கடவுள்களை எண்ணுகிறேன்
தினந்தோறும் உண்ணுகிறேன் உன்னை ஒருமுறையாவது எண்ணுகிறேனா?
யோசிக்கிறேன்.......
இரவு- பகல் உறக்கம்-விழிப்பு மாறிமாறி வரத்தான் செய்கிறது அதையெல்லாம் எண்ணவா செய்கிறேன்?
யோசிக்கிறேன்.......
பருவக்காற்று வரும் போகும் பருவமழை பெய்யும் பொய்க்கும் அதையெல்லாம் எண்ணவா செய்கிறேன்?
யோசிக்கிறேன்.......
திடீரென்று புயல் வரும் திடீரென்று பூகம்பம் வரும் அதையெல்லாம் எண்ணவா செய்கிறேன்?
யோசிக்கிறேன்.......
சிலநாள் விலைவாசி மலைபோல் உயரும் சிலநாள் மடுபோல் குறையும் அதையெல்லாம் எண்ணவா செய்கிறேன்?
யோசிக்கிறேன்.......
காடுமேடு கழனியாகும் கழனி கதிராகும் அதையெல்லாம் எண்ணவா செய்கிறேன்?
யோசிக்கிறேன்.......
மழை பொழிந்தால் மண் செழிக்கும்னு எண்ணவா செய்கிறேன்?
யோசிக்கிறேன்.......
வித்து விழுந்து செத்துப்போகாது கொத்துக்கொத்தாய் உணவை அள்ளித்தரும்னு எண்ணவா செய்கிறேன்?
யோசிக்கிறேன்.......
ஒருவேளை சோற்றுக்காய் உடுக்கை உளைய ஊருக்காய் சோறு போடுகிறவனை எண்ணவா செய்கிறேன்?
யோசிக்கிறேன்.......
ஒருவேளை,
மூவேளை உணவு இருவேளையானால், இருவேளை உணவு ஒருவேளையானால் எண்ணுவேனோ?
யோசிக்கிறேன்.......
இல்லை,
ஒருவேளை உணவும் அத்துப்போனால் எண்ணுவேனோ?
யோசிக்கிறேன்.......
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகென்று.......
யோசிக்கிறேன்.......
இனி இப்போதின்றி எப்போது எண்ணுவேன் அந்த கடவுள்களை........!!!
வேல்விழி...