கள்ளக் கணக்கு ------------------சிறுகதை
சிவப்பு நிறத்திலே, சீன அரச முத்திரை குத்திய கடிதம் ஒன்றைக் கையில் ஏந்திய படியே கதவைத் திறந்தாள் மகள்.
வீட்டில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை. எனக்கு வந்த கடிதத்தை ஏற்கனவே குடும்பம் படித்து முடித்துவிட்டது. தகவல் அறிந்த மகள் எப்படியும் இன்று சாதித்து விடுவது என்று கங்கணங் கட்டிக் கொண்டாள்.
அவளுக்கு வயது பத்து. நீண்ட வயது வித்தியாசத்தில் அவள் பிறந்ததனால் வீட்டில் செல்லம். வேலையால் களைத்து வந்த நான் சோபாவில் இருந்த படியே சப்பாத்தைக் கழற்றினேன். சப்பாத்தை எடுத்து உரிய இடத்தில் வைத்தாள்.
மனைவி வேலையால் வந்தவுடன் எல்லோருக்கும் பொதுவாகத் தயாரித்த தேநீர் ஆறிக் குளிர்ந்திருந்தது. அதை ‘மைக்கிறோ லேவில்’ சூடாக்கி எனக்குத் தந்தவாறே, என் அருகே அமர்ந்து கொண்டாள்.
மகளின் சேவைகளை புன்னகையுடன் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் எனது மனைவி. நானோ எதுவும் பேசவில்லை. எதற்கோ மகள் அடி போடுகிறாள் என்ப தெரிகிறது.
‘என்ன விஷயம் என்று சொல்லன்..!’ என்றாள் மனைவி பொறுமையை இழந்தவளாக.
சீனாவில் இருந்து வந்த கடிதத்தை என்னிடம் நீட்டியவாறே, ‘நான் ஒரு நாளும் பிளேனிலை போனதில்லை… நீங்கள்தான் அடிக்கடி வெளிநாட்டுக்குப் போகிறயள். இந்த முறை நானும் வரப்போறன்’ என்றாள் தமிழில். வீட்டில் தமிழ் பேசுவது எனக்குப் பிடித்தமானதொன்று என அவளுக்கு நன்கு தெரியும். தனது விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு இதையே அவள் தனது இறுதி அஸ்திரமாக பாவிப்பதுண்டு.
நன்னிங் (Nanning) விவசாயப் பல்கலைக் கழகத்தில் இருந்து அக்கடிதம் வந்திருந்தது. அவுஸ்திரேலியாவின் சர்வதேசிய உதவி வழங்கும் திட்டத்தின்கீழ் சில விரிவுரைகளை நடத்துவதற்குச் சீன அரசால் அழைக்கப்பட்டிருந்தேன்.
‘இது உல்லாசப் பயணம் இல்லை. வேலை விஷயம்! நீ அங்கு என்ன செய்யப் போகிறாய்?’ என்றேன் கடிதத்தை மடித்து மீண்டும். உறையில் போட்டவாறே.
‘அவளை ஒருக்கா கூட்டிக்கொண்டுதான் போங்கோவன். அவளும் பிறந்ததிற்கு அவுஸ்திரேலியாவை விட்டு வெளியே போகவில்லை. அவளைப் பாக்கிறதுக்கு வேணுமெண்டால் நானும் வாறன்’, என்ற குண்டைத் தூக்கிப் போட்டாள் மனைவி.
இனி பேசிப் பயனில்லை! மூவரின் பிரயாணத்திற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டேன்.
‘ஹொங் கொங்’ (Hong Kong) ஊடாகப் பறந்து, நன்னிங் விமான நிலையத்தில் இறங்கினோம். இது சீனாவின் தென் மாகாணங்களுள் ஒன்றான குவாங்சௌவின் (Guangzhou) தலைநகரம். இங்கு சீனாவின் சிறுபாண்மை இனம் ஒன்று பெரும்பான்மை. ஆதலால் மட்டுப்படுத்தப்பட்ட சுயநிர்ணய உரிமையைப் பெற்றிருந்தார்கள். இருப்பினும் இங்கு நான் சந்தித்த நிறைவேற்று அதிகாரிகள் பலரும், மத்திய அரசால் அனுப்பட்ட பெரும்பான்மை இனத்தவர்களே.
இம்மாநிலத்தின் பொருளாதார வளத்தை விமான நிலையமே எடுத்துகாட்டியது. விமான நிலையத்தின் உள்ளும் புறமும் நிலத்தில் போடப்பட்ட சிகரெற்கட்டைகளும், இருக்கைக்குக் கீழே தட்டிவிடப்பட்ட சாம்பல்களும், குப்பைத்தொட்டியைச் சூழ விழுந்த எச்சில்களும், மகளின் எதிர்பார்ப்புக்கு மாறாக இருந்ததை அவளின் முகத்தில் காட்டிக் கொண்டாள்.
மகளின் வகுப்பில் பல சீனர்கள் படிக்கிறார்கள். அவர்கள் ஹொங்கொங்கில் இருந்து அவுஸ்திரேலியாவிற்குக் குடி பெயர்ந்தவர்களாக இருக்கவேண்டும். பலர் பெரிய வீடுகளும் ஆடம்பரக் கார்களும் வைத்திருப்பார்கள். ஏழைச் சீனர்களை அவள் இதுவரை கண்டதே இல்லை. சீனர்கள் எல்லோரும் வியாபாரத்தில் பெரும் பணம் சம்பாதிப்பவர்கள் என்பதே அவளது எண்ணம்.
எனது பெயர் எழுதிய மட்டையுடன் சீனன் ஒருவன் காத்திருந்தான். அவனிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். தனது பெயர் ‘லியொங்’ என்றும், எமது நலன்களைக் கவனிக்க அமர்த்தப்பட்ட அதிகாரி என்றும் ஆங்கிலத்தில் கூறினான்.
விமானநிலையை சம்பிரதாயங்கள் முடிந்து விருந்தினர் விடுதிக்குச் செல்ல காலை பதினொரு மணியாகி விட்டது.
‘ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். நான் எனது அலுவலகம் செல்ல வேண்டும். மதிய உணவின் பின் தூங்கிவிட்டு மாலை மூன்று மணிபோல் வருகிறேன்’ என்றான் லியொங்.
‘தூங்கிவிட்டா…?’ என இழுத்தாள் மனைவி அதிகப்பிரசங்கித்தனமாக.
‘சிறியதொரு குட்டித் தூக்கம்! காலை ஏழு மணிக்குத் தொடங்கினால் பன்னிரண்டு மணிவரை வேலை. பின்னர் வீடு சென்று மதிய உணவு உண்டபின் மாலை மூன்றுமணிவரை தூங்கிவிட்டு ஆறுமணிவரை வேலை செய்வோம். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தொழிற்சாலைக்கும் அருகே வேலை செய்பவர்களுக்கென வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளார்கள். மதியம் தூங்குவதால் புத்துணர்ச்சியுடன் வேலை செய்ய முடிகிறது’ என்றான் தனது கடிகாரத்தைப் பார்த்தவாறே. அவனுக்கு நித்திரை கொள்ளும் அவசரம்.
‘இவர்கள் மதியம் என்ன உணவு சாப்பிடுவார்கள்…’ தாயைக் கேட்டாள் மகள்.
‘பிரதான உணவே சோறுதான். அதை அவர்கள் வெவ்வேறு வடிவில் சாப்பிடுவார்கள். நூடில்சும் அவர்கள் விரும்பிச் சாப்பிடுவதுண்டு’ என்றேன் மனைவி பதில் கூறமுன்பு.
‘அப்படியானால் அப்பா வேலை செய்வதற்கு ஏற்ற இடம் சீனாதான்’ என்றாள் மகள் சிரித்துக்கொண்டே.
மதிய உணவிற்குப் பின் குட்டித்தூக்கம் போடுவதிலே நான் மகா சுகம் காண்பவன். மத்தியான வெயில் ஆளைப்பொசுக்கும். வெளியே வேலைசெய்ய முடியாது. விடப்படும் மூன்றுமணித்தியால லீவு அவர்களின் வேலைத்திறனை அதிகரிக்கிறது. வெப்ப வலையத்திலுள்ள எல்லா நாடுகளிலும் இதை அவசியம் அமல்படுத்த வேண்டும் என, நித்திரைக்கு வக்காலத்து வாங்கினேன்.
சொல்லி வைத்தாற்போல் மீண்டும் மூன்றுமணிக்கு வந்தான் லியொங். வந்தவன், ‘வாருங்கள் கடைக்குப் போவோம். உங்களுக்கு சில பொருட்கள் வாங்க வேண்டும்’ என்றான்.
‘எமக்கு எதுவுமே தேவையில்லை. தேவையானது எல்லாம் நாம் கொண்டுவந்தோம். மனைவிக்கும் மகளுக்குரிய செலவை நான் கொடுத்து விடுகிறேன்’ என்றேன் கண்ணியமாக.
‘நீங்கள் எதுவுமே கொடுக்கவேண்டாம். உங்கள் செலவிற்காக என்னிடம் பணம் தரப்பட்டுள்ளது. வாருங்கள் கடைத்தெருவிற்குப் போவோம்’ என அவசரப்படுத்தினான்.
கார் ஒரு வித்தியாசமான கடையின்முன் நின்றது. அங்கு மற்றக் கடைகளில் இல்லாத எல்லா ஆடம்பரப் பொருட்களும் காணப்பட்டன.
‘இந்தக் கடையில் சாமான் வாங்குவதனால் பிரத்தியேக சீனக்காசு கொடுத்தல்வேண்டும். அதற்குப் பெயர் RMB யுவான் (Year 2000). வங்கியில் டொலரை மாற்றுவதன் மூலம்தான் இதைப் பெறமுடியும். அரச விருந்தினர் வந்தால் அனுமதி பெற்று இப்பணத்தை வங்கியில் பெற்றுக்கொள்வோம்’ என்றான் லியொங்.
‘சீன மக்களிடம் இந்தப்பணம் புழங்காதா..?’ மனைவி ஆர்வம் மேலிடக் கேட்டாள்.
‘அவர்களிடம் சாதாரண யுவான்தான் இருக்கும். யாராவது டொலர் போன்ற மேற்குலகப் பணம் வைத்திருந்தால் அது எங்கிருந்து பெறப்பட்டது என்ற விபரத்துடன் வங்கியில் மாற்றிய பின்பே, இக்கடையில் வாங்கமுடியும். இந்த நடைமுறை விரைவில் நீக்கப்படவிருக்கிறது. stock-vector-cop-writing-ticket-retro-clip-art-60133603[1]நீங்கள் அடுத்தமுறை வரும்போது நேரடியாகவே இக்கடைகளில் டொலரைக் கொடுத்துப் பொருள்களை வாங்கமுடியும்’ என சீனாவில் வேறுபட்ட பணப் புழக்கத்துக்கு விளக்கம் கொடுத்தான் லியொங்.
கடைக்குள் அனைவரும் சென்றோம். கார்சாரதி கூடவே வந்தான். அவுஸ்திரேலியக் கடைகளில் சாதாரணமாக கிடைக்கும் அனைத்துப் பொருள்களும் அங்கு அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
எங்களை எதுவும் கேட்காமலே இரண்டு கூடைகளில் கார் சாரதியும் லியொங்கும் மளமளவென சாமான்களை எடுத்துப்போட்டனர். நெஸ்கபே, ஸம்பு, சவர்க்காரம், சுவிங்கம், சொக்கிளேற் எனப் பொருள்கள் கூடைகளில் நிரம்பி வழிந்தன.
பணத்தைக் கொடுத்தபின் சாமான்களை மூன்றாகப் பிரித்துப் பைகளில் போட்டான். ஒன்றை எனக்கு நீட்டினான்.
‘இவை எதுவுமே எமக்குத் தேவையில்லை. நாம் வரும் போது கொண்டுவந்தோம்’ என்றாள் மனைவி.
‘இல்லை எடுத்துக் கொள்ளுங்கள்’ என வற்புறுத்தினான் அவன். சுவிங்கத்தையும் சொக்கிளேற்றையும் மாத்திரம் மகள் எடுத்துக்கொள்ள மிகுதியை லியொங்கிடம் கொடுத்தேன்.
அவற்றில் உள்ளவற்றை பிரித்துத் தனது பையிலும் சாரதியின் பையிலும் போட்டுக் கொண்டவன் ஒரு பையை சாரதியிடம் கொடுத்தான். எங்களைப்பார்த்து சிரித்தபடியே தலையை ஆட்டி நன்றி தெரிவித்தான் கார்சாரதி. அவனுக்கு ஆங்கிலம் பேசத்தெரியாது.
மனைவிக்கோ இவனது செய்கைகயை மிகுந்த எரிச்சலை ஊட்டின. விடுதிக்கு வந்தவுடன் இதுபற்றிக் கேட்டாள்.
‘உண்மைதான். எமக்கென ஒதுக்கப்படட பணத்தில் தான் எல்லாவற்றையும்; வாங்கிக்கொண்டான். மேற்குலக நாடுகளுக்கு சென்றால் எமக்குரிய பணத்தை எமது கையில் கொடுத்து விடுவார்கள். மொழி தெரியாத இடத்தில் இப்படியான ஒழுங்கீனம் நடப்பது இயற்கைதான். அவர்களுக்கும் இப்படியான பொருள்களை வாங்குவதற்கு இதுதான் சந்தர்ப்பம். இதில் உனக்கென்ன குறையப் போகிறது?’
‘என்னதான் இருந்தாலும் இப்படி ஒரு ஊழலா…? என்னால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை’ என முணுமுணுத்தாள்.
இரவுச் சாப்பாட்டிற்கு நகரத்தில் உள்ள விலை உயர்ந்த றெஸ்ரோறன்றுக்கே எங்களை அவன் அழைத்துச் செல்வான். அப்பொழுதெல்லாம் தன்னுடன் தன் கந்தோர் நண்பர்களையும் அழைத்துவருவான். சில சமயங்களில் அவனது நண்பிகள் சிலரும் கலந்து கொள்வதுண்டு.
‘நல்லவேளை! நாங்களும் வந்தது. இல்லாவிட்டில் இவங்களோடை என்ன கூத்தடிச்சிருப்பியளோ..?’ நாள் பூராகவும் நச்சரித்தாள் மனைவி.
விரிவுரை தொடங்கிவிட்டது. லியொங்கும் எம்மை அன்புடன் கவனித்துக் கொண்டான். கேட்டவை கேட்டவுடன் கிடைத்தன. இருப்பினும் எம்மை ‘அந்த’க் கடைக்கு அழைத்துச்சென்று ‘எமக்கு’ என்ற சாட்டில் சாமான் வாங்குவதும், விலை உயர்ந்த றெஸ்ரொன்ற்றுக்கு எம்மை அழைத்துச் சென்று தமது சகாக்களுடன் கும்மாளமடிப்பதும் ஏனோ எனது மனதை அரித்தது. நாட்டின் அபிவிருத்திக்கென வழங்கப்படும் பணம் இவ்வாறு செலவு செய்யப்படுவதற்கு நான் காரணமாக இருக்கிறேனோ என்ற எண்ணம் வாட்டியது. எப்படி அவனைக் கேட்பது என்ற தயக்கம்.
அன்றும் அந்தக் கடைக்குச் சென்று நிறையப் பொருள்களை வாங்கியிருந்தான் லியொங். அதில் அரைப் போத்தல் விஸ்கியும் அடங்கும். சாரதியுடன் ஒரு மூலைக்குச் சென்ற லியொங், போத்தலைத் திறந்து குடிக்கத் தொடங்கினான். என்னையும் அழைத்தான். மனைவி என்னைப் போகவிடாது பார்வையாலேயே தடுத்தாள்.
மகள் விடுதிக்குச் செல்லவேண்டுமென்று அடம் பிடிக்கவே அனைவரும் காரில் ஏறிக்கொண்டோம். வழக்கம் போலவே சுவிங்கத்தையும் சொக்கிளேற்றையும் எனது மகளிடம் கொடுத்தவாறே, ‘உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?’ எனக் கேட்டான்.
‘விரல்களை விரித்துக்காட்டி மூன்று’ என்றாள் மனைவி.
‘முன்றா..?’ வாயைப் பிளந்தான் லியொங்.
‘எனக்கு ஒரு பெண்குழந்தை மாத்திரம்தான் இருக்கிறது. ஆண் குழந்தையொன்று பெற்றெடுக்க ஆசைதான். ஆனால் எமது நாட்டின் ‘ஒரு குழந்தை மட்டும்’ சட்டம் அதற்கு இடம்தராது’ என்றான் விரக்தி கலந்த தொனியில். (இரண்டு குழந்தைகள் பெறலாம் என்ற சட்டம் இப்பொழுது (2016) படிப்படியாக அமுல் படுத்தப்படுகிறது.)
‘எதிர்பாராதவிதமாக இரண்டாவது குழந்தை கருத்தரித்தால்…?’ அப்பாவியாக மனைவி கேட்டாள்.
‘அந்தக் குழந்தையை அழிப்பதைத்தவிர வேறு வழியில்லை. இரண்டாவது குழந்தை பிறந்தால் அதற்கு எதுவித அரச உதவியும் கிடைக்காது. பாடசாலைகளில் இடம், கல்விப் பணம் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற அனைத்திற்கும் அரசு உத்தரவாதம் அளிக்காது’ என்றான் லியொங்.
‘முதல்தரமே இரட்டைக் குழந்தைகள் பிறந்துவிட்டால் என்ன செய்வர்கள்..?’ என மகள் கேட்டவுடன் அனைவரும் சிரித்துவிட்டோம்.
‘இரட்டைக் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம்தான்! அதற்கு அரச சட்டத்தில் இடமிருக்கிறது. குடும்பத்தில் ஒரு குழந்தை மாத்திரம் வளர்வதால் அவர்கள் பரஸ்பரம் கொடுத்து வாங்கும் பழக்கும் அற்றவர்களாக வாழப் பழகுகிறார்கள். இது எதிர்காலத்தில் சுயநலம் மிக்க சமுதாயத்தை உருவாக்கும்’ என்றான் லியொங்.
விஸ்கி தனது வேலையைத் தொடங்கியிருக்க வேண்டும். அட்டகாசமாகச் சிரித்தவாறே லியொங்கும், சாரதியும் தமது மொழியில் ஏதேதோ பேசிக்கொண்டார்கள். வழக்கத்துக்கு மாறாக வேகமாகக் கார் ஓடிக் கொண்டிருந்தது.
சைரன் சத்தத்துடனும் சைகை விளக்குடனும் பின்னால் துரத்திவந்த பொலீஸ் வாகனம் எமது காரை மறித்தது.
இரு பொலீஸ் உத்தியோகத்தர்கள் இறங்கி வந்தார்கள். மதுவின் மணம் மூக்கைத் துளைக்கவே அதையும் பரிசோதித்து உறுதி செய்து கொண்டார்கள். குற்றப் புத்தகத்தை எடுத்த எழுத ஆயத்தமானான் பொலீஸ்காரன்.
அவசர அவசரமாக இறங்கிய லியொங் அவனுடன் பேரம் பேசத் தொடங்கினான். கையை அசைத்து உடம்பை ஆட்டி உரத்த தொனியில் இருவரும் பேசிக்கொண்டனர். பாஷை விளங்கா விட்டாலும் லஞ்சத் தொகைக்கு பேரம் நடப்பதைப் புரிந்து கொண்டேன். இறுதியில் பணம் கைமாறியது.
பணத்தை வாங்கிய பொலீஸ்காரன், அரைவாசியை எண்ணி மற்றவனிடம் கொடுத்துவிட்டு மிகுதியைத் தன் தொப்பியின் உள்புறத்தில் மறைத்துக் கொண்டான். மற்றவனோ தமனது பேஸை எடுத்தான். அதன் ஒரு பக்கத்தில் மாசேதுங்கின் படம் வைக்கப்பட்டிருந்தது. அதற்குப் பின்னால் காசை மூன்று, நான்கு பகுதியாக மடித்து மறைவாகச் செருகிக் கொண்டான்.
மனைவி அனைத்தையும் பீதி கலந்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் இன்னமும் உலகம் அடிபடாதவள்.
பயணம் தொடர்ந்தது. பொலீஸ் மறித்தபின் நிதானமாகவே காரை ஓட்டினான் சாரதி.
‘கொம்மினிஸ்ட் (communist) நாடொன்றில் இப்படியெல்லாம் நடக்குமென்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை’ என்றாள் மனைவி விடுதிக்கு வந்ததும் வராததுமாக.
‘ஆடம்பரத்தை விரும்புவது மனித சுபாவம், இதை அனுபவிக்க அவனுக்கு வேறு சந்தர்ப்பம் கிடைக்காது. ஒன்றைமட்டும் கவனித்தாயா? ஊழலிலும் லஞ்சத்திலும் ஊறிப்போனாலும் அவன் சமத்துவத்தை மறக்கவில்லை. எமது கணக்கில் பொருட்களை வாங்கினாலும் சாரதியுடன் சாமான்களைப் பகிர்ந்து கொண்டானே…’ என்ற என்னை இடைமறித்த மகள், ‘பொலீஸ்காரனும் கிடைத்த லஞ்ச பணத்தை சமமாகப் பிரித்துக் கொண்டதை கண்டீர்களா அப்பா?’ என்றாள்.
‘சீனாவிற்கு வெளியே வாழும் எந்தச் சீனனிடமும் இந்தப் பண்பைப் பார்த்திருக்கமாட்டாய். அவன் சுயநலம் மிக்கவனாகவே இருப்பான்’ என்று லியொங்கை நியாயப்படுத்த முயன்றேன்.
‘கொம்மினிஸ்ட்(Communist) தத்துவத்தின் எந்த அத்தியாயத்தில் இது சொல்லப்பட்டிருக்கிறது…?’ என்று கேட்டாள் மனைவி குத்தலாக.
கொம்மினிஸம்(Communism) ஒரு முன்மாதிரியான தத்துவம். Ideal என வைத்துக் கொள்ளேன்! சீனா போன்ற நாடுகளில் கடைப்பிடிக்க முயல்வதெல்லாம் இதன் முதல்படியான சோஷலிசம் தான். Ideal ஆன ஒரு விடயத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவது கஷ்டம்…’
‘அதனாலேதான் சோஷலிசம் தோல்வியைத் தழுவிக் கொண்டதோ?’ என்றாள் மனைவி வாங்கிய சாமான்களை குளிர்பெட்டிக்குள் அடுக்கியவாறே.
‘சோஷலிசம் ஒருபோதும் தோல்வி அடையவில்லை. அதைக் கடைப்பிடித்த முறைதான் தோல்வியைத் தழுவிக் கொண்டது. ஊழல் லஞ்சம் என்று தலையில் அடித்துக் கொள்கிறாயே…? அவன் செய்த ஊழலில் உனக்கும் பங்கிருக்கென்பதை மறந்துவிட்டாயா?’ என்றேன் மனைவியின் வாயை அடக்கும் நோக்குடன்.
‘எனக்கும் பங்கா..?’ என்றாள் கோபம் பொங்க.
‘உனக்கும் மகளுக்கும் செலவுசெய்யும் பணம் எந்த வகையில் அடங்கும்? உங்களுக்காக எழுதும் கள்ளக் கணக்குடன் அவனுக்கும் தோழர்களுக்கும் சேர்த்து எழுதட்டுமே’ என்றேன்.
மறுகணம், நடைமுறை சோஷலிசம் பற்றிய சிந்தனைகளிலே என் மனம் மூழ்கலாயிற்று.
ஆசி கந்தராஜா (2000)