பின்பொருவன் இல்லையெதிர் நோக்குபவர் தொல்லை யுறுவார் - நெறி, தருமதீபிகை 335

நேரிசை வெண்பா

இன்பம் தருமனைவி இல்இருப்ப அன்னவளைத்
துன்பமுற விட்டுச் சுணங்கனெனப் - பின்பொருவன்
இல்லையெதிர் நோக்கிநிற்கும் ஏழைபோல் எஞ்ஞான்றும்
தொல்லை எவருறுவார் சொல். 335

- நெறி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

இன்ப நிலையமான தனது அருமை மனைவியைத் துன்பம் அடையும்படி தனியே விட்டு, வேறு ஒருத்தியை நனி விரும்பி நாய் போல் ஓடும் பேதை போல அல்லலும் அவமானமும் அடைவார் யாரும் இல்லை என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உடையவன் காணாமல் கள்ளமாய் நுழையும் எள்ளல் காண நாய் உவமை வந்தது. உள்ளம் கெடவே உயர்வு கெட்டது.

பசியும் காமமும் உயிரின் இயற்கை நியமங்களாய் அமைந்திருக்கின்றன. உணவால் பசி அடங்குகின்றது; கலவியால் காமம் தணிகின்றது. இவை நிரந்தர நியமமாய்ச் சுழன்று வருகின்றன.

அருந்தலும் பொருந்தலும் திருந்திய நிலையில் செறிந்திருக்கும்படி சன சமுதாயம் தெரிந்து வைத்துள்ளது. வரன் முறையாக வாழ்க்கை இனிது நடந்து வருமாறு வரம்புகள் அமைந்தன.

அவ்வரம்புகள் திறம்பாமல் ஒழுகுவன அறம் புகழுடையனவாய்ச் சிறந்து வருகின்றன. உரிமையுடைய ஒரு மகளைத் தரும முறையில் மணந்து வாழும் மகன் இல்லற தருமியாய்த் திகழ்ந்து நிற்கின்றான். இந்நிலையிலேதான் கணவன், மனைவி என்னும் இனிய பெயரை அடைந்து இருபாலும் இன்பம் நுகர்ந்து அன்பு புரிந்து பண்பு கனிந்து நண்புடன் மனைவாழ்க்கை செய்கின்றனர்.

இருபாலும் ஒருபாலும் கோடாமல் நெறி முறையே மருவி வரும் அளவே பெருமையும் இன்பமும் பெருகி வருகின்றன.

தனக்குத் தனி உரிமையாய் அமைந்துள்ள இனிய வகைமையை உணர்ந்து கொள்ள ’இன்பம் தரும் மனைவி இல்இருப்ப’ என இங்ஙனம் அன்பு கனியச் சொல்லியது.

உனக்கு வேண்டியது தேக போகம். அ.து ஏக போகமாய் உன் வீட்டிலே இருக்கின்றது; அங்ஙனம் இருக்க அதனை விட்டு அயலே போவது மயலான ஒர் மதி கேடேயாம்.

ஐம்புலன்களும் ஆர நுகர்ந்து களிக்கும் நீர்மை நிறைந்துள்ள நிலைமை கருதி இன்பம் தரும் மனைவி என்றது. இன்பம் உடையதைத் துன்பம் அடையச் செய்து விடுவது கொடிய மடமையோடு படு பாதகமும் ஆகும். பருவம் கனிந்த உரிமையைப் பாழ்படுத்திப் பழிபடப் போவது விழிகண் குருடான விளிவேயாகும்.

பிறனுடைய மனையாளை நெறி கடந்து விரும்பிச் செல்கின்றவன் மானம் மரியாதையை இழந்து போகின்றான்; ஆதலால் சுணங்கன் என நேர்ந்தான். சுணங்கன் - நாய்.

கலிநிலைத் துறை
(மா விளம் விளம் விளம் மா)

மிக்க மென்தசை இருந்திட வெற்றெலும் பதனைத்
தக்க தென்றுபுன் ஞமலிகள் கறித்தன தளர்ந்து
துக்கம் ஒன்றுமில் தம்மனை துறந்துபோய்ப் பிறரில்
புக்கு வெந்துயர்க் கடற்படும் இழுதைகள் போல. - திருக்கூவப் புராணம்

பிறர்மனையை விழைந்து துழைபவனை நாயோடு உவமித்து இது குறித்திருக்கும் நிலையைக் கூர்ந்து உணர்ந்து கொள்க.

ஞமலி - நாய். உயர்ந்த மனிதனும் இழிந்த இச்சையால் ஈனமாய்க் கழிந்து படுகின்றான். இழுதைகள் - மூடர்கள்.

தனக்கு நேர்கின்ற பழிபாவங்களை உணராமல் பிறர் மனைவியரை விழைந்து இழிந்து படுதலால் ஏழை என நேர்ந்தான். ஆவதை அறியாதவன் அறிவிலியானான்.

பிறன் ஒருவனுக்கு உரிமையாய் உள்ளவளைக் கள்ளமாய் நுகர்ந்து கொள்ளக் கரந்து புகுகின்றமையால் அவன் உள்ளத்தில் அச்சமும் திகிலும் எப்பொழுதும் நிறைந்திருக்கின்றன.

இன்னிசை வெண்பா

புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம்
து’ய்’க்கு மிடத்தச்சம் தோன்றாமற் காப்பச்சம்
எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ
உட்கான் பிறன்இல் புகல். 83 பிறர்மனை நயவாமை, நாலடியார்

நெறிகடந்து பிறன் இல்லில் நுழைகின்றவனது பரிதாப நிலைகளை இது குறித்துக் காட்டியிருக்கிறது. அச்சம் அவலங்கள் உச்ச நிலையில் ஓங்கி உள்ளன; அந்த ஈன இச்சையில் இழிந்து மானம் மதிப்புகளை இழந்து வீணே அழிந்து படாதே.

நேரிசை வெண்பா

பிறன்வரை நின்றாள் கடைத்தலைச் சேறல்
அறன் அன்றே ஆயினுமாக - சிறுவரையும்
நன்னலத்த தாயிணுங் கொள்க நலமன்றே
மெ’ய்’ந்நடுங்க வுண்ணடுங்கு நோய். 77 நீதிநெறி விளக்கம்

பிறர்மனை விழைபவனுக்கு அறம் புகழ் அழிந்ததோடு அவன் கருதிய இன்பமும் இல்லையே என இது இரங்கியுள்ளது. உண்மை நிலைகளை உணர்த்ந்து சிந்தித்து மனிதன் நன்மையுற வேண்டும் என்றும், ஊனம் உறாமல் மானமுடன் வாழுக என்றும் கூறுகிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Jul-19, 3:26 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 54

சிறந்த கட்டுரைகள்

மேலே