செல்வ நிலையாமை 2 - கலி விருத்தம் – வளையாபதி 36
வெண்டளை பயிலும் கலிவிருத்தம்
ஒழிந்த பிறவறன் உண்டென்பார் உட்க
வழிந்து பிறரவாம் வம்பப் பொருளை
இழந்து சிறிதானும் எய்தா தொழிந்தார்
அழிந்து பெருந்துயர்நோய்க்(கு) அல்லாப் பவரே. 36 வளையாபதி
பொருளுரை:
பொருளை ஈட்டுவதிலேயே முயன்று இனி இப்பொருளால் நாம் செய்ய வேண்டிய எஞ்சிய பிற அறச் செயல்களும் உண்டு என்றும், அவற்றை இனியாவது செய்வோம் என்றும் கருதுகின்ற பொழுது, பெரிதும் அஞ்சும்படி அப்பொருள் அவரிடத்தினின்றும் அழிந்து போய் விடுகிறது.
பிறருடைய கைப்பொருளாய் விடுகின்ற புதுமையையுடைய செல்வத்தை இழந்து அச்செல்வத்தின் பயனைச் சிறிதளவேனும் எய்தப் பெறாத மாந்தர் நெஞ்சழிந்து அவ்விழப்பால் உண்டான பெரிய துன்பமாகிய வறுமை நோயால் வாழ்நாள் முழுதும் மனஞ்சுழன்று கிடப்பவரே ஆவர் எனப்படுகிறது.
விளக்கம்:
பொருள் ஈட்டும் வரையில் நல்லோரும் அறஞ்செய்யார்; நாம் இப்பொருளால் செய்ய வேண்டிய அறங்களும் உள்ளன, இனி அவற்றைச் செய்வோம் என்று எண்ணியிருக்கும் போதே அவர் அஞ்சும்படி அப்பொருள் அழிந்து பிறர் பொருளாய் விடும்;
இத்தகைய நிலையாமையுடைய பொருளை ஈட்டி அறஞ் சிறிதேனும் செய்யாது அழிந்தொழிந்தவர் அதன் பின் வாழ்நாள் முடியும் வரையில் மனம் வருந்திச் சுழன்று கிடப்பர்.
ஆசிரியர் திருவள்ளுவனாரும்,
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை. 331 நிலையாமை
பொருளுரை: நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.
எனவும்,
கூத்தாட்(டு) அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று. 332 நிலையாமை
பொருளுரை: பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது, அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.
எனவும் அறிவுறுத்துவதை உணர வேண்டும்.