இளமை நிலையாமை 1 - கலிவிருத்தம் - வளையாபதி 40

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

வேல்கண் மடவார் விழைவொழிய யாம்விழையக்
கோல்கண் நெறிகாட்டக் கொல்கூற்(று) உழையதாம்
நாற்ப(து) இகந்தாம் நரைத்தூதும் வந்ததினி
நீத்தல் துணிவாம் நிலையா(து) இளமையே. 40 வளையாபதி

பொருளுரை:

நெஞ்சமே! வேல்போலும் கண்களையும் மடப்பத்தையும் உடைய மகளிர் நம்மை விரும்பாது புறக்கணிப்பவும், யாம் மட்டும் அம்மகளிரை விரும்பவும், கோலாகிய கண்ணே இனி நமக்கு வழிகாட்டும் கருவியாகவும், கொல்கின்ற கூற்றுவனிடத்திற்கு நெருங்குகிறோம் என்ற நாற்பதற்கு வயதிற்கு மேலே வயதினையும் கடந்து விட்டோம். சாக்காட்டினை அறிவிக்கின்ற எமனின் தூதாகிய நரையும் வந்துற்றது.

இளமை நிலைத்திராதென்றும் உணர்ந்து கொண்டோமன்றோ? இனியேனும் ஆசைகளைத் துறந்து போதலைத் துணிவோமாக! எனப்படுகிறது.

விளக்கம்:

இது மெய்யுணர்வுடையோன் ஒருவன் தன்னெஞ்சிற்குக் கூறியது.

வேற்கண் மடவார் நம்மை விரும்ப மாட்டார் என்றும், யாம்மட்டும் அவரை விழைதல் நாணுதல் தகவுடைத் தென்பான், மடவார் விழைவு ஒழிய யாம் விழைய நாற்பது இகந்தாம் என்றான்.

கண் பார்வை ஒளியிழந்து போயின வென்பான் கோற்கண் நெறிகாட்ட என்றான்.

மடப்பம் – பேதமை, மென்மை, நாற்பது - நாற்பதியாட்டை யகவை

நரைசாவினை முற்பட உணர்த்துமொரு அறிகுறியாகலின், அதனை மறலியின் தூதுவனாக உருவகித்தான்.

யாம் சாவினை மிகவும் நெருங்கி வந்து விட்டோம் என்றிரங்குவான், கொல்கூற்றுழையதாம் நாற்பது என்றான். நீத்தல் – துறந்து போதல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Jul-19, 8:38 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 57

மேலே