வறட்சி ஒழிப்பு தினம்
வளங்கள் எல்லாம் வாரி இரைத்து வாழ வழி செய்தான் இறைவன்...
நிலங்கள் எல்லாம் செழித்திட
நீர் நிலைகளை படைத்தான்...
விதைகள் எல்லாம் சேகரித்து
விதைத்திட புல்லினங்கால் ...
மணம் வீசும் மலர்களும்
மகரந்தம் சேகரிக்க தேனீக்களும்
வானுயர்ந்த மலைகளும்
வளைந்தோடும் ஆறுகளும்
பனித்துளிகள் இளைப்பாற
பச்சை வயல்களும் படைத்தான்...
வானவில்லை வானுக்கும்
வண்ணத்தில் மின்னும்
பூவினங்களை காய் கனிகளை
பூமிக்கும் நன்கொடையாக்கினார்...
இன்னும் எத்தனை எத்தனையோ
இயற்கை செல்வங்கள் யாவும்
இயல்பாய் இயங்கிடும்படி
இதமாய் காலநிலை அமைத்தான்...
அத்தனையும் அனுபவிக்க
அவனியில் மனிதனை படைத்தான்
ஆர்வக்கோளாறும் அளவற்ற ஆசைகளும் மனிதம் தொலைந்து
இயற்கை வளத்தை சீர்குலைத்து
செயற்கையாகி செயலிழந்தோம்... செய்வதறியாது உலக உருண்டை
செழுமையின்றி சுழல்கிறது...
களைகள் பிரித்து கதிர் அறுத்து காலமறிந்து அறுவடை செய்யாமல்
உரமிட்டு ஐவகை நிலங்களின்
உயிரறுத்து அறுவடை செய்தோம்...
கரிம கனிம வளங்கள் எல்லாம்
கருணையின்றி சுரண்டி எடுத்தோம்
அஸ்திவாரம் தகர்த்து விட்டு
அந்தரத்தில் வாழ விழைகிறோம்...
சுவாசிக்கும் காற்றை விட்டோமா ?
சுகவாசிகளின் ஏற்றமும் சீற்றமும்
ஓட்டை போட்டுக்கொண்டு
ஓசோன் படலம் வரை நீள்கிறது...
காதலோடு திரண்டு வரும் கருமேகங்கள் காற்று மாசில் கலையிழந்து கலைந்து செல்ல
கரிசல் விம்மி வெடிக்கின்றன...
காடுகள் எல்லாம் அழித்து விட்டு
காணி நிலமின்றி வாழ்வது எப்படி ?
கருப்பைகளை சிதைத்து விட்டு
கருமுட்டை சேகரித்து என்ன பயன் ?
வளர்ச்சி எனும் பெயரில் வாழ்வாதாரம் அழித்து விட்டு
புறம் பேசி போர்க்கொடி தூக்கி
புரட்சி செய்வதால் என்ன பயன் ?
தோட்டம் வைக்க வேண்டாம் நீ
தொட்டிச்செடி வளர்த்ததுண்டா ?
வளர்த்துப்பார் உன் மனநிலையும்
வளமாய் உடல் நிலையும் மாறிடும்...
இழந்தவை இழந்தவையாகட்டும்
இளைய சமுதாயமே விழித்தெழு
இனிவரும் தலைமுறையினர்
இதயம் சுவாசிக்க வழி செய்திடு...