தமிழின் செம்மொழி தகுதி சிறப்புகள்

செம்மொழி (Classical language) என்பது ஒரு மொழியின் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத்தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும்.ஒரு மொழிக்கு செம்மொழி என்ற தகுதி அம்மொழியில் இடம் பெற்றிருக்கும் இலக்கியத் தரத்தின் அடிப்படையில்தான் முடிவு செய்யப்படுகிறது. இருப்பினும் செம்மொழி என்பதற்கு அம்மொழியில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான இரண்டு சிறப்புகள் தேவையாய் இருக்கிறது.
1. இலக்கியப் படைப்புகள்
2. கலைப் படைப்புகள்
இந்த இரு படைப்புகளைக் கொண்டே அந்த மொழி செம்மொழிகளாக அறிவிக்கப்படுகின்றன.

இலக்கியப் படைப்புகள்
ஒரு மொழியின் சிறப்பிற்கும் செம்மைக்கும் முதல் அடையாளமாகத் திகழ்வது அம்மொழியின் பழமை வாய்ந்த இலக்கியங்கள்தான். இந்த இலக்கியங்களில் இருக்கும் பழமையுடன் அதில் கருத்துச் செறிவுகளும் இருக்க வேண்டும். ஒரு மொழியின் சிறப்பு அந்த மொழியில் படைக்கப்பட்ட இலக்கியப் படைப்புகள் வழியாகத்தான் அறிய முடிகிறது.
கலைப் படைப்புகள்
ஒரு மொழியின் பழமைக்கு இலக்கியம் சான்றாக இருந்தது என்பதுடன் அந்த மொழி சார்ந்த பகுதிகளில் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகள் அந்த மொழியின் பழமையை உணர்த்தும் அடுத்த சான்றாக இருக்க வேண்டும். கலைப் படைப்புகள் என்பது கட்டிடக்கலை, சிற்பக்கலை போன்ற பழமை வாய்ந்த கலைச் சான்றுகளாக இருக்க வேண்டும்
உலகச் செம்மொழிகள்
இன்று உலகில் செம்மொழிகளாகக் கருதப்படும் மொழிகள் 8 ஆக இருக்கின்றன.
கிரேக்க மொழி சமஸ்கிருதம் இலத்தீன் பாரசீக மொழி அரபு மொழி எபிரேயம் தமிழ் சீன மொழி
தமிழின் செம்மொழித் தகுதிகள்
செம்மொழி என்ற நிலையில் ஒரு மொழி ஏற்கப்பட வேண்டுமானால் அதற்கென்று சில தகுதிப்பாடுகள் தேவைப்படுகின்றன. செம்மொழி என்று ஒரு மொழி அழைக்கப்பட வேண்டுமானால் அம்மொழி தொன்மைச்
சிறப்பு வாய்ந்ததாக அதற்கென ஒரு தனித்த பண்பாடு உடையதாக, அந்தப் பண்பாடு எதனோடும் தொடர்பற்றதாக, வளமையான இலக்கியச்
செழுமை வாய்ந்ததாக இருக்கவேண்டும் என்று கருதுகிறார் ஜார்ஜ் ஹர்ட். இவ்வளவில் சிறப்பு பெற்ற உலகச் செம்மொழிகளாக கிரேக்கம், இலத்தீன், அரபி, சமஸ்கிருதம், சீனம் போன்ற பல மொழிகள் திகழ்ந்து வருகின்றன. இவற்றோடு தற்போது தமிழும் செம்மொழியாக ஏற்கப் பெற்றுள்ளது.


தமிழ் தொன்மையானதாக, தனித்த பண்பாடு உடையதாக, இலக்கிய வளம் மிக்கதாக இருப்பதனோடு வாழும் மொழியாகவும் அது திகழ்ந்து வருகின்றது. பெரும்பாலான செம்மொழிகள் வழக்கில் இருந்து நீக்கி விட்டன. மக்களிடம் அவை பேச்சு மொழியாகக் கூட இல்லை. குறிப்பாக சமஸ்கிருதம், பாலி, எகிப்து போன்ற இவ்வகைப்பட்டனவே ஆகும். ஆனால் தமிழின் தொன்மைச் சிறப்பு. மரபு பண்பாடு போன்றன மாறாமல், சிதறாமல் இன்னமும் காக்கப் பெற்று வருகின்றன. இதற்கு மிக முக்கிய காரணம் தமிழ் என்ற மொழியின் கட்டமைப்பு மட்டுமே ஆகும். தமிழ் என்பதை மன்னர்கள், புலவர்கள், மக்கள் வளர்த்தாலும்
அவர்கள் மறைந்தபோதும் மறையாமல் தமிழ் காப்பற்றப்பட்டுக் கொண்டே வந்துள்ளது என்பது சிறப்பிற்கு உரியதாகும்.

பொதுவாக, செம்மொழிக்கு உரிய தகுதிகளாகப் பதினோரு கூறுகளை எடுத்துரைக்கலாம்.


1. தொன்மை 2. தனித்தன்மை 3. பொதுமைப் பண்பு 4. நடுவு நிலைமை 5. தாய்மைப் பண்பு 6. பண்பாட்டுக் கலை அறிவு பட்டறிவு வெளிப்பாடு 7. பிற மொழித் தாக்கமில்லா தன்மை 8. இலக்கிய வளம் 9. உயர் சிந்தனை
10. கலை இலக்கியத் தனித்தன்மை 11. மொழிக் கோட்பாடு. இப்பதினொன்றும் தமிழுக்கு உண்டு.

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று திருக்குறளுக்குக் காலம் வகுக்கப்பெற்றுள்ளது.
இதன் காரணமாக தொன்மைச் சிறப்பு வாய்ந்தது தமிழ் என்பது தெளிவு.
செம்மொழித்தன்மைகள் பதினொன்றுக்கும் உரியதாகத் தமிழின் சங்க இலக்கியங்கள் விளங்குகின்றன. இதன் காரணமாக தமிழின் செம்மொழித் தன்மை உடைய இலக்கியங்களாகச் சங்க இலக்கியங்கள்
அமைந்துள்ளன என்பது உறுதியாகின்றனது.


தமிழின் செம்மொழித் தன்மையை அறிந்து உணர்த்திய தமிழறிஞர்களுள் குறிக்கத்தக்கவர்கள்
பரிதிமால் கலைஞர் பாவாணர் கால்டுவெல் போன்ற பலர் ஆவர். இவர்களின் செம்மொழிப் பற்றிய கருத்துக்கள் பல திறத்தன. இவர்கள் தரும் அனைத்து வரையறைகளும் தமிழுக்கு உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை.

பாவாணர் பதினாறு தன்மைகளால் தமிழ் செம்மொழித் தன்மை பெற்றுள்ளது என்று கருதுகின்றார்.
1.தொன்மை 2.முன்மை 3.எண்மை (எளிமை) 4.ஒண்மை (ஒளிமை) 5.இளமை 6.வளமை 7.தாய்மை 8.தூய்மை 9.செம்மை 10.மும்மை 11.இனிமை 12.தனிமை 13.பெருமை 14.திருமை 15.இயன்மை 16.வியன்மை என்ற பதினாறு தன்மையும் தமிழுக்கு இருப்பதாகப் பாவாணர் கருதுகின்றார். இதன் காரணமாகவும் தமிழ் செம்மொழித் தகுதியைப் பெற்றிருக்கிறது என்பது அறியத்தக்கதாகும்.


கால்டுவெல் தமிழின் தனித்தியங்கும் தன்மை பற்றிப் பேசுகின்றார். " திராவிடம் சமஸ்கிருத்தில் இருந்துப் பிறந்தது என்ற கருத்து முந்திய தலைமுறையினராய மொழிநூல் வல்லுநர்க்கு ஏற்புடைத்தாய் விளங்கினும் இக்காலை அறவே அடிப்படையற்றுப் போன கட்டுக்கதையாகி விட்டது என்பது இவரின் கருத்தாகும்.

இவ்வகையில் பல அறிஞர்கள் தமிழின் செம்மொழித் தன்மையைத் தகுதியை உலகம் உணரும் அளவிற்கு எடுத்துரைத்துள்ளனர். தொடர்ந்த இந்தச் செயல்பாட்டின் வழியாகத் தமிழ் தற்போது செம்மொழித் தகுதியைப் பெற்று விளங்குகிறது.


தமிழின் செம்மொழித் தன்மையைத் தற்போது உலகிற்கு உணர்த்தியவர் உணர்த்தி வருபவர் கலிபோர்னியாவில் வாழும் பேராசிரியர் முனைவர் ஜார்ஜ் ஹார்ட் ஆவார். தமிழ் செம்மொழித் தகுதியைப் பெற்றிருப்பதற்கான காரணங்களாக நான்கினை அவர் முன்னிறுத்துகிறார்.


தமிழ்மொழி பழமைச் சிறப்பு வாய்ந்தது. தமிழ் தனக்கான தனித்த இலக்கிய மரபினை உடையது. தமிழ் மொழியின் செவ்விலக்கியங்களான சங்க இலக்கியங்கள் மற்ற செம்மொழிகளின் இலக்கியங்களுடன்
ஒப்பு நோக்கத்தக்கவை. இந்தியப் பண்பாடு மரபுகளின் தனித்துவம் உடையதாக தமிழ்ச் செவ்விலக்கியங்கள் விளங்குகின்றன.


இந்த நான்கு கருத்துக்களை அவர் எடுத்துக் கூறியதோடு மட்டுமில்லாமல் அதற்கான சான்றுகளையும் எடுத்துக் கூறி தமிழின் செம்மொழித் தன்மையை உலகிற்கு எடுத்துக்காட்டினர்.

செவ்வியல் நூல்கள்
செவ்வியல் நூல்கள் என வரையறுக்கப்பட்டவை அனைத்தும் கி.பி. 6 ஆம் நூற்றாண்டிற்கு முந்தியவை. தனித்தன்மை கொண்டவை. 41 செவ்வியல் நூல்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
தொல்காப்பியம்
எட்டுத்தொகை
நற்றிணை

குறுந்தொகை
ஐங்குறுநூறு
பதிற்றுப்பத்து
பரிபாடல்
கலித்தொகை
அகநானூறு
புறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை

பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு
மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை
குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை
மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார்

நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
கார் நாற்பது
களவழி நாற்பது
ஐந்திணை ஐம்பது
ஐந்திணை எழுபது
திணைமொழி ஐம்பது
திணைமாலை நூற்றைம்பது
பழமொழி
சிறுபஞ்சமூலம்
திருக்குறள்
திரிகடுகம்
ஆசாரக்கோவை
முதுமொழிக்காஞ்சி
ஏலாதி
கைந்நிலை
சிலப்பதிகாரம்
மணிமேகலை
முத்தொள்ளாயிரம்
இறையனார் களவியல்


இந்தியக் குடியரசு தலைவரின் ஆணைப்படி இந்தச் செம்மொழித் தகுதித் தமிழுக்குக் கிடைத்துள்ளது. பழமையான இலக்கிய மரபுகளை இன்னும் தொடர்ந்து உணர்த்தி வரும் உலக மொழிகள்
ஒன்று தமிழ் என்பதால் அதற்கு இந்நேரத்தில் செம்மொழித் தகுதி வழங்கப்படுகிறது என்று இந்தியக் குடியரசு தலைவரின் அறிக்கை குறிப்பிடுகிறது.
==============================================================================================================

எழுதியவர் : G.S.ப்ரபின் (10-Jul-19, 7:19 pm)
பார்வை : 567

சிறந்த கட்டுரைகள்

மேலே