சில மனிதர்கள் சில விதம்

"சுமதி..."

"ம்ம்ம்."

"ஏய் சுமதி கூப்பிடுறேன்ல."

"என்ன நொய் நொய்ங்குற. இங்க தானே இருக்கேன் சொல்லிதொலையேன்."

"நீ ரேங்க்கார்டுல அப்பாகிட்ட கையெழுத்து வாங்கிட்டியா.?"

"ஓ.. வாங்கிட்டேன்னே. நீ இன்னும் வாங்கலயா.?"

"வாங்கல."

"ஏன்டா ஸ்கூல்ல ரேங்க்கார்டு கொடுக்கலயா.?"

"அதெல்லாம் கொடுத்துட்டாங்க."

"அப்புறம் என்ன? போய் வாங்க வேண்டியது தானே.?"

"இல்..ல."

"என்ன இல்ல."

"இந்தவாட்டியும் ரேங்க் குறைஞ்சுடுச்சு."

"அய்யயோ. போச்சா."

"இப்போ என்ன பண்ணுறது.?"

"ம்ம்ம்.. போய் உதை வாங்கு."

"......."

"என்ன அமைதியா இருக்க? நல்லா படிச்சிருக்கலாம்ல."

"நல்லா தான் படிச்சேன்."

"கிழிச்ச, நீ படிச்ச முறை தான் எனக்குத் தெரியுமே."

"நானே Sign பண்ணி ஸ்கூல்ல கொடுக்கப் போறேன்."

"அப்பாக்குத் தெரிஞ்சது அவ்வளவு தான்.!"

"......."

"அந்த பயம் இருக்குல்ல. போய் வாங்கு போ." வருண் தயங்கினான்.

வருணின் அப்பா மூர்த்தி அரசாங்கத்தில் நல்ல வேலையில் இருப்பவர். கண்டிப்பான அதிகாரி என்று பெயர் எடுத்தவர். ஊரில் எந்த பஞ்சாயத்து நடந்தாலும் முதல் ஆளாய் சென்று அறிவுரை சொல்பவர். வருண் பத்தாம் வகுப்பும், சுமதி பதினொன்றும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். வருண் படிப்பில் எப்போதும் சுமார் தான். ஒவ்வொரு முறை மதிப்பெண் அட்டையில் கையெழுத்து வாங்கும் போதும் வருணுக்கு வீட்டில் சின்ன சொற்பொழிவே நடக்கும். கடந்த தேர்வின் போதே கடுமையாக எச்சரித்தார். வருண் மறுபடியும் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்து விட்டான்.

இரவு பணி முடித்து வரும் போதே மூர்த்தி கோவமாய் தான் வந்தார். இரவு உணவின் போது அங்கலாய்க்க ஆரம்பித்து விட்டார்.

"ச்சை. ஊரா இது. மனுசங்களா இவனுங்கல்லாம். ஒத்த பயலுக்கும் ஒழுக்கமே இல்ல. ஒவ்வொருத்தனும் இன்னொருத்தன் குடிய கெடுக்கவே அலையிறானுங்க. பாரு இன்னைக்கு ஆபீஸ்ல என்ன நடந்துச்சுன்னா மதியம் சாப்பிட சோறு வாங்கிட்டு வான்னு ஆபிஸ் பியூன்கிட்ட காசு கொடுத்து விட்டேன். வாங்கிட்டு வந்தான். பார்சலை கொடுத்துட்டு அப்படியே போறான். மீதிகாசு எங்கடான்னு கேக்குறேன். ஒரு தினுசா பார்த்துட்டு ரெண்டு ரூபாயை வச்சிட்டு போறான். அவன் அப்படி பார்த்துட்டு போனதும் எனக்கு சுள்ளுன்னு கோவம் வந்திடுச்சு. போய்ட்டு இருந்தவன கூப்பிட்டு ரெண்டு ரூபாய்ன்னா அவ்வளவு இளக்காரமா போச்சா.? அடுத்தவன் பணத்தை அமுக்க ஏன்டா இப்படி அலையிறிங்கன்னு அரைமணி நேரம் சத்தம் போட்ட பின்னாடி தான் அடங்கி மூஞ்சியைத் தொங்கப் போட்டுட்டு போனான்." சாப்பிட்டுக் கொண்டிருந்த வருணைப் பார்த்து,

"நீ சொல்லு ரெண்டு ரூபான்னா அவ்வளவு இளக்காரமா.?

வருண் எச்சிலை விழுங்கியபடி "ல்ல..ப்பா.."

"ம்ம்ம்... நான்லாம் அடுத்தவங்க காசுக்குத் துளி கூட ஆசைப்பட்டது இல்ல என்கிட்ட வாலாட்டுறானுங்க பாத்தியா."

"ஏன்டா மூர்த்தி ரெண்டுரூபா தானடா, அதுக்கு ஏன்டா இப்படி?" என்றார் மூர்த்தியின் அம்மா.

"சும்மா இரும்மா உனக்கு என்ன தெரியும். இவனுங்களையெல்லாம் அப்பவே ஒட்ட நறுக்கி வச்சாதான் பின்னாடி ஆட மாட்டானுங்க." என்று மூர்த்தி பேசிக்கொண்டே போனார்.

இரவு உணவு முடிந்தது. மூர்த்தி வசதியாய் உட்கார்ந்து டிவி பார்க்கத் தொடங்கிருந்தார்.

"ஏய் வருணு, இஞ்சாருடா."

"என்ன?"

"போ.. போய் கையெழுத்து வாங்கிடு."

"சரி." என்றபடி ரேங்க்கார்டை எடுத்துக் கொண்டு தந்தையிடம் போனான்.

"ப்பா..."

"என்னடா?" என்றார் டிவியைப் பார்த்தபடி. பதில் பேசாமல் ரேங்க்கார்டை நீட்டினான். ரேங்க்கார்டை வாங்கிப் பார்த்து வருணை ஏறிட்டுப் பார்த்தார் கோபத்தோடு.

அரைமணி நேரத்திற்குப் பிறகு தொங்கிப் போன முகத்துடன் வெளியே வந்தான். வெளியே பாட்டி சாய்வாக சேரில் உட்காந்திருந்தார். பாட்டியின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான். பாட்டி வருணைக் கவனித்து ஆதரவாய் அவன் தலையைக் கோதி விட்டார்.

"என்ன வருணு என் சோகமா இருக்கே.?"

"ஒன்னும் இல்ல பாட்டி."

"உங்கப்பன் திட்டுனானக்கும். அவன் கிடக்கான் பெரிய யோக்கியன். காதுல வாங்கிக்காத."

"........"

"உங்கப்பனை பத்தி, வளத்த எனக்கு தெரியாது. ஊருக்கு யோக்கியம் சொல்லிட்டு திரியுற உங்கப்பன் உன் வயசுல எப்படி இருந்தான்னு எனக்கு தானே தெரியும். உன்ன நல்லா படிக்கச்சொல்லுற உங்கப்பன் படிக்கும் போது சரியான மக்கு. புக்க கைல தொடமாட்டான். படிச்சி முடிச்சப்போ மகாமட்டமான மார்க்தான் எடுத்திருந்தான் உங்கப்பன். உங்க தாத்தா புண்ணியக்கோடி தான் தன்னோட செல்வாக்கை வச்சி வேலை வாங்கி தந்தது. வருணு இஞ்ச பக்கத்துல வா." வருண் பாட்டியின் அருகில் நெருங்கி அமர்ந்தான்.

"ஆபீஸ்ல ரெண்டு ரூபாய்க்கி கூப்பாடு போட்டு வந்துருக்கானே உங்கப்பன் அவன் சின்ன வயசுல உங்க தாத்தா புண்ணியக்கோடி சட்டைல இருந்து காசு எடுத்து சினிமாவுக்கு போவான். என்னடா சட்டைல காசு காணாம போகுதேன்னு ஒருநாள் ஒளிஞ்சு இருந்து பார்த்தப்போ உங்கப்பன் வசமா மாட்டிக்கிட்டான். அப்புறம் என்ன உரிச்சு உப்பு கண்டம் போட்டுட்டார் உங்க தாத்தா." வருண் மெலிதாக சிரித்தான்.

.......//////....../////....../////....../////.....////

எழுதியவர் : அருள்.ஜெ (24-Jul-19, 7:50 am)
சேர்த்தது : அருள் ஜெ
பார்வை : 179

மேலே