தண்ணீர்மை தாங்கி இயங்கும் தகவுடையார் ஓங்கி ஒளிரும் உயர்ந்து - நீர்மை, தருமதீபிகை 322
நேரிசை வெண்பா
உண்ணீர்போல் எவ்வுயிர்க்கும் யாண்டும் உதவியாய்
ஒண்ணீர்மை உள்ளே உறவமைந்து - தண்ணீர்மை
தாங்கி இயங்கும் தகவுடையார் தம்புகழ்மேல்
ஓங்கி ஒளிரும் உயர்ந்து. 322
- நீர்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
உண்ணும் நீர் போல் யாண்டும் எவ்வுயிர்க்கும் உதவியாய் அமர்ந்து ஒள்ளிய தன்மை அமைந்து என்றும் குளிர்ந்த நீர்மையாளராய் இனிது ஒழுகி வரும் புனிதமுடையார் புகழ் வான ஒளிபோல் உலகமெங்கும் ஓங்கி ஒளிரும் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், நீரின் இயல்பாய் ஆருயிர்க்கு உதவுக என்கின்றது.
உயிர்களுக்குப் பயன்படும் அளவே பொருள்களுக்கு மதிப்பும், மாண்பும், மகிமையும், பிரியமும் உளவாகின்றன. இதம் உடையன இனியனவாய்த் தனி உயர்வு அடைகின்றன. இதம் இல்லாதன இழிவாய்க் கழிந்து எளிதாய் ஒழிந்து போகின்றன.
இதமாய் உதவி புரிவது தெய்வ குணமாதலால் உபகாரி தெய்வீக மனிதனாய்ச் சிறந்து திகழ்கின்றான்.
அந்த உதவி நலங்களையும் இதங்களின் விதங்களையும் தெளிவாக விளக்குதற்கு ‘உண்நீர்’ இங்கே உவமையாய் வந்தது.
தண்ணீர் உயிர்களுக்குப் புரிந்துவரும் நன்மைகளால் அது அமுதம் எனவும், தெய்வம் எனவும் புகழ்ந்து போற்றப்படுகின்றது. பேருபகாரிகளை நீரோடு நேர் வைத்து நூலோர் துதிக்கின்றனர்.
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. 215 ஒப்புரவறிதல்
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
ஊருணி நிறையவும், உதவும் மாடுயர்
பார்கெழு பயன்மரம் பழுத்தற்(று) ஆகவும்,
கார்மழை பொழியவும், கழனி பாய்நதி
வார்புனல் பெருகவும், மறுக்கின் றார்கள்யார்? 81 மந்திரப் படலம், இராமாயணம்
இராமன் அரசு பெறும் தகைமையைக் குறித்து இந்த நான்கு உவமைகள் வந்திருக்கின்றன. ஊருணி நீர் நிறைவது, இனிய மரம் கனிகள் கனிவது, மேகம் மழை பொழிவது, நதி புனல் பெருகுவது போல் அக் குலமகன் அதிபதியாய் வருவது என மதி மந்திரிகள் இவ்வாறு மகிழ்ந்து மொழிந்துள்ளனர்.
உண்ணும் நீரினும், உயிரினும் அவனையே உவப்பார் என வசிட்டரும் அப் புண்ணியனை இப்படிப் போற்றி உரைத்திருக்கிறார். இனிய பண்பினை எவரும் எண்ணி இன்புறுகின்றனர். இதனால் இராமனது நீர்மையும், நிலைமையும் நிலை தெரியலாகும்.
குண நலனுடைய மனிதனை உலகம் உவந்து தொழுது புகழ்ந்து போற்றுகின்றது. மன்னுயிர்க்கு இதம் செய்யத் தன் உயிர் உயர்ந்து தனி மகிமை அடைகின்றது.
தண் நீர்மை தாங்கி - இனிய பண்புகளைத் தனி உரிமையாய்க் கொண்டு. இனிமையும் இதமும் மனித வசியங்களாகின்றன.
நீர் பலவகை நிலைகளில் நின்று எவ்வுயிர்க்கும் நன்கு பயன்படுகின்றது. அழுக்கு நீங்கக் குளிக்க உதவுகின்றது; உணவுகளைச் சமைத்து உண்ண உதவுகின்றது; பருகுதற்கு இனிய பானம் ஆகின்றது; இவ்வாறு பல்லாற்றானும் நலம் பயந்து வருதலால் எல்லார்க்கும் இதம் புரியும் நல்லார்க்கு உவமானமாக அதனை ஈண்டு எடுத்துக் காட்ட நேர்ந்தது.
நன்மை புரிய மனிதன் தன்மை உயர்கின்றது, அவ்வுயர்ச்சியே பிறவிப் பேறாம்; இவ்வுண்மையை உணர்ந்து அதனை உறுதி செய்து கொள்ளுக. எவ்வழியும் இனியனாய் இதம் புரிந்தருளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.