பிக்பாஸ் - வனிதாக்கள் இருக்கும் குடும்பம்

பிக்பாஸ் வீட்டில் கடந்த மூன்று நாட்களாகவே ஏகப்பட்ட சண்டைகள்... எல்லாவற்றிற்கும் ஒரே காரணம் வனிதா... வனிதா... வனிதா... பெத்த அப்பனையே தெருவுக்கு இழுத்தவர், யாரோ பதினைந்து பேர் இருக்கும் இடத்தில் சொல்லவா வேண்டும். எல்லாப் பிரச்சினைக்கும் தொடக்கப்புள்ளி எங்கிருந்தாலும் அது வெடித்துக் கிளம்புவது இவரிடமிருந்துதான். இவரின் கைப்பாவைகளாக ஷெரின், அபிராமி, சாக்சி, ரேஷ்மா போன்றோருடன் கவினும் முகனும் கூட இருக்கிறார்கள்.



முகன் தன்னிடம் பேசாதது குறித்து மீரா பேசிக் கொண்டிருந்ததைத் தவறாக கேட்டுவிட்டு... அபிராமியிடம் பேசாதே எனச் சொன்னதாக சாக்சி, வனிதாவிடம் சொல்ல, எப்படா எது சிக்கும் எனக் காத்திருக்கும் பருந்து வனிதா சும்மா விடுவாரா... மழையில் நனைந்த விறகென்றாலும் கண்ணெரிய ஊதாங்குழாய் வைத்து ஊதி... ஊதி... பற்றவைப்பது போல் இங்கிட்டும் அங்கிட்டுமாக சுற்றிச் சுற்றி அடித்து மிகப்பெரிய பிரச்சினை ஆக்கிவிட்டார்.



முகன் அப்படிப் பேசவில்லை என்று எடுத்துச் சொன்னதும் எப்படியும் சண்டை போட வைக்க வேண்டும் என்பதால் சுற்றி வளைத்துச் சொல்லியிருக்கிறாள்... உனக்குத்தான் புரியலை எனச் சொல்லி, சாக்சி மாட்டிக் கொள்ளாமல் முகனை ஏற்றிவிட, அவனோ நேராப் போயி மீராவிடம் நாம் அபிராமி பற்றி எதுவும் பேசலையில்ல என்றதும் நாம் நம்மைப் பற்றித்தான் பேசினோம் யாரைப் பற்றியும் பேசலை என்று சொன்னதும் அதை அவங்ககிட்ட சொல்லேன் என்றதும் நான் எதுக்கு விளக்கம் கொடுக்கணும் என மீரா கத்திவிட்டுச் செல்ல, முகனும் சூடாகி வேகமாகக் கத்துகிறான்... சிறுவயதில் மூளை பிசகாகியிருந்தேன் என்று அவன் சொல்லியிருப்பதால் அப்படியேதும் மீண்டும் ஆகிவிட்டதோ என்பதாய் தோன்ற வைத்த கத்தல் அது.



முகனிடம் கத்தாதே... இங்க நாம வந்திருக்கது போட்டிக்கு.... எதுக்கு கத்துறே... ரெஸ்ட் எடு என்று சேரன் சொல்ல, வனிதாவோ அடுத்த பாய்ச்சலுக்கு ரெடியாகி, கத்தாதேன்னு சொல்ல இங்க யாருக்கும் உரிமையில்லை... அவளை அடிச்சிருந்தியன்னா நானே உன் சட்டையைப் பிடிச்சிருப்பேன்... ஆனா நீ செய்யலை... உன்னை கத்தாதேன்னு சொல்ல அவரு யாரு... என முகனை ஏற்றிவிட்டார்.



நாங்கள் நண்பர்கள் என அபிராமியும் முகனும் எல்லாரையும் லிவிங்க் ஏரியாவில் வைத்து விளக்கம் கொடுக்கிறார். மீரா படுக்கை அறையில் இருப்பதால் கத்திச் சொல்கிறார்கள். அந்தப் பிரச்சினை சுற்றி மதுமிதா மீது மய்யம் கொள்ள, மிகப்பெரிய பிரச்சினை ஷெரினுக்கும் மதுவுக்கும்... வனிதாவின் மற்றொரு வடிவம்தான் ஷெரின். மதுவும் விடுவதாய் இல்லை... அந்தக் குணம் ரொம்பப் பிடித்திருந்தது. இதற்கிடையே இடச்செருகலாய் லாஸ்லியா, மதுவுடனும் மீராவுடனும் பேசுவது பிடிக்காததால் வனிதா குழு அவரையும் சீண்ட, கோபித்துக் கொண்டு சாப்பிடாமல் கோபத்துடன் பாத்ரூம் போக, கவின் பின்னாலேயே ஓடி சமாதானம் செய்கிறான். தர்ஷனும் கூட.



லாஸ்லியா திரும்பி வந்த போது மது என்னப்பா என்னாச்சு என ஒன்றும் தெரியாதது போல் கேட்க, மது நீ போய் படு... ரெஸ்ட் எடு... எதாயிருந்தாலும் காலையில பேசிக்கலாம் எனச் சேரன் அந்தச் சூழலில் லாஸ்லியாவை பாதுகாக்கும் பொருட்டு மதுவை விரட்டியதில் ஒரு அப்பனின் அன்பு தெரிந்தது. லாஸ்லியாவின் கை பிடித்து என்னடா என்று கேட்பதிலும், அழுபவளை அணைத்து ஆதரவாய் தட்டிக் கொடுப்பதிலும் உண்மையான தந்தைப் பாசம் தெரிகிறது... நடிப்பில்லை... நேசத்துக்குரியவர் சேரன்.



அதன் பின்னான சூறாவளி சுற்றிச் சுற்றி அடித்தாலும் சாக்சிக்கு கவினை லவ் பண்ண வேண்டும் அதற்கான முயற்சிகளில் கூட இருப்பவன் முகன்... ஒரு வழியாக கவினும் சாக்சியின் பிடிக்குள் நுழைய ஆரம்பித்துவிட்டான். முகன் சாக்சியிடம் செய்யும் சேட்டைகள் கவினுக்குப் பிடிக்கவில்லை. அபிராமி சாக்சிக்காக விட்டுக் கொடுக்கிறார். லாஸ்லியாவுக்கும் கவின் மீது ஒருதலை காதல் இருப்பது போல் தெரிகிறது. கவின் கூட லாஸ்லியாவுக்கும் கம்பெனி கொடுப்பான் போல்தான் தெரிகிறது.



பெண்களைப் போல் நடிக்க வேண்டும் என்ற போட்டியில் சேரன் தவிர்த்து மற்றவர்கள் பெண்களின் உடைகளை வாங்கிப் போட்டுக் கொண்டு நடித்தார்கள். சாண்டி - மீரா, கவின்-ஷெரின், தர்ஷன் - அபிராமி, சரவணன் - பாத்திமா இப்படியாக, சரவணன் பாத்திமாவைப் போல் நடந்தது அழகு. தர்ஷன் செம... கவினும் அருமை... சாண்டி கலக்கல்... கவின் குட்டியூண்டு உடையைப் போட்டுக் கொண்டு பெண்களின் முன் என் நெஞ்சுலே இருந்து தொடையெல்லாம் முடியா இருக்குன்னு போய் நின்னது ஆபாசம்... அவர்களும் அங்கிட்டுப் போ... அங்கிட்டுப் போ என்றாலும் ரசிக்கத்தான் செய்தார்கள்.



இந்தவாரம் துப்புறவு குழுவில் இருக்கும் சேரன் சரியாக சுத்தம் செய்யவில்லை என வீட்டின் தலைவரான மோகனிடம் சொல்லி, அவரைக் கூட்டிக் கொண்டு வந்து பேசுகிறார் வனிதா, அவரிடம் சுத்தம் பண்ணியாச்சு என்பதை விளக்கி, அதன் பின் மோகனை பிடித்து ஒரு ஏறு ஏறுகிறார் சேரன். சபாஷ் போட வைத்தது. தலைவர் பொண்டுகசட்டியாக இருப்பது தவறுதானே. உடனே மோகன் நானாவே வந்தேன் என்று சொல்லிவிட்டு வனிதாவிடம் பத்தவைத்து விடுகிறார். உடனே வந்த சம்பந்தமில்லாமல் பேசுகிறார். சேரன் கண்டு கொள்ளவில்லை.



மோகனைப் பொறுத்தவரை வனிதாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார். பாத்திமா பாபு கூட அது தெரிந்து சற்றே ஒதுங்கித்தான் இருக்கிறார். இந்த வார பட்ஜெட்டுக்கான போட்டியில் மதுவும் சாண்டியும் சேற்றுக்குள் கிடக்கும் காயின்களை எடுக்கிறார்கள். அதிக மதிப்பெண் கிடைக்கவில்லை என்றாலும் அதில் இறங்கி தேடியதற்காகப் பாராட்டலாம்.



எனக்கு ஓட்ஸ் பிடிக்காது... ராத்திரி மிச்சம் இருக்கும் கஞ்சியை பிரிட்ஜில் வையுங்க சாப்பிட்டுக்கிறேன் என்று மது சொன்னதும் ரேஷ்மா வெடிக்கிறார்... எல்லாருக்கும் தனியாச் சமைக்க முடியாது... ஆ...ஊ... எனக் கத்த, அபிராமி, வனிதாவெல்லாம் ஆஹா... ஓட்ஸ் சூப்பர்... எனக்கு ரொம்பப் பிடிக்கும்... எனச் சத்தமாகச் சொல்லி வெறுப்பேற்றுபவதுடன் கஞ்சியா... அதுவும் காலையிலேயே கருமம் என்பதாய் பேசுகிறார்கள். கஞ்சி பிடிக்கும் என்றால் தப்பா... தலைவர் மோகனிடம் சொல்ல, சரிப்பா... சொல்றேன் என்பவர் வனிதா அணியிடம் வத்தி வைத்து புறம் பேசுகிறார். என்ன மனிதர் இவர்... ஆண் எப்படி இப்படி புறம் பேசும் மனிதராக இருக்கிறார்.



மீராவை வெளியேற்றுவது போல் நடிக்க வேண்டும் என்ற ஒரு போட்டி, எல்லாரும் மதுவைத்தான் சொல்ல நினைத்தோம் ஆனா ஒருமித்த முடிவாய் மீராவை எடுத்தோம் எனப் பேச, பாத்திமா பாபு சற்றே கூடுதலாய் மனதில் உள்ளதைச் சொல்லும் விதமாக நீ தேவதை எனச் சொல்லி கட்டி அழுதது வனிதா குழுவுக்குப் பிடிக்கலை... ஆஹா பாத்திமா சிக்ஸ் அடிக்கிறாரே... விடாதே... நாம டக் அவுட் ஆகிடுவோம் போல... திரைக்கதையை மாற்று... அடுத்த ஆட்டத்தில் நாம்தான் அடித்து ஆடணும் என முடிவு செய்து பாத்திமாவுடன் மோத ஆரம்பிக்கிறார். உங்களுக்கு என்ன தோணுதோ அதையே நான் பேசணும்ன்னு நினைக்காதீங்க... எனக்கு என்ன தோணுதோ அதைத்தான் பேசுவேன் என பாத்திமா சொல்லிவிடுகிறார்.



வனிதாவுக்கு பாத்திமா, மீரா, மது, சேரன் என ஒரு குழு உதித்திருப்பதை உடைக்க வேண்டும். மீராவை மெல்லப் பேசி... அப்படியில்லடா... இப்படியா... யாரு எப்படின்னு பாருடாவென கட்டி அணைத்து தன் பக்கம் இழுக்கிறார். மீராவும் உருகிவிடுகிறார். இந்த உருகலில் அபிராமிக்கு வருத்தம்... அதனால் வனிதாவுடன் சின்ன மோதல்... இந்தக் கலவரத்திலும் கூட நான் நாமினேசன்ல இருக்கேன் அதைப் பற்றி அவ கவலைப்படவேயில்லை என அபிராமி மீது சாக்சியின் குற்றச்சாட்டு.மீராவுக்கான வலையை சரியாகப் பிண்ணியிருக்கிறது வனிதா குழு.



மோகன் போல் நடித்துக்காட்டிய மது, முதல் நாள் நான் சத்தமாகப் பேசும் போது மது மற்றவங்க தூங்குறாங்க... காலையில பேசலாம் என்றவர் மறுநாள் நான் தூங்கும் போது யாருக்கோ மாத்திரை கிடைத்ததற்கு நானே காரணம் என சத்தமாய் சிரித்து ஆர்ப்பாட்டம் பண்ணினான். அது என்ன மனநிலை என்பதாய் சொன்னதும் சிரித்து ஏற்பது போல் ஏற்றுக் கொண்டு வனிதா குழுவிடம் என்னை வச்சிச் செஞ்சிட்டா என்று புலம்புகிறார். அவர் முகத்துக்கு முன்தானே நடித்தார். இந்த மனிதர்தான் ஆபத்தானவர்.



அடுத்து இந்த வாரப் போட்டியின் தொடர்ச்சியாய் சாப்பாட்டுப் போட்டி முகன், பாத்திமா, ரேஷ்மா முயற்சித்துச் சாப்பிட்டாலும் அதிக மதிப்பெண் பெறவில்லை.



சாண்டிக்கு பிறந்தநாள் மகளின் போட்டோ வீடியோ... குரல் என பிக்பாஸ் வாழ்த்தைப் பரிமாற சாண்டி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினார். வருடக்கணக்கில் குடும்பத்தை விட்டுவிட்டு தவிக்கும் இந்த வாழ்வை அனுபவிப்பவர்களுக்கு ஒரு வார பிரிவுக்கு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுதல் என்பது வேடிக்கையாகத்தான் இருந்தது. எல்லாரும் தேம்பித் தேம்பி அழுததெல்லாம் இவர்கள் நடிகர்கள்... சாமானியர்கள் அல்ல என்பதையே உணர்த்தியது.



இடையில் வனிதாவின் குழந்தைப் பிரச்சினைக்காக போலீஸ் விசாரணை...



மொத்தத்தில் இந்த வாரம் வனிதாவின் ஆட்டம் சூடுபறந்தது.... என்ன பொம்பளை இவ என எல்லாரையும் சொல்ல வைத்துவிட்டார். அதுவே பிக்பாஸுக்கு அல்வா சாப்பிட்டது மாதிரி... இனி வனிதா வெளியேற்றவே படமாட்டார்... அடுத்தடுத்த பிரச்சினைகளுக்கு இவர்தானே விஸ்தாரமான களம் அமைக்கிறார்.



லாஸ்லியா இனி மெல்ல ஒதுக்கப்படலாம்.



கவின் - சாக்சியின் காதல் தீவிரமாகலாம்.



வனிதா - பாத்திமா ( தொடரும் பட்சத்தில்) சண்டை தீவிரமாகலாம்.



அபிராமி - சாக்சி, ஷெரின், வனிதாவுடன் முரண்படலாம்.



மீரா - வனிதா பாசமழை பொழியலாம்.



மோகன் வைத்யா பிரச்சினைகளின் தூணாய் இருக்கலாம்.



அமைதியான சேரன் வெடிக்கலாம்... அல்லது அழலாம்.



இப்படி நிறைய '...லாம்' களை பிக்பாஸ் இல்லம் வரும் வாரங்களில் சந்திக்கும்.



இன்று கமல் குறும்படம் போடுவார் என எதிர்பார்க்கலாம்.

-'பரிவை' சே.குமார்.

எழுதியவர் : சே.குமார் (6-Jul-19, 7:00 pm)
சேர்த்தது : சே.குமார்
பார்வை : 116

மேலே