நிலா காயும் இரவினிலே - 4

பாகம் - 4 :

மாடி படிகளில் இறங்கி வருகிற அரவிந்தன், தன் அப்பா கையில் வாளியோடு நிற்பதைப் பார்க்கிறான். என்ன அப்பா கையில வாளியோடு நிக்கிறீங்க என்று கேட்க, பொண்ணு வீட்டுக்கு இந்தப் பலகாரத்தக் கொடுக்கச் சொல்லி அம்மா கொடுத்தா அதான் கிளம்பிட்டு இருக்கேன் என்றார் அப்பா ராசேந்திரன். அவ்வளவு தானே இங்க கொடுங்க நானே போய் கொடுத்திட்டு வாறேன் என்று சொல்லி பிடுங்கிட்டுப் போனான். டேய்... டேய்... பாத்துடா என்று சொல்ல, அவன் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்று விட்டான். நானும் ஒரு காலத்துல அப்படித் தானே என்று மனசுக்குள்ளே ராசேந்திரன் சொல்லிக் கொண்டார்.

அந்தச் சிறிய சாலையில் மெல்லிய புகையைக் கக்கிக் கொண்டு வாகனம் செல்கிறது. சற்றுத் தூரத்தில் ஒரு மஞ்சள் வண்ணம் பூசப்பட்டு நடுத்தரமான அடுக்குமாடி தென்படுகிறது. அங்குத்தான் காயத்திரியும் அவள் குடும்பமும், தோழிகளும் தங்க வைக்கப் பட்டுள்ளார்கள். வீட்டு வாசலில் நான்கு சக்கர சொகுசு வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவன் வாகனத்தை வெளியிலே நிறுத்தி விட்டு உள்ளே நுழைகிறான். உள்ளே இளமைக்கும் முதுமைக்கும் நடுப்புள்ளியில் இருக்கும் மாமா ரவிசங்கரும் அத்தை கண்மணியும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அரவிந்தன் உள்ளே நுழைவதைப் பார்த்து விட்டு வா..ப்பா, என்ன சேதியா என்று அத்தை கேட்க, இல்ல அத்தை, அம்மா பலகாரம் கொடுத்துவிட்டாங்க என்று சொன்னான். எங்க மாப்புள பலகாரம் என்று மாமா அவன் கைகளைப் பார்த்துக் கேட்க, அப்பத்தான் அவனுக்குப் பலகாரத்த வண்டியிலேயே விட்டுட்டு வந்துட்டோமே என்ற ஞாபகம் வந்தது. தலையை இலேசாக கோதிக்கிட்டே வண்டியிலேயே வச்சிட்டேன் மாமா, இந்தா எடுத்திட்டு வந்துடுறேன் என்று சொல்லி எடுத்து வந்து கொடுத்தான். மூன்று பேருக்கும் உதட்டில் புன்னகை ததும்பிக் கொண்டிருந்தது.

சரி மாமா நான் வாறேன் என்று சொல்லி கிளம்பினான் அரவிந்தன். இருங்க மாப்புள என்று அத்தை கண்மணி சொல்ல, போயிட்டு அப்பறம் வர்றேன் அத்தை என்று சொல்லி வாகனத்தை இயக்கிப் புறப்பட்டான். அந்தச் சிறிய சாலையின் எதிர்திசையில் நான்கு சக்கர வாடகை வாகனம் வந்து கொண்டிருந்தது. இவன் பக்கத்தில் அந்த வாகனம் நெருங்கியதும் தம்பி.. தம்பி.. என்று குரல் கேட்க வண்டியை நிறுத்தி யாரென்று எட்டிப் பார்த்தான் அரவிந்தன். தம்பி.. இங்க மஞ்சள் வண்ணம் பூசப்பட்ட வீடு எங்கே இருக்கிறது என்று வாகனத்தை ஓட்டி வந்தவர் கேட்டார். அதோ அங்கத் தெரியுது பாருங்க அதான் என்று கைநீட்டி காமித்தான். ஆமாம் அங்க யார பாக்கப் போறீங்க என்று அவரைப் பார்த்து கேட்டான் அரவிந்தன்.

வணக்கம் அரவிந்தன் என்று தேனில் தோய்ந்த குயிலின் குரலோடு மங்கையவள் வாகனக் கதவைத் திறந்தாள். நந்தவனச் சோலைகளில் துள்ளி குதிக்கும் அந்தப் புள்ளி மானைப்போல வெள்ளை வண்ணச் சுடிதாரில் இந்தச் சாலையில் இறங்கி நின்றாள் மங்கை மான். சித்திரத்தில் மலர்ந்த செந்தாமாரை போன்று முகமிருக்க, இமைகள் என்ற குடைக்குள்ளே குவளை மலர் இரண்டு அசைந்தாட, தலையில் ஒரு கருப்புப் பேரருவி காற்றினில் கலைந்து நெளிந்தாட அழகுக்கே புது உவமை கூறும் அழகினைக் கொண்டவள் என்று சொன்னால் அது மிகையாகாது. சிற்பத்திற்கு இலக்கணம் கூற பிரம்மன் இவளைப் படைத்துப் பூமிக்கு அனுப்பியிருக்கக் கூடும்.

வணக்கம் அரவிந்தன் என்று சொல்லிக் கொண்டே கதவைத் திறந்து இவள் இறங்கியதும், அவள் யாரென்று தெரியாம திருத்திருவென்று இவன் விழித்தான். அரவிந்தன், நான் காயத்திரி தோழி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். என்னை எப்படி உனக்குத் தெரியும் என்று இவன் கேட்க, ஒன்னோட படத்தைக் காயத்திரி அனுப்பியிருந்தா அதான் பாத்ததும் கண்டுபிடிச்சிட்டேன். சில நொடிகளில் அங்கிருந்து கிளம்ப தயாரானார்கள். இவன் தன் வண்டியைத் திருப்பி முன்னடி செல்ல, அவளை ஏற்றிக் கொண்டு அந்த வாகனம் அவனைப் பின் தொடர்கிறது. அந்த மஞ்சள் வண்ணம் பூசப்பட்ட வீட்டின் வாசலில் அவளை உதிர்த்து விட்டு அவள் வந்த வாகனம் செல்கிறது. வா.. உள்ளே போவோம் என்று அவன் அழைக்க, கையில் ஒரு துணிக்கடை பையுடன் வாயிற்கதவைத் தாண்டி வந்தாள்.

மாமா ரவிசங்கரும் அத்தை கண்மணியும் அட!... வாம்மா... வாம்மா... ஒன்ன பாத்து எவ்வளவு நாளாச்சு என்றனர். ஏம்மா நிச்சயத்துக்கு வல்ல என்று கண்மணி கேட்க, இல்லப்பா வர்றதுக்குத்தான் நெனைச்சிட்டு இருந்தேன் ஆனா கடைசில வர முடியாம போச்சு என்று பதில் சொன்னாள். இரண்டு நாளா காயத்திரி நீ எப்ப வருவே எப்ப வருவேனு ஒன்ன பத்திதான் நெனைச்சிட்டு இருந்தா, உள்ளே வாம்மா போவோம். காயத்திரி ஏ.. காயத்திரி என்று கல்யாணி கூச்சலிட, ஏ.. காயத்திரி ஒன்ன அம்மா கூப்புடுறாங்கடி என்று அமுதா கூறினாள். ஏ.. காயத்திரி என்று மீண்டும் கண்மணி கூப்புட, அம்மா கூப்புடுறாங்க இருங்கடி வந்துடுறேன் என்றாள் காயத்திரி. இருடி நாங்களும் வர்றோம் என்று நீலவேணி கூற, எல்லாரும் கீழே இறங்கி வந்தனர்.

அந்நேரம் அரவிந்தனின் அலைபேசி மணி ஒலிக்க, ஒரு நிமிடம் இருங்க பேசிட்டு வந்துடுறேன் என்று மூவரிடமும் சொல்லி விட்டுப் பேச சென்றான். அது வேறயாரும் இல்ல, மணிதான். என்னடா என்று அரவிந்தன் கேட்க, எங்கள ஏன்டா கூட்டிட்டுப் போகல என்று கொஞ்சம் கோபமாக பேச மற்ற இருவரும் சேர்ந்து கோபத்தோடு பேசினர். டேய்.. நான் சும்மா பலகாரம் கொடுக்கத் தான்டா வந்தேன். கொஞ்சம் பொறுங்கடா நான் அங்க வர்றேன் என்று மெதுவா சொல்லி அழைப்பைத் துண்டித்தான். என்னடா இவன் வர்றேனு சொல்லி அழைப்பைத் துண்டிச்சிட்டான்டா.

அரவிந்தன் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த வேளையில்... ஏ... ஏஞ்சல் எப்படி வந்த என்று காயத்திரியும் அவள் தோழிகளும் துள்ளி குதித்து வந்து ஒவ்வொருவராய் அணைத்துக் கொண்டார்கள். இப்பதான்டி வந்தேன் என்று ஏஞ்சல் பதில் சொன்னாள். ரெண்டு நாளைக்கு முன்னே வாறேனு சொன்ன என்று காயத்திரி கேட்க, இல்லடி சொந்த வாகனத்துல வரலாமுனு திட்டம் போட்டிருந்தேன் ஆனா கடைசில எல்லாம் சொதப்பிடுச்சு என்றாள். ஏன் என்னாச்சு என்று காயத்திரி மீண்டும் கேட்க, தனியா இவ்வளவு தூரம் வாகனத்துல போகக் கூடாதுனு சொல்லிட்டாங்கடி அதான் கிளம்ப தாமதமாயிடுச்சு... கோச்சுக்காதடி என்றாள் ஏஞ்சல். அலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு வார்த்தைச் சொல்லிருக்க வேண்டியது தானே, என் அலைபேசி வரும் போது தொலைஞ்சிட்டுடி அதான் சொல்ல முடியலடி என்று சொல்லி முடித்தாள்.

உன் முகத்துல ஏதோ?... வித்தியாசம் தெரியுதே என்னடி அது என்று நீலவேணி கேட்க, என் முகத்துலேயா இல்ல கல்யாணப் பொண்ணு முகத்துலேயா என்று சொல்லி இங்க பாரு என்று காயத்திரி முகத்தினைக் கைகாட்டி சிரித்தாள். கால் சதங்கையைத் தரையில் உருட்டி விட்டதைப் போல் ஒரு இனிய ஓசை அது. மெய் மறந்து கேட்டுக் கொண்டே இருக்கலாம், அத்தனை இனிமை அவள் சிரிப்பில்.


தொடரும்...

எழுதியவர் : இதயம் விஜய் (18-Jul-19, 11:24 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 147

மேலே