கள்ளக்கணக்கு’ சிறுகதைத் தொகுப்பு -காலச்சுவடு பதிப்பகம்-

ஆஸ்திரேலிய புலம்பெயர்வுக்குப் பின்னர், கடந்த முப்பது ஆண்டுகளாக, நான் எழுதிய கதை களில், காலச்சுவடு பதிப்பகம் தெரிவு செய்த சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெறுகின்றன.

பல்கலைக்கழக பணி நிமிர்த்தம், பயணித்த நாடுகளில் நான் கண்ட வாழ்வின் தரிசனங்களே இச்சிறுகதைகள். கதைகளின் கருக்கள் எல்லாமே உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை. அதனால்தான் யதார்த்தமெது, கற்பனையெது என்று பிரித்தறிய முடியாத சேர்மானமாக இவை இருக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் நான் கல்விகற்ற பதின்பருவ காலத்தில், சில கதைகள் எழுதியுள்ளேன். அவை உள்ளூர்ப் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. பின்னர், பல்வேறு நிர்ப்பந்த காரணிகளால் இருபத்தைந்து வருடங்கள் தமிழில் நான் எதுவும் எழுதவில்லை. ஆனால் தமிழ், ஆங்கிலம், ஜேர்மன் என பல மொழிகளில் நிறைய வாசித்தேன். ஜேர்மன் மொழியிலும் ஆங்கிலத்திலும் நிறைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதினேன். ஜேர்மன் மொழியில் உயர் கல்வி கற்றதால் அந்த மொழி, தமிழ் மொழிபோல என்னுள் வசப்பட்டது. ஒரு விஷயம் எப்படி சொல்லப்பட வேண்டும், எப்படி சம்பவங்களைக் கோர்வைப் படுத்த வேண்டும் என்ற உத்திகளை, நான் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் படிப்படியாக கற்றுத் தந்தன. அதேவேளை நான் வாசித்த பிற மொழி இலக்கியங்கள், என்னைப் புதிய தளத்துக்குக் கொண்டு சென்றன.

Capture 1பதின்மூன்று வருட ஜேர்மன் வாழ்க்கையை நிறைவு செய்துகொண்டு, 1987ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த பின்னர், படிப்படியாக தமிழில் எழுத ஆரம்பித்தேன். எனது சிறுகதைகள் இந்தியா டுடே, குமுதம், கல்கி, கணையாழி, தீராநதி, காலச்சுவடு, அம்ருதா, ழகரம், ஞானம், மல்லிகை, ஜீவநதி, வீரகேசரி, தினக்குரல், மலேசிய நண்பன், தமிழ்முரசு (சிங்கப்பூர்) ஆகிய தமிழ் பேசும் உலகத்துச் சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன.

எனது எழுத்துலகின் ஆதர்ஷம், எனது அன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களே. எங்கள் இருவருக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இருவரும் இளமைப் பருவத்தில் எழுதிய பின்னர் நீண்டகாலம் எழுதாமல் மீண்டும் முழுநேரமாக எழுதுபவர்கள். தொழில் காரணமாக உலகின் பல பாகங்களுக்கும் சென்றவர்கள். அங்குள்ள அனுபவங்களைத் தமிழில் படைப்பிலக்கியமாகத் தருபவர்கள். இந்நூல் பற்றிய அவரின் முன்னுரை எனக்கு என்றும் பெருமை சேர்ப்பது. பல்வேறு எழுத்துப்பணிகளுக்கு மத்தியிலும் இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் ஒவ்வொன்றையும் கவனமாகப் படித்து, ஆக்கபூர்வமான கருத்துக்கள் வழங்கிய அ. முத்துலிங்கம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது கதைகளுள் சிறந்த பதின்மூன்று சிறுகதைகளைத் தெரிந்தெடுத்த திரு. க. மோகனரங்கன் அவர்களுக்கும் இந்தத் தொகுப்பைச் சிறப்பாக அச்சிட்டு வெளியிடும் நண்பர் கண்ணனுக்கும் காலச்சுவடு பதிப்பகத்துக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டவன். அத்துடன் எனது கலை இலக்கிய முயற்சிகளுக்கு ஆதரவு தரும் என்னுடைய அன்பு மனைவி சத்தியபாமாவுக்கு என் நன்றியும் அன்பும் உரித்தாகுக.

ஆசி. கந்தராஜா

1.பத்தோடு பதினொன்று
2.ஒட்டு மரங்கள்
3.வெள்ளிக்கிழமை விரதம்
4.காதல் ஒருவன்
5.புகலிடம்
6.எதிலீன் என்னும் ஹோமோன் வாயு…!
7.மிருகம்
8.யாவரும் கேளிர்
9.அன்னை
10.கள்ளக் கணக்கு
11.அந்நியமாதல்
12.சூக்குமம்
13.வேதி விளையாட்டு

எழுதியவர் : ஆசி கந்தராஜாவின்…முற்றம் (19-Jul-19, 4:46 am)
பார்வை : 38

மேலே