துறவு 2 – கலி விருத்தம் – வளையாபதி 43

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

உற்ற உதிரம் ஒழிப்பான் கலிங்கத்தை
மற்றது தோய்த்துக் கழுவுதல் என்ஒக்கும்
பற்றினால் ஆகிய பாவத்தை மீட்டும்
பற்றொடு நின்று பறைக்குஉறும் ஆறே. 43 வளையாபதி

பொருளுரை:

ஒருவன் தனது பற்றுடைமை காரணமாக எய்திய தீவினையை மீண்டும் அப்பற்று உடையனாகவே நின்று தேய்த்தொழிக்கும் முயற்சி எதனை ஒக்கும் என்று கேட்டால் ஒருவன் தன்னாடையிலுற்ற குருதிக் கறையினைப் போக்குவதற்கு அந்த ஆடையினை மீண்டும் அந்தக் குருதியிலேயே போட்டுக் கழுவுவதனையே ஒப்பதாம் என்பதாம்.

விளக்கம்:

பற்றுடைமையாலுற்ற துன்பம் போக்க முயல்பவர் மீண்டும் வேறு பொருள்களைப் பற்றுமாற்றாற் போக்கமுற்படுதல் ஆடையிற்பட்ட குருதிக் கறையைப் போக்குபவர் மீண்டும் அவ்வாடையைக் குருதியிலேயே தோய்ப்பது போன்று பேதைமையுடையது.

ஆதலால், பற்றறுப்போர் வேண்டியதெல்லாம் ஒருங்கு விடல் வேண்டும்.

இதனை

இயல்பாகு நோன்பிற்கொன் றின்மை யுடைமை
மயலாகு மற்றும் பெயர்த்து குறள், 344 துறவு

பொருளுரை:

உடைமை ஏதும் இல்லாதிருப்பது துறவின் இயல்பு. உடைமைகளை வைத்திருப்பதோ ஆசை என்னும் மயக்கத்தை மறுபடியும் தரும்.

என்பதனானும் உணர்க. மேலும், பற்றினைப் பற்றுவார்க்குத் துன்பங்கள் இடையறாதுவரும் என்பதனை,

பற்றி விடாஅ விடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு குறள், 347 துறவு

பொருளுரை:

யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டு விடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன.

என்பதனாலும் உணர்க.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Jul-19, 3:46 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 57

மேலே