இளமை நிலையாமை 2 - கலிவிருத்தம் – வளையாபதி 41

கலிவிருத்தம்
(கருவிளம் காய் கூவிளம் கூவிளங்காய்)

இளமையும் நிலையாவால்; இன்பமும் நின்றவல்ல;
வளமையும் அஃதேபோல் வைகலும் துன்பவெள்ளம்
உளவென நினையாதே செல்கதிக்(கு) என்றுமென்றும்
விளைநிலம் உழுவார்போல் வித்துநீர் செய்துகொண்மின். 41 வளையாபதி

பொருளுரை:

இன்பம் நுகர்தற்குரிய இளமைப்பருவமும் நிலைத்திராமல் நீரில் குமிழி போல அழிந்து போகும்.

நுகரும் இன்பங்களும் நிலைத்து நிற்கும் இயல்புடையன அல்ல.

அதே போல, அவ்வின்பத்திற்குக் காரணமான செல்வங்களும் நிற்பன அல்ல.

அவ்வின்பம் நிலையாததோடு வாழ்க்கையில் நாள்தோறும் துன்பமே மிகுதியாகவும் உள்ளன.

ஆதலால் இளமையும் இன்பமும் வளமையும் நமக்கு இருக்கிறதென்று கர்வம் கொள்ளாமல், விளைகின்ற நன்செயை உழுகின்ற வேளாண்மக்கள் வரும் எதிர் ஆண்டிற்கு அவ்விளைச்சலில் இருந்து விதைநெல் சேமித்துக் கொள்வது போல, நீங்களும் நாள்தோறும் இனிச் சென்று பிறக்கின்ற பிறப்பிற்கு ஆக்கமாக அறமாகிய வித்தினை நாட்களை வீணாக்காமல் செய்துகொள்ளக் கடவீர் எனப்படுகிறது.

விளக்கம்:

நீங்கள் இளமை முதலியன அழிந்துவிடும் என்பதை உணர்ந்து, இளமை முதலியவற்றால் மகிழ்ந்து சும்மா இருந்து விடாமல் இப்பொழுதே அறம் முதலியன செய்து இறைவன் திருவடியைச் சேர்ந்து சுவர்க்கம் அடைவதற்கு ஆக்கம் செய்து கொள்ளுங்கள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Jul-19, 10:11 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 71

மேலே