நிலா காயும் இரவினிலே - 7

பாகம் - 7 :

அரன்மணைப் போன்ற அந்தப் பெரிய வீட்டுக்குள் நுழைந்தது வெள்ளை வண்ணச் சொகுசு வாகனம். வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தாள் கல்யாணி. என்ன முத்து அவரு வல்லையா என்று கேட்க, இல்லம்மா... ஐயா பின்னடி வண்டியில வர்றாரு என்று சொன்னான். ரெண்டு வண்டியும் இங்கிருக்கு... அப்பறம் யாரோட வண்டியில வர்றாரு என்று மனசுக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள். கல்யாணி யோசனையில் இருக்கும் போதே... மெல்ல உள்ளே நுழைகிறது அந்தச் சிகப்பு வண்ண ஜீப். இருவரும் இறங்கினர்... அட...! வா..ப்பா முகில்... எப்படி இருக்க என்றாள், ம்.. நல்லா இருக்கேன்மா என்றான்.

பையை இங்க கொடுப்பா முகில்... பரவாயில்லப்பா என்றான். சும்மா கொடுப்பா அதையாச்சும் கொண்டு வரட்டும் என்று சிரிச்சிக்கிட்டுச் சொன்னாள். ஏன்டி... என்ன கிண்டல் பண்ணலனா... உனக்கும் ஒன் மகனுக்கும் தூக்கமே வராதே என்றார் ராசேந்திரன். அது என்னப்பா கையில பரிசுப் பொருள் என்றாள் கல்யாணி. பாத்தா தெரியல... புகைப்படந்தான் என்றார் ராசேந்திரன். அது தெரியுது... உள்ளே என்னப் படமுனு கேட்டேன் என்றாள். அதுக்கு நீங்க நாளைக்கு வரையும் காத்திருக்கனும்மா என்றான் முகிலன். ஏன்டி... ரெண்டு பேரையும் வெளியிலேயே நிக்க வைத்திறதுனு முடிவு பண்ணிட்டியா என்றார். இவரு எப்பேயும் இப்படித்தான்... நீ உள்ள வா..ப்பா என்றாள் கல்யாணி.

என்ன நடக்குதுனு பாத்தியா... தெனமும் இவ இப்படித்தான், ஆனாலும் அதுல எனக்கு ஒரு சந்தோசம். அவ இல்லனா எனக்கும், நான் இல்லனா அவளுக்கும் பொழுதே போகாது என்றார். வா..வா.. உள்ளே போவோம், இல்லனா அதுக்கு வேற சத்தம் போடுவா என்றார். சிரித்துக் கொண்டே உள்ளே சென்றான் முகிலன். உள்ளே சென்று இருவரும் அமர்ந்ததும், இந்தப்பா முகில்... தேநீர் எடுத்துக்கோ, இந்தாங்க நீங்களும் எடுத்துக்கோங்க என்றாள் கல்யாணி. அம்மா அப்பா.. ல்லாம் நல்லா இருக்காங்களா முகில், ம்... நல்லா இருக்காங்கம்மா என்றான். எங்கம்மா அரவிந்தனும் நண்பர்களும்..., காயத்திரி வீட்டுக்குப் போயிட்டு வந்துக்கிட்டு இருக்காங்கப்பா என்றாள் கல்யாணி.

தேநீரைக் குடித்து முடித்ததும் ராசேந்திரன் முகிலனை மாடியில் உள்ள அறைக்குச் செல்கிறார். நீ போய் குளிச்சிட்டு வா..ப்பா கீழே இருக்கேன் என்றார், சரிங்கப்பா என்றான். உள்ளே சென்று குளிக்கத் தொடங்குகிறான் முகிலன். அரவிந்தனும் அவன் நண்பர்களும் சாலையில் சிரிச்சி பேசிக்கிட்டு மெல்ல நடந்து வந்து கொண்டிருக்கின்றனர். ஏ... நீலவேணி உன் அலைபேசியைக் கொடு என்று வாங்கினாள் ஏஞ்சல். தான் கொண்டு வந்த பையிலிருந்து சின்ன காகிதத்தைப் பிரித்து, அதிலுள்ள எண்ணுக்கு அழைப்பு விடுத்தாள்.

எதிர்பக்கத்தில் வணக்கம் என்ற குரல் கேட்டதும் விவரங்களைச் சொன்னாள் ஏஞ்சல். அதுவா...ம்மா நீ சொன்னதுமே, நான் மண்டப முகவரிக்கு அனுப்பிட்டேன்மா என்றார். ஆங் மாமா நாளைக்குக் கிடைச்சிடும்ல என்றாள். கண்டிப்பா கிடைச்சிடும்..மா, தொந்தரவு பண்ணுனதுக்கு மன்னிச்சுடுங்க மாமா என்றாள். பராவாயில்ல..ம்மா, ரொம்ப நன்றி மாமா என்று சொல்லி அலைபேசி இணைப்பைத் துண்டித்தாள். ஏன்டி அந்தப் பரிசு பொருள நீயே கொண்டு வந்திருக்கலாம்ல என்றாள் நீலவேணி. அதான் மறந்துட்டு வந்துட்டேனே, அப்பறம் என்னடி பண்றது என்றாள் ஏஞ்சல்.

காயத்திரி... போய் எல்லாரையும் சாப்புட அழைச்சிட்டு வாடி, சீக்கிரம் சாப்புட்டுத் தூங்குனாதான் காலையில வெள்ளனமே கிளம்பி போக முடியும் என்றாள் கண்மணி. மெல்ல படியேறி அறைக்குள் நுழைந்ததும், ஏ... எல்லாம் கீழே வாங்க சாப்புடலாம் என்றாள் காயத்திரி. மணி என்னடி... மணி 8:10 என்று மலர்விழி கேள்விக்குப் மகிழினி பதில் சொன்னாள். நேரம் போனதே தெரியல... என்று சொல்லிக் கொண்டே அமுதா எழுந்தாள். காயத்திரி... என்று குரல் கொடுத்தாள் கண்மணி. ஏ... சீக்கரம் வாங்கடி..., இந்தா வந்துட்டோம்டி என்று கீழே இறங்கிச் சென்றனர். எல்லாம் வாங்கம்மா சாப்புடலாம் என்றாள் கண்மணி. அப்பா எங்கம்மா என்று ஏஞ்சல் கேட்க, அவரு சாப்புட்டுப் போயிட்டாரும்மா, காலையில சீக்கரம் எந்திரிக்கணும்னே என்று பதில் சொன்னாள் கண்மணி. நீங்க சாப்புடலையா என்றாள் ஏஞ்சல்... நீங்க எல்லாம் மொதல சாப்புடுங்கம்மா நான் அப்பறம் சாப்புடுறேன் என்று சொன்னாள் கண்மணி.

இப்ப மனசு ரொம்ப சந்தோசமா இருக்குடா..., பொண்ணுங்கள பாத்தா சந்தோசமா இருக்காதா என்ன... என்று மணியும் தேவாவும் பேசிக்கிட்டு வந்தனர். கல்யாணதுக்கு அப்பறம் பாருங்க எல்லாம் தலைகீழா நடக்கும் என்று சொல்லி கேசவன் சிரித்தான். ஏன்டா... எங்கள விட அதிகமா நீதான் சிரிச்சி பேசிட்டு
இருந்தே..., இப்ப என்னனா மாத்திப் பேசுறே என்றான் தேவா. டேய் இவன் எப்பேயும் இப்படி தாண்டா..., மாத்தி மாத்தி பேசுவான் என்றான் மணி. எங்க... எப்பேயும் ஒரே மாதிரி பேசுற மூஞ்ச காமிங்க பாப்போம் என்றான் கேசவன். நேரமாச்சுடா... வாங்க போவோம் என்றான் அரவிந்தன்.

என்னப்பா அவங்க இன்னும் வரலையா என்றான் முகில். இன்னும் வரலப்பா என்றாள் கல்யாணி. நண்பர்கள் எல்லாம் ஒண்ணு சேந்தா மத்தவங்கள பத்தின நெனப்பே வராது... என்ன முகில் நான் சொல்றது சரிதானே என்றார். ஏன் உங்க வயசுல நீங்க செய்யல என்று கிண்டலாகச் சொன்னாள் கல்யாணி. ஆமாம் இவ ஒருத்தி எதுக்கெடுத்தாலும் என்று மனசுக்குள் நெனைக்க... மனசுக்குள்ள பேசுறது வெளியே கேட்குது என்றாள் கல்யாணி. அம்மா... அப்பா என்ன நெனைச்சாருணு சரியா சொல்லுங்க பாப்போம் என்றான் முகில். நீ ஏன்..ப்பா முகில் அத கிண்டி விடுற என்றார் ராசேந்திரன். வேறென்ன நெனப்பாரு... ஆமாம் இவ ஒருத்தினு என்னைத் திட்ட நெனைச்சிருப்பாரு என்றாள் கல்யாணி. முகில் ராசேந்திரனைப் பாக்க, அதான் சரியா சொல்லிட்டாளே என்று தலையாட்டினார்.

எப்படி..ம்மா சரியா கண்டுபிடிச்சீங்க என்று முகில் கேட்க, இத்தன வருசமா என் கூட குடும்பம் நடத்துறா... இது கூடவா தெரியாது என்றார் ராசேந்திரன். உங்க ரெண்டு பேருக்கும் சரியான பொருத்தம்..ப்பா என்றான் முகில். கேட்டியாடி என்று ராசேந்திரன் சொன்னதும், மெல்லிய புன்னகை சிந்தினாள் கல்யாணி. அதே வேளையில்... டேய் முகில் எப்படா வந்த என்ற சத்தத்தோடு உள்ளே நுழைந்தனர் நண்பர்கள். ஏன்டா அலைபேசியில் கூப்புட்டா எடுக்க மாட்டியா என்று மூவரும் முகிலைச் செல்லக் கோவத்தோடு அடித்தனர். ஏ..ஏ.. பாத்துப்பா என்று சொல்லி சமையல் அறைக்குச் சென்றாள் கல்யாணி. அலைபேசியை அமைதியில் போட்டுட்டேன்டா என்றான் முகில்.

அப்ப உனக்கு எங்க ஞாபகமே வரல... அதான் அமைதியில் போட்ட அலைபேசியை எடுக்கல... என்றான் கேசவன். அதுவும் இல்லனா... நீயே அழைப்பு விடுத்து ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்ல என்றான் அரவிந்தன். வண்டியில வரும் போது அதெல்லாம் தோணலடா என்று சொல்ல..., அப்ப நீ சொன்னது சரியா போச்சுடா... இவனக்கு நம்ம ஞாபகமே வரல என்று கேசவனைப் பாத்துத் தேவா சொன்னான். அப்படி இல்லடா... என்று முகில் சொல்ல, பின்ன எப்படிடா என்றான் அரவிந்தன். அதான் வந்துட்டேன்ல விடுங்கடா..., ஒரேடியா தொலைஞ்சா போயிட்டேன் என்று முகில் சொன்னான்.

அந்தத் திறந்த ஜீப்லயாடா தனியா வந்த என்று மணி கேட்டான்.? நான் எங்க தனியா வந்தேன் என்று முகில் முடிப்பதற்குள், அப்பறம்..! வேற எதும் பொண்ணு கூட வந்தியா என்ன... என்று மணி குறுக்கிட, இவன் ஒருத்தன் எப்ப பாத்தாலும் பொண்ணு பொண்ணு கிட்டு என்று மணியைக் கிண்டல் செய்தான் கேசவன். அப்பறம் யாரு கூடடா வந்த என்று அரவிந்தனும் கேட்டான். "தொலைஞ்சா தேடுவாங்க கெடைச்சா மறந்திடுவாங்க" என்று ராசேந்திரன் இழுக்க..., அப்பா... நீங்க வேறெதையும் மனசுல நெனைச்சிக்கிட்டுச் சொல்லலையே என்றான் அரவிந்தன். ச்சே... ச்சே... உங்களத்தான்டா சொன்னேன்..., அதுக்குள்ள முகில விட்டுட்டுப் பொண்ணுங்கள பத்தி பேச ஆரம்பிச்சிட்டீங்களே அதான் என்றார் ராசேந்திரன்.

நான் அப்பா கூடதாண்டா வந்தேன் என்று முகிலன் சொல்ல, அப்பா இங்கே தானடா இருக்காரு என்று கேட்டான் கேசவன். நானும் அப்பாவும் மண்டபத்துல இருந்து ஒண்ணாத் தாண்டா வந்தோம் என்றான். அப்பா பேசிக்கிட்டே வந்திருப்பாரே... எப்படிடா தாங்கிக் கிட்டு வந்த என்று அரவிந்தன் கிண்டலாக கேட்டான். உனக்குப் பிடிக்கலனா மத்த பேருக்கும் பிடிக்காதா என்ன என்று பதிலுக்கு அரவிந்தனைக் கேலி செய்தார். நல்லா சந்தோசமா தாண்டா பேசிட்டு வந்தோம் என்றான் முகில். எது... அதான் சந்தோசமா என்று திரும்ப கேட்டான் அரவிந்தன். டேய் "உனக்குச் சந்தோசம் தராத ஒண்ணு, வேற ஒருத்தருக்குச் சந்தோசம் தரும்" அதானே இயல்பு என்றான் முகில்.

நீங்க எல்லாம் எத பேசுறீங்கனே புரியலையே என்று தேவா சொல்ல, நானும் அத பத்தி தான் யோசிச்சிட்டு இருக்கேன்... ஆனா ஒண்ணும் வெளங்கலையே என்று மணி சொன்னான். புரிஞ்சி ரெண்டு பேரும் என்ன... போறீங்க என்று கேசவன் சொன்னதும் அனைவரது உதட்டிலும் சிறு புன்னகை தழுவி நின்றது. எத பத்திப் பேசிருப்பாங்க நீயே சொல்லுடா அரவிந்தா என்றான் தேவா. எத பத்திப் பேசிருப்பாங்க "பொழுது விடிஞ்சா போராட்டம், பொழுது சாஞ்சா பசிவாட்டும்" இதைத்தான் பேசிருப்பாங்க என்று சொன்னான் அரவிந்தன். இனிமேல் வருங்காலம் அப்படித் தாண்டா இருக்கப் போவுது என்றார் ராசேந்திரன்.

அப்படி சொல்லுங்க..ப்பா என்றான் கேசவன். உனக்குப் புரியுது... அவனுக்குப் புரியலையே என்றார் ராசேந்திரன். நம்ம என்ன நடக்காததையா பேசுறோம்..., நடக்குறத தானே பேசுறோம் என்று முகிலனும் சேர்ந்து கொண்டான். அப்படி என்னதான் நடந்துருச்சினு..., ஆளுக்காளு
இப்படி பேசிட்டு இருக்கீங்க என்று மணி கேட்டான். ஏ..ஏ.. நீ ஏன்டா கோவப்படுற என்றான் தேவா. டேய்... "நமக்கு நடக்காத வரை எல்லாமே வெறும் செய்திதான்" என்று முகில் சொல்ல..., அப்பா... இவனையும் உங்கள மாதிரியே மாத்திட்டீங்களா என்று அரவிந்தன் சிரிப்போடு சொன்னான். இவன மட்டும் நம்பிடாதீங்க அப்பா... என்று கேசவன் பக்கம் கைநீட்டி அரவிந்தன் சொல்ல..., ஏன் அவனுக்கு என்னக் கொறச்சல் என்றார் ராசேந்திரன்.

இவனா... இவன் நேரத்துக்கு நேரம் மாத்தி மாத்தி பேசுவான் என்று தேவா சொல்ல..., டேய்... "காலத்துக்கு ஏற்ப நாமலும் மாறணும் இல்லனா காலம் நம்மல ஒதுக்கி வச்சிடும்" என்றான் கேசவன். இப்படியே காரம் சாரமா விவாதம் போனாலும் அந்த இடம் கலகலப்பாகவே இருந்தது. எல்லாரும் சாப்புட வாங்க என்று கல்யாணி அழைத்தாள். வாங்கப்பா எல்லாம் சாப்புட போவோம்... காலையில சீக்கிரம் எந்திரிக்கனும், இப்பவே நேரமாச்சி என்றார் ராசேந்திரன். ஆமாம் நாளைக்கு அரவிந்தனுக்கு ரொம்ப முக்கியமான நாள் என்று முகில் சொல்ல, அரவிந்தன் முகத்தில் ஒரு வெட்கம் தாண்டவம் ஆடியது. சரி சரி ரொம்பவும் வெட்கப் படாதே... நாளைக்கும் கொஞ்சம் மிச்சம் வை என்று கேசவன் கேலி செய்தான்.
கல்யாணி உணவு பரிமாற எல்லாரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடத் தொடங்கினர்.

என்னம்மா ஏஞ்சல் அதுக்குள்ள எந்திரிச்சிட்டே... சாப்பாடு போதுமா என்று கண்மணி கேட்க, இன்னைக்குக் கொஞ்சம் அதிகமாவே சாப்புட்டேன்..மா என்றாள். உங்களுக்கு..மா என்று மற்றவர்களைக் கேட்க, எங்களுக்குப் போதும்..மா இந்தா இவங்க ரெண்டு பேருக்கும் வையுங்க என்று நீலவேணியும் அமுதாவும் கூறினர். எங்க கூட்டத்திலேயே அதிகமா சாப்புடுற ஆளுனா இவங்க தான் என்றாள் அமுதா. இவளுக எப்போதுமே இப்படித்தான்..மா... நீங்க வையுங்கம்மா..., இவளுகளும் சரியா சாப்புட மாட்டாளுக... சாப்புடவும் விட மாட்டாளுக என்று சொல்லி மலர்விழியும் மகிழினியும் சிரித்தனர்.

எவ்வளவு சாப்புட்டாலும் ஒல்லியாத் தான்..மா இருக்குறாளுக என்று காயத்திரி சொல்ல, ஏய்... புள்ளைங்க மேல கண்ணு வைக்காதங்கடி என்றாள் கண்மணி. சரி சரி மெதுவா சாப்புட்டு வாங்கடி மேல இருக்குறோம் என்று காயத்திரியும் மற்ற இருவரும் சொல்லிச் சென்றனர். மேலே சென்ற ஏஞ்சல் மெய் மறந்து பால்நிலாவ ரசித்துக் கொண்டிருக்க, பின்னால் வந்த நீலவேணி என்னடி காதலுல ஏதும் விழுந்திட்டியா...
நாங்க வாறது கூட தெரியாம இப்படி ரசிச்சிட்டு இருக்கே என்று கேட்டாள். ஏன்டி எப்ப பாத்தாலும் காதல்... காதலுனு... சொல்லிக் கிட்டு, ஏன் வேற யாரும் நிலவ ரசிக்கக் கூடாதுனு சட்டம் இருக்கா என்ன என்று கோவத்தோடு சொன்னாள். அய்யய்யோ?... ஆரம்பிச்சிட்டாளே என்று மெல்ல முனகினாள் நீலவேணி.

ஏன்டி கோவப்படுற... காதலிக்கிறவுங்க தான் நிலவ இப்படி ரசிப்பாங்கணு யதார்த்தமா சொல்றாடி என்று காயத்திரி ஏஞ்சலின் கோவத்தைத் தணித்தாள். "மனசுக்குப் பிடிச்சத தான் கண்ணும் பாக்கும்" அதெல்லாம் காதலுனு சொல்ல முடியுமா?... என்றாள் ஏஞ்சல். ஏ..ஏ.. கோச்சுக்காதடி என்று நீலவேணி அவளைச் சமதானம் செய்தாள். என்னடி யாரையும் காணோம் என்று அறைக்குள் நுழைந்த மலர்விழியும் மகிழினியும் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டனர். வா மேல போய் பாப்போம் என்று மொட்ட மாடியை நோக்கி படியேறினர். ஏய் என்னங்கடி சத்தம் போட்டுக்கிட்டு இருக்கீங்க என்று இருவரும் சொல்ல, என்னடி சாப்பாடு எல்லாம் காலியாச்சா ரெண்டு பேரும் வந்துட்டீங்க என்றாள் அமுதா. அதெல்லாம் இருக்கட்டும் எல்லாரையும் அம்மா தூங்கச் சொன்னாங்க என்று சொல்லி மகிழினி அழைக்கத் தூங்கச் சென்றனர்.

முத்து... முத்து... என்று ராசேந்திரன் கூப்புட என்னங்க ஐயா... என்று வந்து நின்றான். காலையில நம்ம வண்டியை எடுத்துக் கிட்டுச் அந்த வீட்லருந்து பாதி பேர அழைச்சிட்டு மண்டபத்துக்குப் போயிடு என்றார். அம்மா முன்னடியே சொல்லிட்டாங்க ஐயா என்றான். முன்னடியே சொல்லிட்டாளா... சரி மறந்துடாத என்றார், சரிங்க ஐயா என்றான் முத்து. எல்லாரும் நேரத்தோட தூங்குங்க..ப்பா காலையில சீக்கிரம் எந்திருக்கனும் என்றார். சரிங்கப்பா என்று சொல்லி அறைக்குச் சென்றனர். வீட்டிலிருந்து வந்த நினைவுகளோடும் இங்கு நடந்த நினைவுகளோடும் கனவினில் மிதக்க அணைத்துக் கொண்டாள் நித்திரா தேவி.

தொடரும்...

எழுதியவர் : இதயம் விஜய் (24-Jul-19, 4:40 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 221

மேலே