உயிர்களிடம் தண்ணளி வாய்ந்து வருவதே செவ்விய நீர்மை தெளி - நீர்மை, தருமதீபிகை 321

நேரிசை வெண்பா

புண்ணிய நீர்மை பொருந்தி உயிர்களிடம்
தண்ணளி வாய்ந்து தகவமைந்து - கண்ணியமே
எவ்வழியும் பேணி இனிது வருவதே
செவ்விய நீர்மை தெளி. 321

- நீர்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தரும குணங்களை மருவி, எல்லா உயிர்களிடத்தும் கருணை புரிந்து, யாண்டும் நடுவு நிலைமையுடன் நடந்து எவ்வகையும் .பெருந்தன்மையைப் பேணி வருவதே செவ்விய நீர்மையாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், நீர்மையின் நிலைமை கூறுகின்றது.

நீருக்குத் தண்மை, நிலத்திற்குத் திண்மை, தேனுக்கு இனிமை, பூவுக்கு மணம் போல், உலகப் பொருள்களுக்குக் குணங்கள் இயற்கையாக அமைந்திருக்கின்றன. அந்த அமைப்புகளின் அளவுக்குத் தக்கபடியே யாவும் மதிக்கப்படுகின்றன.

இயல்பு இனியதாயின் அதனையுடைய பொருளை நல்லது என்கின்றோம்; கொடியது எனின் அதனைத் தீயது என்கின்றோம். நல்லதை உவந்து கொள்கிறோம், தீயதை இகழ்ந்து தள்கிறோம்.

நன்மையான தன்மையுடையதே என்றும் எங்கும்.எவராலும் நயந்து நோக்கிப் புகழ்ந்து போற்றப்படுகின்றது.

இனிய குண நலங்களை எய்திய பொழுது மனிதன் தனி மகிமையாளனாய் உலகம் தொழுது வணங்க உயர்ந்து நிற்கின்றான். உடலை மருவி இயங்கும் உயிர் பலவகை இயல்புகளையுடையது..

அறிவு அருள் ஆசை அச்சம் மானம்
நிறை பொறை ஓர்ப்பு கடைப்பிடி மையல்
நினைவு வெறுப்பு உவப்பு இரக்கம் நாண் வெகுளி
துணிவு அழுக்காறு அன்பு எளிமை எய்த்தல்
துன்பம் இன்பம் இளமை மூப்பு இகல்
வென்றி பொச்சாப்பு ஊக்கம் மறம் மதம்
மறவி இனைய உடல்கொள் உயிர்க்குணம். – நன்னூல்

இதில் குறித்துள்ள முப்பத்திரண்டு குணங்களுடன் மேலும் பல இயல்புகள் உயிர்ப் பண்புகளாய் மேவி இருக்கின்றன.

சீவ சுபாவங்களாய் மேவியுள்ள இவற்றுள் நல்ல இயல்புகளையே பழகி உரம் ஏறியுள்ளவர் நல்லவர்களாய் வெளியே விளங்குகின்றார். தன்மை அளவே நன்மைகள் வளர்கின்றன. தகைமைகளால் வகைமைகள் காணப்படுகின்றன.

குணம், தன்மை, இயல்பு என்பன உயர்ந்த பண்புகளையே குறித்து வரினும் நீர்மை என்னும் சொல்லில் சீர்மைகள் பல நிறைந்துள்ளன. உரிய பெயரில் அரிய தகைமைகள் மருவி ஒளிர்கின்றன. இனிய பண்புகள் பெரிய இன்பங்களாகின்றன.

புண்ணியம் பொருந்தி, உயிர்களிடம் தண்ணளி வாய்ந்து, தகவு அமைந்து, எவ்வழியும் கண்ணியம் பேணி வருவதே நீர்மை என்றதனால் அதன் நிலைமையை நிறை தூக்கி உணர்ந்து கொள்ளலாம்.

கூர்மை அறிவின் அரிய நுட்பத்தைக் குறித்து வருதல் போல், நீர்மை உயிரின் இனிய தகைமையை உணர்த்தி வருகின்றது. தூய ஆன்ம அமைதியின் பான்மை காண வந்தது.

சிறந்த பெருந்தன்மையின் பரிபூரண நிலைமையாய் இது நிலவியுள்ளது. தரும குண சீலமும், அருள் நலனும், தகவுடைமையும், மன அமைதியும், மதி மாண்பும் அதி மேன்மையாய் ஒருவனிடம் அமைந்த பொழுது அவன் பெரு நீர்மையாளனாய்ப் பெருகி ஒளிர்கின்றான்.

கண்ணியம்: மரியாதை, மதிப்பு, மேன்மை. எவரும் எண்ணி மதிக்கும் தன்மை கண்ணியம் என வந்தது; குணம் வளர மணம் வருகிறது. கண்ணல் - கருதல், குறித்தல்.

தகவு என்பது உறவினர், அயலினர் என்று பாராமல் யாண்டும் எவரிடமும் நெறிபுரிந்து நெஞ்சம் கோடாது நிற்கும் நேர்மை.

சிறந்த குணங்கள் எல்லாம் உயர்ந்த மனிதனுடைய இயல்புகளாய் அமைந்திருக்கின்றன. அவனுடைய செயல்களும் மொழிகளும் நீதி நலங்கள் ததும்பி வேத விதிகளாய்ப் பொலித்து மிளிர்கின்றன.

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

நின்செய்கை கண்டு நினைந்தனவோ நீள்மறைகள்?
உன்செய்கை அன்னவைதாம் சொன்ன ஒழுக்கினவோ?
என்செய்தேன் முன்னம்? மறம்செய்கை எய்தினார்
பின்செல்வ(து) இல்லாப் பெருஞ்செல்வம் நீதந்தாய்.? 49 கவந்தன் வதைப்படலம், ஆரண்ய காண்டம், இராமாயணம்

இராமபிரானுடைய செயல் முறைகளும் குண நீர்மைகளும் இவ்வாறு புகழ்ந்து போற்றப்பட்டுள்ளன.

அன்பு, தயை, அருள், இரக்கம் என்பன புனிதமான உயிரின் கனிவுகளாய் விளைந்திருத்தலால் அவை எவ்வுயிர்க்கும் இனிமை சுரந்து வருகின்றன.

எல்லா நன்மைகளுக்கும் மூல காரணமாயுள்ள அதன் முதன்மை கருதி ’புண்ணிய நீர்மையை முதலில் குறித்தது.

தரும சுபாவம் இருதயத்தில் மருவிய பொழுது அம்மனிதன் எவர்க்கும் இனியனாய்த் தனிமகிமை அடைகின்றான்.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
2877
அறவிய மனத்தர் ஆகி
..ஆருயிர்க்(கு) அருளைச் செய்யின்
பறவையும் நிழலும் போலப்
..பழவினை உயிரோ(டு) ஆடி
மறவியொன் றானும் இன்றி
..மனத்ததே சுரக்கும் பால
கறவையிற் கறக்கும் தம்மால்
..காமுறப் பட்ட எல்லாம். 279 பிறவிகள் அறவுரை, முத்தி இலம்பகம், சீவக சிந்தாமணி

புண்ணிய மனத்தனாய் அருள் புரிகின்றவன் எண்ணிய பேறுகளை எல்லாம் எளிதில் பெறுவான் என இது உணர்த்தியுள்ளது. கருதியதை உடனே உரிமையுடன் அருளுகின்ற தெய்வப் பசுவாகிய சுரபியை மனத்ததே சுரக்கும் பால கறவை என்றது. இப் பாசுரம் மனனம் செய்து நாளும் சிந்திக்க உரியது.

இனிய நீர்மை தரும நலம் உடைமையால் அது தெய்வத் தன்மையாய்ச் சிறந்து எவர்க்கும் உய்வைக் தருகின்றது.

நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்தென்னை
ஈர்மைசெய்(து) என்னுயிராய் என்னுயிர் உண்டான். – திருவாய்மொழி

திருமாலின் நீர்மையை நினைந்து நம்மாழ்வார் இங்ஙனம் உருகியிருக்கிறார். நீர்மை எவ்வளவு அருமை பெருமைகளை உடையது என்பது இதனால் அறியலாகும். அரிய பல குணநலங்களின் நிறைவே நீர்மை; அதனை உரிமையாகப் பெற்றவர் இருமையும் மகிமையுடையராய் இன்பம் பெறுகின்றனர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Jul-19, 11:36 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 54

சிறந்த கட்டுரைகள்

மேலே