செல்வ நிலையாமை 3 – கலி விருத்தம் – வளையாபதி 37

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

இன்மை இளிவாம் உடைமை உயிர்க்(கு)அச்சம்
மன்னல் சிறிதாய் மயக்கம் பெரிதாகிப்
புன்மை உறுக்கும் புரைஇல் அரும்பொருளைத்
துன்னா(து) ஒழிந்தார் துறவோ விழுமிதே. 37 வளையாபதி

பொருளுரை:

ஒருவனுக்குப் பொருளில்லாததாகிய வறுமை பெரிதும் இழிவைத் தருவதாகும்.

மற்றும் அப்பொருள் பெருமளவு வைத்திருந்தாலும் அவனது உயிர்க்கு பெரிதும் அச்சத்தைத் தருவதாகும்.

மேலும் அப்பொருள் ஒருவனிடம் நிலைபெற்றிருக்கும் பொழுதில் மிகவும் சிறியதாகி, அப்பொருள் இருந்தாலும், இல்லை என்றாலும் இரண்டு பொழுதிலும் மயக்கம் மிகவும் செய்வதாகி மாந்தர்க்குக் கீழ்மையையே உண்டாக்கும் இயல்புடையது.

இத்தகைய மேன்மையில்லாத பொருள்களை பற்றுதலின்றி, அம்மயக்கம் ஒழிந்த சான்றோரின் துறவொழுக்கமானது மிகவும் சிறப்புடையதாகும்.

விளக்கம்:

இன்மை – நல்குரவு, வறுமை; இளிவரவு – இழிவு; உடைமை – பொருட்பேறு.

கள்வர், அரசர் முதலியோரால் கொலையுண்ணவும் நலிவுறவும் செய்யுமாகலின், உடைமை உயிர்க்கு அச்சம் என்றார்.

மன்னல் – நிலைபெறுதல், பொருள் சக்கரம் போல மாறி வருதலால் நிலைபேறு சிறிதாய் என்றார்.

மன்னல்: மன்னு
1. Permanence, stability, steadiness - நிலைபேறு. (நாமதீப. 607)
2. Strength - வலிமை (பிங்)
3. Greatness - பெருமை (பிங்)
4. Height - உயர்ச்சி (நாமதீப 771)
5. Perseverance - விடாமுயற்சி

புன்மை - காமவெகுளி மயக்கங்கட்கு கீழ்மை. புரை - உயர்வு.

இனி, இன்மை இளிவாம் என்பதனை,

இல்லாரை யெல்லாரும் எள்ளுவர்; செல்வரை
எல்லாருஞ் செய்வர் சிறப்பு. 752 பொருள் செயல் வகை

பொருளுரை:

பொருள் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்) எல்லாரும் இகழ்வார், செல்வரை (வேறு நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்பு செய்வர்.

எனவும்

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்குஞ் சோர்வு தரும். 1044 நல்குரவு

பொருளுரை:

நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் கூட, இல்லாமை வந்து விட்டால், இழிவான சொற்களைச் சொல்லும் தளர்ச்சியை உண்டாக்கி விடும்.

எனவும்,

மன்னல் சிறிதாகி என்பதனை,

அற்கா இயல்பிற்றுச் செல்வம்; அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல். 333 நிலையாமை

பொருளுரை:

செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.

என மேலே குறிப்பிட்டுள்ள திருக்குறளானும் உணர வேண்டும்.

துறவோ விழுமிது (பொருளின் மீது ஆசையைத் துறக்கும் ஒழுக்கமே உலகில் சிறந்தது) என்பதனை

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவற் துணிவு. 21 நீத்தார் பெருமை

பொருளுரை:

தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்த மேன்மக்களின் பெருமையே, சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் சொல்கின்றன.

எனவும்,

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்(து)
இறந்தாரை யெண்ணிக்கொண் டற்று. 22 நீத்தார் பெருமை

பொருளுரை:

ஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைக்கு, எண்ணிக்கையால் அளவு கூறுவது, இந்த உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும்.

எனவும்,

இருமை வகைதெரிந்(து) ஈண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு. 23 நீத்தார் பெருமை

பொருளுரை:

இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது

எனவும் மேலே குறிப்பிட்டுள்ள திருக்குறள்களாலும் உணர வேண்டும் என்கிறார் உரையாசிரியர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Jul-19, 11:15 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 48

மேலே