பறிப்பதும் ஏதுக்கடி
பறிப்பதும் ஏதுக்கடி?
18 / 07 / 2025
செவிடர்கள் கூட்டத்தில் - கீதா
உபதேசங்கள் ஏதுக்கடி? - குதம்பாய்
கீதா உபதேசங்கள் ஏதுக்கடி?
குருடர்கள் மாநாட்டில் - வண்ண
ஓவியங்கள் ஏதுக்கடி? - குதம்பாய்
வண்ண ஓவியங்கள் ஏதுக்கடி?
குடி எதிர்ப்பு போராட்டத்தில்
மதுவிருந்து ஏதுக்கடி? - குதம்பாய்
மயக்கும் மதுவிருந்து ஏதுக்கடி?
குரூர மனம் மறைக்க
முகமூடி ஏதுக்கடி? - குதம்பாய்
புன்னகைக்கும் முகமூடி ஏதுக்கடி?
முடியாதென தெரிந்தும் முடியுமென
பொய் வாக்குகள் ஏதுக்கடி? - குதம்பாய்
ஏமாற்றும் பொய் வாக்குகள் ஏதுக்கடி?
சக மனிதன் என்று தெரிந்தும்
மனிதநேயம் மறந்தது ஏதுக்கடி? - குதம்பாய்
மனிதநேயம் மறுப்பது ஏதுக்கடி?
உன்னுரிமைக்காய் மற்றவர்
உரிமைகள் பறிப்பது ஏதுக்கடி? - குதம்பாய்
உரிமைகள் பறிப்பதும் ஏதுக்கடி?