கறிச்சோறு

டும்டும்.. டுமுக்கு டுமுக்கு, டும்டும்.. டுமுக்கு டுமுக்கு.. அந்த அகன்ற ஆலமரத்தடியில் கோடங்கிச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது..

"ஏய்..." என ஆங்காரமாய் உறுமினார் கருப்பசாமி கோவில் சாமியாடி.. கூட்டம் கன்னத்தில் போட்டுக் கொண்டது.

"நான் நாடரிஞ்ச சாமி
குடிசை வீடரிஞ்ச சாமி
மனசால நினைப்பதே எனக்கான மந்திரம்" என பாடிக் கொண்டே கோடங்கியைத் தட்டி ஆடிக் கொண்டிருந்தார் சாமியாடி. மேலே கட்டப்பட்டிருந்த மணிகள் ஒத்திசைத்தன. பெண்கள் குலவையிட்டார்கள். சாமியாடி கருப்பன் சிலைக்குப் பக்கத்தில் இருந்த வீச்சரிவாளை எடுத்துக் கொண்டார்.

"கொண்டு வாங்கடா." இருவர் அவசர அவசரமாக கிடாவைக் கொண்டு வந்தார்கள்.

"மஞ்ச தண்ணிய ஊத்துங்கடா." குடத்திலிருந்த மஞ்சள் கலந்த தண்ணீரை ஊற்றினார்கள். சுற்றி இருந்த கூட்டத்தால் மிரண்டு போயிருந்த கிடா தலையைச் சிலுப்பியது.
"உத்தரவு கிடைச்சுருச்சு." என கூட்டத்தில் இருந்த பெரியவர் பரவசத்துடன் சொல்ல. பெண்கள் குலவையிட்டார்கள். ஆங்காரத்துடன் ஆடிய சாமியாடி வீச்சரிவாளைக் கொண்டு கிடாவின் தலையை வெட்ட கழுத்து துண்டாகியது. சாமியாடி கிடாவின் கழுத்து ரத்தத்தை உறிஞ்சினார். கூட்டம் கன்னத்தில் போட்டுக் கொண்டு குலவையிட ஆரம்பித்தது. சாமியாடி ஆடி முடித்து கருப்பசாமிக்கு சூடம் காட்ட ஆரமித்தார். கூட்டம் வணங்கியது. சூடத்தைக் கண்ணில் ஒற்றிக் கொண்டது.
வெட்டுப்பட்டுக் கிடந்த கிடாவின் உடலை அவசர அவசரமாக சிலர் இழுத்துப் போய் மரத்தில் கட்டி தோலை உறிக்க ஆரம்பித்தனர். பெண்கள் தங்கள் சக உறவுக்கார பெண்களுடன் வசதியாய் உக்கார்ந்து கொண்டு காய்கறிகளை நறுக்க ஆரம்பித்தார்கள். சிறுவர் சிறுமியர் ஆலமர விழுதினில் தொங்கிக்கொண்டு ஊஞ்சல் ஆடி விளையாடிக் கொண்டிருக்க, ஒரு ஓரத்தில் உலை கொதிக்க ஆரம்பித்திருந்தது. கருப்புச் சன்னதியில் கைக் கூப்பி வணங்கிக் கொண்டிருந்தார் சந்திரன்.

"எஞ்சாமி மழத்தண்ணி இல்லாம காடுகரைங்க காஞ்சிக் கடந்தப்போ உன் பீடத்துக்கு வந்து முறையிட்டேன். நல்ல விளைச்சல் கண்டா, கிடா பலிக் கொடுக்குறதாவும் வேண்டிக்கிறேன். உன் கருணையால நல்ல மழையும் நல்ல விளைச்சலும் வந்தது. நான் உன் கிட்ட சொன்ன வாக்கையும் காப்பாத்திட்டேன். ஊருக்கரைங்க மழை பெஞ்சி, காடுகரைங்க செழிச்சு, மனுசமக்கா எல்லோரும் நல்லா இருக்கணும். என்றபடியே திருநீறை எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டார்.
உறவினர்கள் பரபரப்பாக சமையலில் ஈடுபட்டிருந்தார்கள். சாதம் வடித்து இறக்கியாகி விட்டது. கறி வெந்து முடிக்க வேண்டியது தான் பாக்கி. கறி வாசனை எங்கும் பரவி எல்லோரையும் இழுத்துக் கொண்டிருந்தது.

"என்ன தங்கம் குழம்பு வெந்துடுச்சா.?"
"இதோ இன்னும் ஒரு கொதிதான் இறக்கிடலாம்."
"அப்போ சாப்பாட்டுக்கு உக்கார ஏற்பாடு பண்ணிறட்டுமா.?"
"பண்ணிடுங்க."

"என்ன கோய்ந்து மாமா. இப்படி உக்காந்துட்டீக. சாப்பாடு தயார் ஆயுடுச்சுல, வாங்க."
"தோ வர்றோம் மாப்ள நீங்க முன்னாடி போங்க." என்றவாறே மறைவாக கிளாஸ்களை நிரப்பிக் கொள்ள ஆரம்பித்தனர்.
சந்திரன் கிளாஸ்களை நிரப்பிக் கொள்ளவும், மூணு சீட்டு விளையாட அங்கங்கே ஒதுங்கி இருந்தவர்களை எல்லாம் போய் அழைத்து விட்டு, மரத்தடியில் தார்பாயைப் பரப்பினார். ஒவ்வொருவராக வந்து உட்கார்ந்தனர். இலை வைக்கப்பட்டு தண்ணீர் தெளிக்கப்பட, பின் கறிச்சோறு பரிமாறப்பட்டது.

"கீங்.." பைக் ஹாரனை அலற விட்டபடியே பந்தி நடக்கும் இடத்தின் அருகே வண்டியை நிறுத்தினான் முத்துராசு. வண்டி நிறுத்தியதில் ஏற்பட்ட புழுதியால் சிலர் முகம் சுளித்தனர்.
"எலெய் முத்து வண்டிய அங்கிட்டு நிப்பாட்டுன்னா என்ன? சோத்துல புழுதி விழுதுல்லா."
"மாமோய் என் வயிறு எரியுது. இங்க நீங்க விருந்து திண்ணுறீங்களா." என தள்ளாடியபடியே வந்தவன் பொத்தென்று சாப்பாடு வைக்கப்பட்டிருந்த சட்டியின் மீது விழுந்தான். உட்கார்ந்திருந்தவர்கள் எல்லோரும் பதறி எழுந்தார்கள்.
"சரிதான் பய நல்லா குடிச்சுட்டு வந்து நிக்கிறான். இன்னிக்கி பஞ்சாயத்து தான்." என்றார் ஒருவர் தனது பக்கத்திலிருந்தவரிடம்.
எழுந்திருக்க முடியாமல் உழன்று கொண்டிருந்த முத்துராசுவை சிலர் பிடித்துத் தூக்கினர்.

"எலெய் முத்து இப்படியா கண்ணுமண்ணு தெரியாம குடிச்சிட்டு வந்து விழுவ.?" என்றார் சந்திரன்.

"அப்படிதாண்டா விழுவேன். நீயார்ரா கேக்க.?" சந்திரன் அமைதியானார்.
"எப்பா முத்து. ஆயிரம் இருந்தாலும் அவன் உன் அண்ணன்காரன். ஆளு வேறான்னாலும் பொறந்த வயிறு ஒன்னு. உனக்கு மூத்தவன் வேற, மரியாதை இல்லாம பேசாதப்பா." என்றது கூட்டத்தில் ஒரு பெருசு.
"யோவ் பெருசு எங்கப்பன் செத்ததும் சொத்து பிரிக்கிறப்ப நல்லா விளையிற நிலமா இவன் எடுத்துட்டு ஒன்னும் ஒழுங்கா விளையாத நிலத்த எந்தலைல கட்டிட்டு இப்போ இங்க இவன் விருந்து வச்சி கொடுக்க திண்ணுறீங்களா.? வயிறு எரியுதுய்யா."
"இந்தா முத்து எங்களுக்கெல்லாம் ஒன்னும் தெரியாதுன்னு நெனைச்சுட்டு இருக்காத. உங்கப்பன் காலத்துலையே நல்லா விளைஞ்ச நிலம், இப்போ நீ வச்சிருக்குற நிலம் தான். காலங்காலமா விவசாயம் நடந்ததும் நீ வச்சிருக்குற நிலம் தான். உங்கண்ணன் வச்சிருக்குற இடம் அப்போ கருவேலம் விளஞ்சி ஒன்னுமில்லாம கிடந்தது. உங்கண்ணன் எவ்வளவு உழைச்சி அத நல்ல நிலமா மாத்துனான்னு எங்களுக்கெல்லாம் நல்லாவே தெரியும். அது மட்டும் இல்ல. நியாயப்படி பாத்தா உன் நிலம் உங்கண்ணனுக்கு சேர்ந்திருக்க வேண்டியது. நீ அப்போ இந்த இடம் தான் வேணும்ன்னு பஞ்சாயத்து பண்ண, உங்கண்ணன்னும் பெரியமனசு பண்ணி விட்டு தந்தான். ஒன்னும் இல்லாத இடத்தை அவன் எடுத்துகிட்டான். அதை பெருமுயற்சி பண்ணி நல்லா மாத்தி உழவும் பண்ணி காட்டிருக்கான். நீ என்ன பண்ண?
இருக்கிறதை குடிச்சி கெடுத்த. நல்லா விளையுற இடத்துல ரசாயனமா தொளிச்சி தொளிச்சி அதை ஒன்னும் இல்லாம ஆக்குன. நல்லா உழச்சா தாண்டா லாபம். ஒழுங்கா உழவு பண்ணாம காலஞ்தெரிஞ்சி விதைக்காம, கண்ட கண்ட ரசாயனமா மண்ணில போட்டா விளையுமா.?

"யோவ் பெருசு நீ சொல்ற அட்வைச கேக்க நா இங்க வரல. எனக்கு ரெண்டுல ஒன்னு தெரிஞ்சே ஆவனும். ஒன்னு அவன் இடத்தை என் பேர்ல எழுதி வைக்கணும். இல்ல இவன கொன்னுட்டு நா செயிலுக்கு போகணும்." என்ற படியே கெட்டவார்த்தையில் திட்ட ஆரமித்தான்.
"த்தா.. இவன அங்கிட்டு கூட்டிட்டு போங்கப்பா போதைல ஒளரிட்டு கிடக்கான். பொம்பளைங்க வேற இருக்காங்க. அசிங்கமா பேசிட்டு இருக்கான்."
முத்துராசுவை சிலர் விலக்கிக் கூட்டிக் கொண்டு போக முயல, முத்துராசு திமிறினான். கெட்டவார்தைகளால் தொடர்ந்து திட்ட ஆரமித்தான். இவனின் வார்த்தைகளால் கடுப்படைந்த ஒருவர் அவனை தரதரவென இழுக்க. தடுமாறிக் கீழே விழுந்தான். கோவமடைந்த முத்துராசு தள்ளாடி எழுந்து.

"த்தா.. மவனுங்களா கும்பலா வந்து அடிக்கிறீங்களா.?" என ஓடி பீடத்தருக்கே நட்டு வைத்திருந்த அரிவாள் ஒன்றை எடுத்துக் கொண்டு பாய்ந்தான். அங்கு கைகலப்பு உருவானது.
"ஏய் இந்தா நிறுத்துங்கப்பா. சண்ட வேணாம். எதுக்கு பிரச்சன.? நான் என் நிலத்தை அவனுக்கே கொடுத்துடுறேன். பிரச்சன வேணாம் விடுங்க."
"சும்மா இரு சந்திரா, நீ அந்த நிலத்த எவ்வளவு கஷ்டப்பட்டு விளையுற நிலமா மாத்துன. நல்லா இருந்த நிலத்த கெடுத்து வச்சிருக்கான் உன் தம்பி. உங்க அப்பா எழுதிவச்ச உயில்படி நியாயமா உனக்கு சேர வேண்டியதை அவன் பிடுங்கிட்டான். இப்போ நீ பாடுபட்டு முன்னுக்கு கொண்டுவந்த உன் நிலம் அவனுக்கு வேணும்னா நீயும் கொடுத்துட்டுவியா.? தண்ணிய போட்டுட்டு வந்து அசிங்கமா பேசி அரிவாளை தூக்கினா போதுமா.? முதல்ல மனுசனா இருக்கணும்ல."

"வேணாம் மாமா. ஆயிரம் இருந்தாலும் என்னோட உடன்பிறந்த பய. எங்கம்மா செத்தப்போ மார்ல தூக்கி வச்சி சீராட்டி நான் வளர்த்தபய. வளர்த்த கிடா மார்ல பாயுது. பாஞ்சிட்டு போகுது. பரவாயில்ல.

"தம்பி பாசத்துல நீ முடிவெடுத்துட்ட, இனி நான் என்னத்த சொல்றது. தா பாரு முத்துராசு உங்கண்ணன் அவன் அவன் நிலத்த தர்றேங்குறான். அவன் பொழப்புக்கு என்ன வழி.? உங்கண்ணன் அவனோட இடத்தை தர்ற மாதிரி, நீ நியாயப்படி அவனுக்கு சேர வேண்டிய நிலத்த கொடுத்துடனும்.
"யாருக்கு வேணும் அவன் இடம். அவனையே வாங்கிட சொல்லு."
"என்ன சந்திரா சம்மதம் தான.?"

"சம்மதம் மாமா."
"எலெய் கோவில்ல போய் வெத்தலைய வாங்கிட்டுயாடா" ஒருவன் ஓடிப்போய் வெத்தலையைக் கொண்டு வந்தான்.
"எலெய் முத்துராசு இங்கிட்டு வா. சந்திரா நீ இங்க வாப்பா." இருவரும் அருகே வந்தனர்.

"கருப்பு பீடத்துல வச்சி வாக்கு கொடுங்க. முத்துராசு வச்சிருக்குற இடத்த சந்திரனுக்கும், சந்திரன் வச்சிருக்குற இடத்தை முத்துராசுக்கும் மாத்திக்க சம்மதமா.?" இருவரும் சரி என்றனர்.

"சரி கொடுத்த வாக்க மீறுறது. தெய்வ குத்தம். இனி மாத்தினது மாத்தினதுதான். நாளைன்னைக்கு பத்திர ஆபிஸ்ல போய் பதிவு பண்ணி்க்கிடுங்க. சரி தானே. இதோ பாரு முத்துராசு உனக்கு இதான் கடைசி இனி நீ உங்கண்ணன் கிட்ட சங்காத்தம் வச்சிக்கிட்ட கூடாது."

அவிழ்ந்து கிடந்த வேட்டியை அரைகுறையாக சுற்றிக் கொண்ட முத்துராசு.

"சர்தான் போங்கடா" என்றபடி கறிப்பானையை உதைக்க, குழம்பு கீழே விழுந்து சிதறியது. தள்ளாடியாடியே வண்டியைக் கிளப்பிப் போகும் அவனை எல்லோரும் வெறுப்புடன் பார்த்தனர்.

------- --------- ---------- ------- ------- ------ ----

எழுதியவர் : அருள்.ஜெ (24-Jul-19, 7:55 am)
சேர்த்தது : அருள் ஜெ
பார்வை : 187

மேலே