செல்வ நிலையாமை 4 - கலி விருத்தம் – வளையாபதி 38

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

ஈண்டல் அரிதாய்க் கெடுதல் எளிதாகி
நாண்டல் சிறிதாய் நடுக்கம் பலதரூஉம்
மாண்பில் இயற்கை மருவில் அரும்பொருளை
வேண்டா(து) ஒழிந்தார் விறலோ விழுமிதே. 38 வளையாபதி

பொருளுரை:

உழைத்து சம்பாதித்து வந்து சேரும் பொருள் மிகவும் அரியதாகி, சேர்த்த பொருள் அழிந்து போவது மிகவும் எளியது ஆகி, நிரந்தரமாய் தக்க வைத்துக் கொள்வதும் அரிதாகி பலவேறு துன்பங்களையும் தருகின்ற மாட்சிமையில்லாத இயல்புடைய பொருத்தமற்ற பெறுதற்கரிய இவ்வுலகப் பொருள்களை விரும்பாது துறந்த சான்றோருடைய வெற்றியே உலகில் பெறக் கிடைக்கும் வெற்றிகளுள் தலைசிறந்த வெற்றி எனப்படுகிறது.

விளக்கம்:

ஈண்டல் - ஓரிடத்தே குவிதல், நாட்டல் - நிலைநிறுத்துதல்

நாட்டல் (நிரந்தரமாய் தக்க வைத்துக் கொள்வது) என்றது எதுகை நோக்கி நாண்டல் என மெலிந்து நின்றது..

மருவு - பொருந்துதல். விறல் - வெற்றி.

பொறிகளை வெல்லுதலே வெற்றிகளில் தலைசிறந்த வெற்றியாதலின். பொருள்களிடத்து பற்றொழிந்து துறந்தார் விறலோ விழுமிது என்றார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Jul-19, 10:03 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 54

சிறந்த கட்டுரைகள்

மேலே