செல்வ நிலையாமை 5 - கலி விருத்தம் - வளையாபதி 39

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

இல்லெனின் வாழ்க்கையும் இல்லைஉண் டாய்விடின்
கொல்வர் கயவர் கொளப்பட்டும் வீடுவர்
இல்லைஉண் டாய்விடின் இம்மை மறுமைக்கும்
புல்லென்று காட்டும் புணர்வதும் அன்றே. 39 வளையாபதி

பொருளுரை:

இவ்வுலகில் ஒருவனுக்குப் பொருள் இல்லையானால் அவனுக்கு நல்வாழ்க்கையும் இல்லை என்றாகி விடும்.

மற்றுப் பொருள் மிகுதியாய் இருந்தாலும் கள்வர் முதலிய கொடியவர்கள் அதனைக் கைப்பற்றும் பொருட்டு அப்பொருளுடையவனைக் கொன்று விடுவர்.

கொல்லாமல் பொருளை மட்டும் கவர்ந்து கொண்டாலும் பொருளை வைத்திருந்தோர் ஏக்கத்தால் தாமே உயிர் நீப்பர்.

அது மட்டுமல்லாது ஒருவனுக்குப் பொருள் இல்லாமையாகிய வறுமையுண்டாகி விட்டாலோ இம்மையினும் மறுமையினும் அவ்வறியவனுடைய வாழ்க்கை பயனற்றதாய்ப் பொலிவிழந்து காணப்படும்.

அத்தகைய பொருளும் ஒருவன் விரும்பிய பொழுது அவனிடம் வந்து சேர்வதுமில்லை.

ஆகவே இத்தகைய பொருளின் மீது பற்று வைக்காமல் துறந்து போவதே சிறப்பு எனப்படுகிறது.

பொருளின் மீது ஆசையைத் துறப்போர்க்கு சுவர்க்கம் உண்டாவது உறுதி என்பதாம்.

விளக்கம்:

பொருளில்லை என்றால் வாழ்க்கை இல்லை என்பதனை,

அருளில்லார்க்(கு) அவ்வுலகம் இல்லை; பொருளில்லார்க்(கு)
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. 247 அருளுடைமை

எனப்படும் குறளால் உணரலாம்.

பொருளுரை:

பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலக வாழ்க்கை இல்லாதது போல, உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு மேல் உலக இன்ப வாழ்க்கை இல்லையாம்.

பொருளுடையார் கள்வர் முதலியோரால் கொலையுண்ணலும் பொருளையிழந்த பொழுது தாமே ஏங்கி உயிர் விடுதலும் உலகியலாகும்.

வறுமையுடையோர் உணவின்மை முதலியவற்றால் துன்புறுதலும், அறம் முதலிய செயல்கள் செய்ய இயலாமையால் துறக்கம் புகமாட்டார்கள் என்பதை,

இன்மையின் இன்னாத (தி)யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது. 1041 நல்குரவு

பொருளுரை:

வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.

எனவும்,

இன்மை எனஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும். 1042 நல்குரவு

பொருளுரை:

இல்லாமை என்ற ஒரு பாவி ஒருவனிடத்தில் சேர்ந்தால், அவன் பிறர்க்குக் கொடுக்க இல்லாதவன் ஆவதால் அவனுக்கு மறுமை இன்பமும் இல்லை; தானே அனுபவிக்க ஏதும் இல்லாததால் இம்மை இன்பமும் இல்லை.

எனவும் மேற்கூறிய திருக்குறள்களால் உணர வேண்டும்.

ஈதல் முதலிய நல்லறம் பல செய்தார்க்கன்றித் துறக்கவுலக வாழ்வு கிடையாதாகலின் இன்மை மறுமை வாழ்க்கையையும் கெடுக்கும் என்பது கருத்து.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Jul-19, 10:18 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 64

மேலே