துறவு 1 - கலி விருத்தம் - வளையாபதி 42

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

மற்றும் தொடர்ப்பா(டு) எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்(கு) உடம்பு மிகையவை உள்வழிப்
பற்றா வினையாய்ப் பலபல யோனிகள்
அற்றாய் உழலும் அறுத்தற்(கு) அரிதே. 42 வளையாபதி

பொருளுரை:

இனியும் பிறப்பது கூடாது என்று பிறப்பையே அறுக்க முயன்றவர்க்கு அவரது உடம்பே அதிகம்;

நிலைமை அவ்வாறிருக்க மேன்மேலும் உடம்பிற்கும் மேலான சுமையாகப் பொருட்களின் மேல் பற்று எதற்கு? மேலும் மேலும் அவற்றின்பாற் பற்றுண்டாகி அப்பற்றுக் காரணமாக வினைகளும் உண்டாகி உயிர்தானும் அவ்வினைகள் காரணமாக எண்ணிறந்த பிறவிகளிடத்தும் முன்போலவே பிறந்து இன்ப துன்பங்களிற் கிடந்துழலும்;

இவ்வாறு வளர்ந்துவிட்ட பற்றினை மீண்டும் அறுத்தற்கும் இயலாது கண்டீர்! என்பதாம்.

விளக்கம்: இச்செய்யுளில்,

மற்றுந் தொடர்ப்பா(டு) எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்(கு) உடம்பு மிகை. 345 துறவு

என்னும் திருக்குறள் முழுதும் அமைந்திருக்கிறது.

இனி, இத் திருக்குறட்கு, விளக்கம்போல எஞ்சிய அடிகளும் அமைந்திருக்கின்றன.

இத்திருக்குறட்கு ஆசிரியர் பரிமேலழகர் கூறுகின்ற விளக்கவுரையும் கருத்தில் கொள்ளவேண்டும். அது வருமாறு

உடம்பென்ற பொதுத் தன்மையால் உருவுடம்பும் அருவுடம்பும் கொள்ளப்படும்.

அவற்றுள் அருவுடம்பாவது: பத்துவகை இந்திரிய உணர்வோடும் ஐவகை வாயுக்களோடும் காமவினை விளைவுகளோடும் கூடிய மனம். இது நுண்ணுடம்பு எனவும் படும்.

இதனிடம் பற்று நிலையாமை யுணர்ந்த துணையான் விடாமையின் விடுதற்கு உபாயம் முன்னர்க் கூறுப,

இவ்வுடம்புகளால் துன்பம் இடையறாது வருதலை யுணர்ந்து இவற்றானாய கட்டினை இறைப் பொழுதும் பெறாது வீட்டின்கண் விரைதலின் உடம்புமிகை யென்றார். இன்பத் துன்பங்களால் உயிரோடு ஒற்றுமை யெய்துதலின், இவ்வுடம்புகளும் யானெனப்படும். இதனால் அகப்பற்று விடுதல் கூறப்பட்டது எனவரும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Jul-19, 3:37 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 56

சிறந்த கட்டுரைகள்

மேலே