கண்ணோடிக் கருணை புரிதல் தேவர் மகிழும் திருவுடைமையாம் - நீர்மை, தருமதீபிகை 325
நேரிசை வெண்பா
கண்ணோடி யாண்டும் கருணை புரிந்துவரின்
விண்ணோடி நீண்டு வியனாகி - எண்ணோடு
தேவர் மகிழும் திருவுடைமை யாமதனை
மேவினார் மேவாத(து) இல். 325
- நீர்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
யாண்டும் கண்ணோட்டம் கனிந்து கருணை புரிந்துவரின் அந்தப் புண்ணிய மணம் விண்ணும் பரந்து விரிந்து தேவர் மகிழும் செய்வத் திருவாய்ச் சிறந்து விளங்கும்; அதனையுடையவர் அடையாத பாக்கியம் யாதும் இல்லை என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், சீவ கருணை தேவ அமிர்தம் என்கின்றது.
வியன் - மேலான உயர்நிலை, நயனால் விளையும் பயனை உணர்த்தியது. மனம் உருக மாண்பு பெருகுகின்றது.
பிற உயிர்களுக்கு நேர்கின்ற அல்லலைக் காணும் பொழுது உள்ளம் உருகுதலைக் ’கண் ஓடி’ என்றது.. இந்த உருக்கம் உயர்ந்த பண்பாடுடைய சிறந்த ஆன்ம குணமாய் அமைத்திருக்கின்றது.
மனித உருவில் கண் அரிய மகிமையுடையது. உலகப் பொருள்களை எல்லாம் கண்டு களிக்கும் காட்சி மிகுந்து மாட்சி அமைந்துள்ளது; தன் பார்வையில் பரிவு தோன்றி அருள் புரியும் பொழுதுதான் மனிதன் உண்மையான கணணாளனாய் ஒளி சிறந்து நிற்கின்றான். கண் ஓடி அருளானாயின் அவன் பிறப்பு மண்ணாகவும், மரமாகவும் இழிக்கப்படுகின்றது.
'மண்ணோ(டு) இயைந்த மரத்தனையர் கண்ணோ(டு)
இயைந்துகண் ணோடா தவர். 576 கண்ணோட்டம்
உயர்ந்த மனிதனாய்ப் பிறந்திருந்தாலும் இ்ரங்கி அருளாதவன் இழிந்த மரமே என இது இகழ்ந்திருக்கிறது. சிறந்த பிறவிப் பயனை இழந்து போதலால் இங்ஙனம் இழிந்துபட நேர்ந்தான்.
பிறருடைய இடர் கண்டபொழுது இரங்கி இதம் புரிவது கண்ணோட்டம் என வந்தது. இந்தச் சீவ தயையால் மனிதன் திவ்விய மகிமைகளை அடைகின்றான். ’சர்வ சீவ தயாபரன்’ என்பது கடவுளுக்கு ஒரு பெயர்; இதனால் தயை உடையவனது உயர் நிலையை உணர்ந்து கொள்ளலாம்.
கண்ணோட்டம், அன்பு, ஆதரவு, அருள் என்பன தலைசிறந்த பண்புகள்; புனிதமான உயர்நிலைகளை இனிது அருளுதலால் இவை இனிய நீர்மைகள் என நின்றன. இந்நீர்மைகளின் அளவே சீர்மைகள் விளைகின்றன.
உள்ளுருக்கமான உயர்ந்த உயிர்ப்பண்பு குன்றிய பொழுது புறத்தில் புரிகின்ற நல்ல செயல்களும் புல்லியனவாய்ப் புலைப்படுகின்றன.
அறுசீர் விருத்தம்
(மா + விளம் 4 + காய்)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
அன்பி லாதநல் அறங்களும் ஐவகை வேள்வியும் பிணமேயாம்;
அன்பில் வாய்மையும் தானமும் ஒழுக்கமும் விரதமும் பிணமேயாம்,
அன்பில் ஞானமும் துகளிலெச் சமயமும் சொல்லிடில் பிணமேயாம்;
அன்பி லாதியல் அறம்பொருள் இன்பம்வீ(டு) அனைத்திற்கும் உயிருண்டோ? - அனுபவசாரம்
இனிய நீர்மையான அன்பின் பெருமை இதனால் அறியலாகும். உள்ளக் கனிவே எல்லா நல்வினைகளுக்கும் உயிராதாரமாயுள்ளது.
எல்லாப் பெருமைகளையும் இன்ப நலங்களையும் ஈண்டு இனிது நல்கி, முத்திப் பேற்றையும் அருளுதல் கருதி கருணையைத் ‘திருவுடைமை’ என்றது.
'அருட் செல்வம் செல்வத்துட் செல்வம்' என வள்ளுவர் அறிவுறுத்தியுள்ள பொருள் நிலை தெரிக. என்றும் அழியாமல் யாண்டும் நிலையாய் நின்று உயிர்க்குறுதி புரிந்து உயர் பேரின்பம் தருதலால் அருள் பரம பாக்கியம் ஆயது.
சீவ தயை புண்ணியமாய்ப் பொங்கி வருவதால், அதனையுடையவனை விண்ணவரும் விழைந்து கொண்டாடுகின்றனர்; மன்னுயிர்க்கு இதம் புரியத் தன் உயிர் உயர்ந்து ஒளி பெறுகின்றது.
அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
உண்டியால் உடல்வ ளர்ப்போன்
..உயிரினை வளர்த்தோன் ஆகான்;
மண்டிய அருளால் வைய
..மன்னுயிர்க்(கு) இரங்கி வாழ்வோன்
கொண்டதன் பிறவிப் பேறும்
..குலவிய உயிரும் பேணிக்
கண்டபே ரின்பம் என்னும்
..கதிநிலை கண்டான் அன்றே.
கண் ஓடிக் கருணை புரிவதால் உளவாகும் பெரும் பேறுகளை இங்ஙனம் கருதி உணர்ந்து உறுதி நலங்களை உவந்து கொள்ளுக.
பிறர் நலம் பேணும் பெரியோர்களைப் பேரின்ப நலம் தானாகவே தனக்கு உரிமை செய்து கொள்ளுகின்றது. ஈண்டு மன்னுயிர்க்கு இரங்குகின்றவன் ஆண்டுத் தன் உயிர்க்குக் தனிநாயகன் ஆகின்றான். வித்திய விளைவு துய்த்து மகிழ வருகின்றது என்கிறார் கவிராஜ பண்டிதர்