நெறியுடையான் என்பான் நெறிகடந்து செல்லா அறிவுடையான் - நெறி, தருமதீபிகை 331
நேரிசை வெண்பா
நெறியுடையான் என்பான் நெறிகடந்து செல்லா
அறிவுடையான் ஆகி அமர்வான்; - நெறிமுறைதான்
உள்ளம் திரியா(து) உறுதியாய் எவ்வழியும்
கள்ளம் புரியாமை காண். 331
- நெறி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
நீதி நெறி கடந்து தீது புரியாத அறிவுடையவனே நெறியுடையான் என்னும் பெருமைக்கு உரியவன்; நெறி என்பது உயிர்க்கு உறுதியான நல்ல வழியில் கள்ளம் யாதும் புரியாமல் உள்ளம் ஓர்ந்து ஒழுகுதல் ஆகும். இப்பாடல் நெறியின் நிலைமை கூறுகின்றது.
நெறி என்னும் சொல் வழி, ஒழுங்கு, நீதி முறை முதலிய பல பொருள்களைக் குறித்து வரினும் சிறப்பாக உயர்ந்த குறிக்கோளையே உணர்த்துகின்றது. நிறைந்த பொருளுடையது ஆதலின் இது சிறந்த மொழியாய் உயர்ந்தோர்களால் புகழ்ந்து போற்றப் படுகின்றது.
நேரான வழியில் நடப்பவன் ஓர் ஊரை அடைதல் போல் சீரான நெறியில் செல்பவன் பேரின்ப நிலையை அடைகின்றான். முத்திநெறி, சன்மார்க்கம் என்பன நெறியின் பொருளைத் தெளிவு செய்துள்ளன.
நீதியும் வழியும் ஒழுக்கமும் நெறி எனல் - (பிங்கலங்தை) பிங்கல முனிவர் இங்ஙனம் குறித்திருக்கிறார், ஒழுங்கும், நியமமும், நீதியும் நெறி என்றதனால் அதன் நிலை தெரிய நின்றது.
வழி விலகின் அயர்வும் துயரும் நேரும்; நெறி தவறின், பழியும் பாவமும் சேரும். பறவை விலங்குகள் போல் அல்லாமல் மனிதன் அறிவுநலம் மிகப் பெற்றவன். இழிவும் துயரும் நேராமல் உயர்வும் சுகமுமே சேர வேண்டும் என்று யாண்டும் மூண்டு நிற்பவன். இத்தகைய நிலையில் உள்ள அவன் நிலையான செவ்விய நெறியில் எவ்வழியும் விலகாமல் ஒழுகக் கடமைப்பட்டிருக்கிறான்.
நெறியுடையான் என்பான் நெறிகடந்து செல்லா அறிவுடையான் என்றது அறிவின் தலைமையும் நெறியின் நிலைமையும் அறிய வந்தது. நெறி முறை ஒழுகும் அளவே அறிவு ஒளி பெறுகின்றது.
மிருகங்களினும் மனிதன் பெரியவன் என்பது அறிவுடைமையினாலேயாம். அந்த அறிவுக்குப் பயன் நெறி தவறாது ஒழுகுதலே; நெறி வழுவின் அவன் அறிவிலியாய் இழிந்து படுகின்றான். அறிவினால் பெரியவன் என்பது நெறி வழுவாமல் ஒழுகி நிற்கும் நிலையையே பொறுத்துள்ளது.
அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
அறிவினால் பெரிய நீரார்
..அருவினை கழிய நின்ற
நெறியினைக் குறுகி இன்ப
..நிறைகடல் அகத்து நின்றார்,
பொறியெனும் பெயர ஐவாய்ப்
..பொங்கழல் அரவின் கண்ணே
வெறிபுலம் கன்றி நின்றார்
..வேதனைக் கடலுள் நின்றார். 375 – சீவக சிந்தாமணி
நெறியுடையார் இன்ப நிறைகடல் அடைந்தார்; அதில் வழுவினார் துன்பக் கடலில் விழுந்தார் என்னும் இதனை உணர வேண்டும். ஐம்புலன்களையுடைய உடலை ஐவாய் அரவு என்றது,
விடயங்களில் வெறிமண்டி நெறி கடந்து பொறிவழி ஓடி உழல்பவர் இறுதியில் அடையும் இடர் நிலையை உணர்ந்து உறுதி தெளிந்து உய்ய வேண்டும். அரிய அறிவு படைத்த பயன், உரிய நெறி ஒழுகி உய்தி பெறுதலேயாதலால் மனிதனுக்கு அது இனிய கடமை ஆயது.
செவியறிவுறூஉ மருட்பா
வாழ்த்துமின் தில்லை; நினைமின் மணிமன்றம்:
தாழ்த்துமின் சென்னி தலைவற்கு:- வீழ்த்த
புறநெறி ஆற்றா(து) அறநெறி போற்றி
நெறிநின்(று) ஒழுகுதிர் மன்ற
துறையறி மாந்தர்க்குச் சூழ்கடன் இதுவே. 84 சிதம்பரச் செய்யுட் கோவை
நெறி வழுவாது ஒழுகுவோனே மனிதன்; அவனுக்குத் தெய்வப்பேறு தனி உரிமையாம்; உய்தியும் இன்பமும் ஒருங்கே உளவாம் என இன்னவாறு நூல்கள் பல குறித்துள்ளன.
பாஅல் புளிப்பினும் பகல் இருளினும்
நாஅல் வேதம் நெறி திரியினும். (புறம், 2)
பாலுக்கு இனிமையும் பகலுக்கு ஒளியும் போல் வேதத்திற்கு நெறி தனியுரிமை என்பது இதனால் அறிகின்றோம். நெறியின் சீர்மையும் நிலைமையும் இதனால் தெளிவாகின்றன.
தன்னை உடையானை உயர்ந்த உத்தமன் ஆக்கி நிலையான முத்தியின்பத்தில் உய்த்தருளுதலால் முத்திநெறி, மெய்ந்நெறி, செந்நெறி, நன்னெறி, சன்மார்க்கம் என நெறி நிலவியுள்ளது.
நெறி கேடுகளே நிரம்பியுள்ள இவ்வுலகில் நெறி கோடாமல் நடந்து செல்லும் நீதிமானே நிறை பேரின்பத்தை அடைந்து கொள்கின்றான்.
எண்சீர் விருத்தம்
(காய் 3 மா அரையடிக்கு)
கண்டதெலாம் அநித்தியமே; கேட்டதெலாம் பழுதே;
கற்றதெலாம் பொய்யே!நீர் களித்ததெலாம் வீணே;
உண்டதெலாம் மலமே;உட் கொண்டதெலாம் குறையே;
உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலீரே;
விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க
மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே
எண்டகுசிற் றம்பலத்தே எந்தையருள் அடைமின்
இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே. - அருட்பா
இறைவன் அருள் எய்தும்; பிறவி நீங்கும்; பேரின்பம் வரும் என நெறியின் பயன்களை நினைவுறுத்தி உறுதி நலனை உரிமையுடன் இஃது உணர்த்தியுள்ளமையை ஊன்றி உணர்ந்து கொள்க.
‘நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்’
தமக்கு அருள் புரிய வேண்டும் என்று மாணிக்கவாசகர் உருகியிருக்கிறார். நெறியே பெரியோர்க்கு அரிய நிதியாயுள்ளது.
அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
புள்ளுவர் ஐவர் கள்வர்
..புனத்திடைப் புகுந்து நின்று
துள்ளுவர்; சூறை கொள்வர்;
..தூநெறி விளைய ஒட்டார்:
முள்ளுடை யவர்கள் தம்மை
..முக்கணான் பாத நீழல்
உள்ளிடை மறைந்து நின்றங்(கு)
..உணர்வினால் எய்ய லாமே. 5 - 077 பொது, திருநாவுக்கரசர் தேவாரம், நான்காம் திருமுறை
ஐம்புலன்களாகிய வேடுவர் இடையே புகுந்து அல்லல் புரிதலால் நெறியே செல்ல முடியவில்லை என்று அப்பர் இப்படி அலமந்திருக்கிறார்.
பொறி வழியே புலன் அழிந்து போகாமல், நல்ல நெறி முறையில் நேரே ஒழுகுதலை மேலோர் எவ்வாறு கருதிப் பேணி உறுதி செய்து வந்துள்ளார் என்பதை இவற்றால் உணரலாகும். முன்னோர்களுடைய வாழ்க்கை நியமங்கள் நமக்கு இன்னுயிர்த் துணைகளாய் இசைந்திருக்கின்றன.
Lives of great men all remind us
We can make our lives sublime. - Longfellow
'பெரியாருடைய சரிதங்கள் எல்லாம் நம்முடைய உயிர் வாழ்க்கையை உன்னத நிலையில் உயர்த்தி ஒளி செய்து வர உதவி புரிகின்றன’ என்னும் இது ஈண்டு உணரவுரியது.
உள்ளம் திரியாமை, கள்ளம் புரியாமை நெறி என்றது உள்ளும் புறனும் பரிசுத்தனாய் உத்தம விதிமுறை வழுவாமல் ஒழுகும் வகை தெரிய வந்தது. யாவரும் யாண்டும் நெறி நின்று ஒழுகுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.