முண்டாசு கவிஞன்
"நான் வீழ்வேன் என நினைத்தாயோ?"
நா இந்த வரிகளைப் பகன்றால் போதும்,
அக்கினி சீற்றங்கள் அகத்துள் மோதும்!
தேன் கவிகள் உன் கவிகள்!
தேகம் சிலிர்க்கும் தீக்கவிகள்!
நான்கு பாடல் இவன் பாடல் செவிச் சென்றாலே,
நாட்டுப்பற்று நாடியெங்கும் குதித்து ஓடும்!
எட்டயபுரத்தனவன்! ஏட்டுக்கவி மன்னனவன்!
சுப்பையா பெயரினவன்! சிந்து கவி வல்லோனவன்!
பதினொன்று அகவை தனில்
பா புனையும் திறத்தினாலே பாரதியும் ஆனவனவன்!
எளிய கவி கை எடுத்தான்!
எழுத்தில் வீரம் ஊட்டுவித்தான்!
வெள்ளை நிறப் பூனையாலே
வருணாசுரம பிரிவுடைத்தான்!
அக்கினி குஞ்சொன்றாய் அவதாரம் எடுத்தவன்!
ஆங்கிலன் விழிகளிலே எழுத்துப் போர் தொடுத்தவன்!
உன் "அச்சமில்லை அச்சமில்லை"
இன்றும் உச்சி தொடும் முழக்கமது!
நல்லதொரு வீணை செய்தாய் பாக்களால்; அதை
நலங்கெட புழுதியில் எரிகிறோம் வீணர்களாய்!
பள்ளு பாடினாய் ஆனந்த சுதந்திரம் எண்ணி!
இன்றும் அடிமை தான் இந்நாட்டு முதலைகளுக்கு!
புதுமைப் பெண் கனவு கண்டாய்!
புரிதல் இன்றி பாதை மாறும் காலம் இது!
வாழ்ந்த காலம் நீ கொஞ்சம் தான்!
வரலாற்றில் புகழோ வானம் மிஞ்சும் தான்!
ஏனோ தெரியவில்லை!
பாரதிக்குப் பாட்டு எழுதினாலே,
பேனாவும் வடிக்கிறது வீரத்தமிழ் செங்குருதி!