காடு காத்திடு
காடுவெட்டி வீடமைத்துக் கச்சிதமாய் வாழ்வதற்குப்
பாடுபடும் மானுடம் பாரினிலே - ஓடும்
நதிமேனி ஊரில் நலியவிட்டப் பின்னால்
பதியமிட நாற்றுண்டோ பார்
*
பார்க்குமெழில் யாவும் பசுமைப் புரட்சியாய்
ஈர்க்குமதற் கேதும் இணையுண்டோ - நீர்க்குடித்து
நின்றாடும் பூந்தோப்பை நீயெடுக்கும் கோடரி
கொன்றழிக்க கூடுமோ கூறு
*
கூறுகெட்ட வாறு குவலயக் காடுகளை
தாறுமாறாய் வீழ்த்தித் தவிப்பதேன் - ஆறுவளம்
காண அடர்வனம் காத்துக் கரைகளில்
நாணலாடச் செய்தல் நன்று
*
நன்றென் றறிந்துமதை நாடா திருந்துவிட்டு
அன்றாடத் தேவைக் கலைவதுமேன் - கன்றொன்று
நாட்டக் கருதிவிடு நன்நீர்க் குறைபோக்கக்
காட்டுக்குன் பேரன்பைக் காட்டு
*
காட்டு விலங்கினம் காடின்றி நாடுவந்து
நாட்டும் பயிரொடு நாட்டமுற்றே - கேட்டை
விளைவிக்கும் காரணி வேறுயா ரென்று
விளையாட்டாய் எண்ணி விடு
*
விடுமுறைக் காலம் வெளியூர்க்குச் சென்று
கடுங்கோடை காலங் கழிப்பாய் - நடுவோம்
மரமெனும் நாட்டம் மனத்திலா நீயே
வரமாய் மரம்நாடு வாய்
*
வாய்நீளங் கொண்டு வசைபாடு முன்னாலே
நாய்வால் நிமிராதே நம்புவாய் - ஆய்வுசெய்
வெப்ப மயமாகி வேரழிந்து விட்டாலோ
தப்ப வழியேது தான்
*
தான்றோன்றி யாகித் தரிக்கும் மரங்களால்
தேன்வண்டு மிங்கின்றித் தீர்வதோ - மான்வாழக்
காட்டை மனமுவந்துக் காப்பாற்றி விட்டாலே
நீட்டு மதுவுனக்கு நீர்
*
நீரில்லை என்றே நெடுந்தூரம் செல்வாரிப்
பாரிலுண் டென்றெண்ணிப் பாராயோ - நேரிழையர்
தண்ணீர்க் குடம்சுமந்து தாகத் துடன்வரக்
கண்ணீர் விடும்நிலை காண்
*
காண்பவை யாவிலும் கானல்நீ ராகிட
வேண்டியே நீசெயும் காடழிப்பு - நீண்டிடா
வண்ணம் நிலையாக வேர்விடும் கன்றூன்றிக்
கண்ணெனக் காத்திடு காடு
*