எளிதாக நுழைய நேர்கின்றனர். புல்லிய இந்த இன்பப் பொறிகளில் வீழாமல் ஐம்புலன்களையும் நல்ல நெறிகளில் செலுத்தி ஒழுகுதல் அரிய சீலத்தின் பெரிய பயனாம். வழுப்படாமல் வளர்ந்து வரும் அளவே விழுப்பமுடையராய் விளங்கி வருகின்றனர். ஒழுக்கக் கேடுகள் வழுக்கள் என வந்தன.
அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
ஒழுக்கமே யன்றித் தங்கள்
உள்ளுணர்(வு) அழிக்கும் மட்டும்
புழுப்பயில் தேனும் அன்றிப்
பிறவற்றின் புண்ணும் மாந்தி
விழுப்பயன் இழக்கும் மாந்தர்
வெறுவிலங்(கு) என்று மிக்கார்
பழித்தன ஒழித்தல் சீலம்
பார்மிசை யவர்கட்(கு) என்றான். 224, சீலம், முத்தியிலம்பகம், சீவக சிந்தாமணி
ஒழுக்கம் இன்றி இழுக்கங்கள் புரிந்து வாழ்பவர் மிருகங்களே என இதில் பழித்திருத்தல் அறிக.
மட்டு - கள். புலாலை பிறவற்றின் புண் என்றது. அறிவை மயக்கிச் சிறுமை விளைக்கும் பழி உணவுகளை ஒழித்தலே ஒழுக்கத்தின் முதல் படி என இது உணர்த்தியுள்ளது.
மயக்கும் கள்ளும் மன்உயிர் கோறலும்
கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்:
பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்
நல்அறம் செய்வோர் நல்உலகு அடைதலும்
அல்லறம் செய்வோர் அருநரகு அடைதலும்
உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர். 16 ஆதிரை பிச்சை இட்ட காதை மணிமேகலை
புலை கொலைகளைத் தவிர்ந்து ஒழுகுவதே தலையாய ஒழுக்கம் என்பதை இதனால் அறிந்து கொள்ளுகின்றோம்.
தன் உயிர்க்கு இன்பம் தேடுகின்ற மனிதன் எவ்வுயிர்க்கும் யாதொரு துன்பமும் நேராமல் ஓர்ந்து ஒழுக வேண்டும் என்பது தேர்ந்த விதியாம். பழித்தன ஒழித்தல் சீலம் எனச் சீலத்திற்கு இலக்கணம் வகுத்திருக்கும் அழகை ஆய்ந்து பார்க்க வேண்டும்.
ஒழுக்கத்தைத் தம் உயிரினும் அருமையாக விழுமியோர் போற்றி வருவராதலால் ஏதேனும் பிழை நேரின் அவர் உள்ளம் .துடித்து விடுகின்றார்.
’சிறிதே வழுவினும் குலைவர்’ என்றதனால் அவரது விழுமிய நிலைமை வெளியாய் நின்றது.
அவரது தன்மையும் நன்மையும் தெரிய சீலம் உடையாரைப் ‘பால்’ என்றது. பால் போல் ஒழுக்கத்தவர் என மேல் வந்துள்ளதையும் இங்கே சிந்தனையில் கொள்ள வேண்டும்.
பாலில் ஒரு துளி புளி விழுந்தாலும் அது நிலை திரிந்து போகும்; மோரில் எவ்வளவு படினும் ஏதும் திரியாது.
சீலமுடைய மேலோர் சிறு வழு உறினும் நிலை குலைந்து விடுவர்; அஃது இல்லாத கீழோர் எவ்வளவு பிழைகள் நேர்ந்தாலும் யாதும் கவலாமல் அகங்கரித்து நிற்பர். அந்நிலைமைகளைக் காட்சிப் படுத்தித் தெளிவாக விளக்க உவமைகள் வந்தன.
பால் மேலோர்க்கும், மோர் கீழோர்க்கும், புளி வழுவுக்கும் ஒப்பாம். சீலமுடையார் தலைமையும் அஃது இல்லாரது நிலைமையும் இதில் ஒருங்கு கூறப்பட்டன.
கல்வி, செல்வம், அதிகாரம் முதலிய நலங்கள் எவற்றினும் சீலமுடைமையே மேலான உடைமையாம்; அதனையுடையவரே சிறந்த மேலோராய் உயர்ந்து நிற்கின்றார், அதனை இழந்தவர் என்ன வளங்கள் எய்தியிருந்தாலும் சின்னவராயிழிந்து படுகின்றார். அந்த இழிவு நேராமல் சிறந்த சீலனாய் உயர்ந்து வாழ வேண்டும்.
நேரிசை வெண்பா
மனிதனைத் தெய்வமென மாண்புறுத்த வல்ல
புனித ஒழுக்கம் பொருந்தார் - பனிமலைபோல்
செல்வமிகப் பெற்றுச் சிறந்திருந்தார் ஆனாலும்
நல்லோர் மதியார் நயந்து.
இன்னிசை வெண்பா
சீலம் அறிவான் இளங்கிளை சாலக்
குடியோம்பல் வல்லான் அரசன் - வடுவின்றி
மாண்ட குணத்தான் தவசியென்(று) இம்மூவர்
யாண்டும் பெறற்கரி யார். 13 திரிகடுகம்
சீலம் திவ்விய மகிமை யுடையது; சீவ ஒளியாய் உள்ளது; அதனை உரிமையுடன் பேணி இருமையும் காணுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.