இழிநிலையார்க்கு இல்லையோ ஒச்சம் அறியும் உணர்வு - நெறி, தருமதீபிகை 332
நேரிசை வெண்பா
உலகம் அறிய உவந்து மணந்த
குலமனையாள் உள்ளம் குலையப் - பலமனையை
இச்சித்(து) உழலும் இழிநிலையார்க்(கு) இல்லையோ
ஒச்சம் அறியும் உணர்வு. 332
- நெறி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
உலகம் அறியத் தான் விரும்பி மணந்து கொண்ட மனையாள் மனம் வருந்தி நைய, அயலார் மனைவியை விரும்பியலையும் கொச்சை மாக்களுக்கு அப்பழி நிலையை உணர்ந்து விழி தெளிந்து திருந்தி உய்யும் வழி யாதும் இல்லையோ? என்கிறார் கவிராச பண்டிதர்.
நெறியின் நீர்மை சீர்மைகளை முன்னர் உணர்ந்தோம்; நெறிகேடு இன்னதென்பதை இப்பாடல் உணர்த்துகிறது.
மனித சமூகம் சிறந்த பகுத்தறிவு உடையது; பலவகையான வசதிகளைத் தன் வாழ்க்கைக்கு நலமாக அமைத்துக் கொண்டுள்ளது. அமைதிகள் யாவும் வரம்பமைந்து வரன்முறையாக அறநெறி தழுவி வந்திருக்கின்றன. அவ்வரவில் திருமணம் என்பது வாழ்வின் பெருமணமாய்த் தலைசிறந்து விளங்குகின்றது.
ஆடவன் பருவம் அடைந்தவுடனே தனக்கு உரிமையான ஒரு பருவ மங்கையை மணந்து கொள்கின்றான். அதிலிருந்துதான் மனித வாழ்க்கை இனிது தொடங்குகின்றது.
கண்டபடி கலந்து களிப்பது மிருகங்களின் நிலையாதலால் அங்ஙனம் இழிந்து படாமல் கொண்ட மனைவி ஒருத்தியைக் கூடி மகிழ்ந்து மனிதன் பீடு பெறலாயினான். அந்த விதிமுறையின்படி ஒழுகி வருவதே மதி நலமுடைய மாந்தர் மரபாய் மருவியுள்ளது,
உலகம் அறிய உவந்து மணந்த குலமனையாள் என்றது சதி, பதிகளின் நிலைமை தெரிய வந்தது. ஊரும் நாடும் அறிய அக்னி சாட்சியாகப் பெற்றோரும் மற்றோரும் குழுமிய கூட்டத்தில் விதி முறையே மணந்து, மனைவி கணவன் என்னும் உரிமையுடையராய்த் தம்பதிகள் இன்பநிலை எய்துகின்றனர்.
இங்ஙனம் நெறியே மணந்த மனையாளைத் தனியே விட்டு அயலானுடைய மனைவியை நச்சிச் செல்வது நெறி கேடாயது.
பழி பாவங்கள் படர்ந்து அழி துயர்கள் தொடர்ந்து வரும் அந்த இழிநிலையில் வீழ்ந்தார் இழி நிலையார் என நேர்ந்தார்.
பிறன் இல்லாளை இச்சித்து உழல்வதால் விளையும் இழி துயர்களுக்கு இரங்கி ’ஒச்சம் அறியும் உணர்வு இல்லையோ?’ என நெஞ்சோடு உள்ளுற உளைந்து வினவியது.
அயல் மனையை விழைந்து நுழையின், மானம் மரியாதைகள் அழிந்து படுகின்றன; ஈனமும், வசையும், இடர்களும், துயர்களும் எழுந்து அடர்கின்றன. சிறிது அறிவு இருந்தாலும் இந்தப் பழி கேடுகளில் பாழாய் வீழானே! என்று பரிகபித்து நொந்தபடியிது.
ஒச்சம் அறியும் உணர்வு இல்லாமல் போயது பொல்லாத பாவமேயாம். ஒச்சம் - பழுது, குறைவு, குற்றம். பகை, பழி, பாவம், அச்சம் முதலிய இழிவுகள் பல விளைவதையும் உணராமல் அயல் மனையுள் மயலோடு நுழைவதால் முழுமூடன் ஆயினான்.
'தன்மனை யாளைத் தனிமனை இருத்திப்
பிறர்மனைக்(கு) ஏகும் பேதையும் பதரே. - நறுந்தொகை
பிறன்மனை விழைபவனை அவன் அடையும் பழியும் ஏதமும் கருதி பேதை, பதர் என இங்ஙனம் இளிவாக வைதது.
குல மனையாள் உள்ளம் குலைய என்றது, அவளது பரிதாப நிலை கருத வந்தது. இவன் நெறி அழிந்தது போல் அவள் அழியாமையால் குல மனையாள் என நின்றாள். பழி வழியில் இழியும்படி இவன் வழி காட்டியும் அவள் இழியாது ஒளியுடன் உறைந்திருக்கிறாள்.
அத்தகைய உத்தமி உரிய போகத்தை நினைந்து தனியே தவித்திருக்க விட்டு ஒருவன் பிறன் மனையை விழைந்து போவது எவ்வளவு பாதகம்! காதல் மனைவிக்கு ஏதம் புரிவது காதக மாயது.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
காதலாள் கரிந்து நையக்
..கடியவே கனைந்து கன்றி
ஏதிலான் தாரம் நம்பி
..எளிதென இறந்த பாவத்(து)
ஊதுலை உருக வெந்த
..ஒள்அழல் செப்புப் பாவை
ஆ!தகா(து) என்னப் புல்லி
..அலறுமால் யானை வேந்தே. 2769 நரக கதித் துன்பம், முத்தி இலம்பகம், சீவக சிந்தாமணி
எழுசீர் விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
வம்புலாம் கூந்தல் மனைவியைத் துறந்து
..பிறர்பொருள் தாரமென்(று) இவற்றை
நம்பினர் இறந்தால் எமன்தமர் பற்றி
..ஏற்றிவைத்(து) எரிஎழு கின்ற
செம்பினால் இயன்ற பாவையைப் பாவீ!
..தழுவென மொழிவதற்(கு) அஞ்சி
நம்பனே! வந்துன் திருவடி அடைந்தேன்
..நைமிசா ரணியத்துள் எந்தாய்! - திருமொழி, 1-6-4
இந்த இாண்டு பாசுரங்களும் ஒருங்கே படித்து ஈண்டு ஊன்றி உணரவுரியன. மையல் விளைவு வெய்ய துயரமாய் விரிந்தது.
தன் மனைவி தனியே வருந்த அயல் மனைவியை மருவி மகிழ்ந்தவன் இறந்து போனால், அந்த உயிர் யாதனா சரீரத்தை அடைந்து நரகத்தில் படுகின்ற துயரங்களை இவை வருணித்திருக்கின்றன.
இங்கே தான் கலந்து களித்தவளைப் போல் செம்பினால் ஒரு உருவம் செய்து, அதனை நெருப்பில் பழுக்கக் காய்ச்சி அனல் வீசுகின்ற அச் செப்புப் பாவையைத் தழுவும்படி அயலவளைத் தோய்ந்தவனை எமபடர்கள் இரும்புச் சவுக்கால் அடித்துத் தள்ளுகின்றார்கள்;
இவன் அதனை அணுக அஞ்சித் துடித்து அலறுகின்றான்; அவர் எற்றி மிதித்து, ’அன்று விழைந்து தழுவி நுகர்ந்து களித்தாயே! இன்று என்ன கொள்ளை? பாவி! தழுவு! தழுவு! என இழி மொழிகள் பேசி ஏசி எள்ளிப் பழித்து துள்ளித் துடிக்க அடிக்கின்றார்கள் என்றால் பிறர்மனை விழைவால் விளையும் துயர்கள் எவ்வளவு கொடியன!
இந்த நரக வேதனையை எண்ணும் பொழுது எவன் நெஞ்சம்தான் கலங்காது?
துரியோதனன் மகன் பெயர் இலக்கண குமரனைப் பதினோராம் நாள் போரில் அபிமன்யு வென்று பிடித்துத் தன் தேரில் கட்டி விட்டான். அதனை நினைத்து துரியோதனன் வருந்தினான்.
சேனாதிபதியான துரோணனிடம் பரிவுடன் கூறினான். அந்த அவமானத்திற்குப் பதிலாக மறுநாட் போரில் தருமனைப் பற்றித் தன் தேரில் சிறிது போதேனும் பிணித்து விடவேண்டும் என்று வலிந்து வற்புறுத்தினான். அது முடியாத காரியம் என்று தானைத் தலைவன் தடுத்தும் மன்னன் கேட்கவில்லை. இறுதியில் ஓர் உபாயம் சூழ்ந்து உறுதி மொழிந்தான்.
முன்னே விசயன், பின்னே வீமன், வலம் இடங்களில் நகுல சகாதேவர் என்னும் இன்ன பாதுகாவலோடு தருமன் மன்னியுள்ளான். முன்னும் பின்னும் உள்ள அந்த வீரர் இருவரையும் சிறிது பொழுது அருகு அணுகாவகை தடுத்து நிறுத்தினால் நான் பிடித்துக் கொடுக்கிறேன் என்று அதி வினையமாய் அம்மதிமான் உரைத்தான்.
அந்த உரையைக் கேட்ட அரவக் கொடியோன், அயல் இருந்த சிற்றரசர்களை நோக்கினான். அவருள் திகத்த தேசத்தவர் எழுந்து அவ்வுதவியைச் செய்வதாகச் சபதமுடன் உரைத்தார். ஆணையிட்டு அன்று அவர் சொன்னது அயலே வருவது.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)
மறனில் சிறந்த புயவலியால்
..வரைபோன்(று) அனிலன் மைந்தனெனப்
புறன்நிற் பானைத் தம்முனிடை
..போகா வண்ணம் தகைந்திலமேல்,
அறனின் கொண்ட தன்மனையாள்
..அமளித் தலத்தின் அழுதிரங்க,
பிறனில் தேடும் பெரும்பாவி
..பெறும்பே(று) எமக்கும் பேறென்றார். - பாரதம், பதினோராம் போர், 42
வீரசபதமாய் வந்துள்ள இச்சூள்மொழியின் ஆழ்பொருளை ஆய்ந்து கொள்க. பிறர்மனை துயத்தல் இவ்வாறு பேரிழிவாய் எவ்வழியும் பெருங்கேடு விளைத்தலால் அது பெரும் பாவமென நேர்ந்தது. இந்தப் பழிபாதகத்தைச் செய்து படுபாதகன்.ஆகாதே.
'தருமனை அணுகாமல் வீமனை அமரில் யாம் தடுத்து நிறுத்தோமாயின், தன் மனையாளை அமளியில் அழுது இரங்க விட்டுப் பிறன் மனையாளைத் தேடிப் போகும் அப் பெரும்பாவி அடையும் கதியை நாங்கள் அடைவோமாக” எனத் தம் ஆண்மை தோன்ற அவ்வீரர் சபதம் கூறியிருத்தலால், நெறி கேடான இதனை மானமுடையவர் எவ்வளவு ஈனமாக எண்ணியுள்ளனர் என்பது இனிது வெளியாயது. ஆகவே அதன் தீமை தெளிவாய் நின்றது.
'ஒல்லா முயக்கிடைக் குழைக என்தாரே (புறம், 78)
போரில் இன்று பகைவரை நான் நேரில் வெல்லேனாயின், அயலாளை முயங்கிய பழியாளனாய் இழிவேனாக எனச் சோழன் நலங்கிள்ளி இங்ஙனம் ஆணை கூறியுள்ளான்.
'பிறர்மனை அஞ்சுமின், அறமனை காமின். (சிலப்பதிகாரம்) என்னும் உறுதி மொழிகளை உணர்ந்து ஒழுகுக. கண்டவர் எவரையும் காதலியாதே; கொண்ட மனைவியோடு கூடி வாழுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.