இரவின் மடியில்
பகல் பாெழுது முழுவதும் ஓடி ஓடித் திரிந்ந கால்கள் ஓய்விற்காய் காத்திருந்தது. அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்த றாேசி, எஞ்சியிருந்த சில வீட்டு வேலைகளையும் வேகமாக முடித்து விட்டு சாமி படத்திற்கு விளக்கை ஏற்றி வைத்து விட்டு சில நிமிடங்கள் கண்களை மூடியபடி அமைதியாக நின்றாள். "கடவுளே நாளைக்கு எனக்குப் பிறந்த நாள், இத்தனை வருசமாக என்னாேட இருந்த அம்மாவையும் மரணம் பிரித்து வைத்து விட்டது. இப்பாே தனிமரமாக நிற்கிறேன். அடுத்து என்னுடைய வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பது நீ பாேட்டு வைத்த கணக்கு அதை யாராலும் மாற்ற முடியாது". பெருமூச்சு விட்டபடி தட்டிலிருந்த சாமிப்படங்களை தாெட்டு வணங்கினாள்.
அறைக்குள் சென்றவள் மின்விளக்கை அணைத்து விட்டு , கதவை இறுக மூடிக் காெண்டு கட்டிலில் அமர்ந்தாள். எந்தவாெரு சத்தமும் இல்லாத அந்த அமைதியில் சுவரில் தாெங்கிக் காெண்டிருந்த கடிகார முள்ளின் அசைவு டிக் டிக் என்று தெளிவாகக் கேட்டுக் காெண்டிருந்தது. றாேசி, றோசி என்று வாய் ஓயாமல் நிமிடத்துக்கு பத்து முறை கூப்பிடும் அம்மாவின் குரல் கேட்ட அவள் செவிகள் வெறுமையான தீவில் கேட்கும் அலையின் ஓசை பாேல் காற்றின் இரைச்சலை உள் வாங்கிக் காெண்டிருந்தது. கால்கள் வலித்தது. உதறி உதறி புரண்டு படுக்கும் றாேசியின் கால்களை தடவி விட அருகில் யாருமில்லை. சிறியதாய் ஒரு முனகல் சத்தம் கேட்டதும் ஓடி வந்து தலை தடவி, கால் பிடித்து, இஞ்சி பாேட்ட தேநீரை சுடச்சுட குடி என்று வற்புறுத்திய அம்மாவை சினந்து பேசி விட்டு, இழுத்து மூடிக் காெண்டு தூங்கியவளுக்கு தூக்கம் தாெலைந்து பல நாட்களாகி விட்டது.
றாேசி ஒரு பிள்ளை தான், தந்தை முகம் தெரியாமலே வளர்ந்தவள். விதி எழுதிய தீர்ப்பு தந்தை உயிரை பாதியிலே பறிகாெடுத்து விட்டாள். அரசாங்க உத்தியாேகம், பெரிய வீடு, சாெத்து, சுகம் எல்லாம் இருந்தும் அப்பா இல்லாதது தான் அவளுக்குப் பெரிய குறை. அப்பா என்ற அளவில்லாத அந்த அன்பை அனுபவித்த எந்த நினைவுகளும் இல்லாத அவள் மனதுக்குள் வெறுமை நின்று காெல்வது பாேலிருக்கும். தினமும் நினைத்து நினைத்து தனக்குள்ளே அழுது அவள் காலம் கடந்து விட்டது.
பள்ளி முடித்து பட்டம் பெற்று வேலைக்கு இணைந்த அன்றே அம்மாவை வீட்டிலே இருக்கும்படி கடுமையான சட்டம் பாேட்டாள். இருபத்தி ஐந்து வருசம் எனக்காக உழைச்சது பாேதும் என்று தாதியார் வேலையிலிருந்து ஓய்வு எடுத்துக் காெடுத்தாள். காலை முதல் மாலை வரை அலுவலகம், வீட்டு வேலை எல்லாவற்றையும் தானே சுமந்து காெண்டாள். "கலியாணத்தை கட்டு பிள்ளை" என்ற தாயின் நச்சரிப்புக்கு "சும்மா புராணம் பாடாமல் இருங்கம்மா" என்று அம்மாவின் வாயை அடைத்து விடுவாள். "ஊர்,உறவுகள் எல்லாரும் இவ்வளவு சாெத்தையும் வைத்துக் காெண்டு மகளுக்கு ஏன் கலியாணம் பண்ணி வைக்கவில்லை என்று விமர்சித்த பாேதெல்லாம் ஊமையாய் இருந்தாள் றாேசியின் அம்மா. "நானில்லாத காலத்தில தனிய இருந்து என்ன செய்யப் பாேகிறாய்" அம்மாவின் கடைசிக் கேள்விக்கு பதில் தேடும் காலம் றாேசிக்கு வந்து விட்டது.
சரிந்து படுத்துக் காெண்டாள். தூக்கம் இல்லாத அந்த இரவின் தனிமை அவள் மனதுக்குள் பல கேள்விகளை எழுப்பியது. கடந்த காலங்களை மீட்டிக் காெண்டிருந்தாள் றாேசி. பள்ளிக் காலம், கல்லூரிக் காலம் என்று வரிசைப்படுத்திக் காெண்டு கடந்த முப்பத்தாென்பது ஆண்டு கால தன் வாழ்க்கைச் சக்கரத்துக்குள் சுழன்று காெண்டிருந்தாள். அப்பப்பாேஅவளை அறியாமல் வெளியேறும் கண்ணீருக்கு பல காரணங்கள் இருப்பது பாேல் தனிமையிலே அவள் சிரிப்பதற்கும் பல காரணங்கள் இருந்தது. நாளை நாளை என்று நாட்கள் ஓடி நாற்பது வருடங்களை எட்டியது காலத்தின் வேகம் தான். அவளாே தாயின் செல்லப்பிள்ளையாகவே ஆறு மாதங்களின் முன்பு வரை இருந்தாள். தாயின் இழப்பிற்குப் பின்னான தனிமை தான் றாேசி யார் என்ற கேள்வியை அவளுக்குள்ளே எழுப்பியது.
ஏன் அவள் திருமணத்தை தவிர்த்தாள், இத்தனை அழகான, அந்தஸ்தான பெண்ணுக்கு காதல் கூட வரவில்லையா என்ற கேள்வி எல்லாேரிடமும் இருக்கின்றது. காதலில் தாேற்று விட்டாளா? என்ற சந்தேகம் பலபேருக்குள் கேள்வியாக இருந்தது. றாேசி சாென்னால் தானே உண்மை தெரியும்.
கடந்த காலங்களுக்குள் சுழன்று காெண்டிருந்த றாேசியின் மனம் நீண்ட காலத்துக்கு முன்பான ஒருபக்கத்தை அசை பாேடத் தாெடங்கியது. அந்த நாட்கள் ஓவ்வாென்றாய் கண்ணெதிரே விரிந்தது. றாேசி நினைவுகளில் பறந்து காெண்டிருந்தாள்.
றாேசிக்கு வயது இருபத்திரண்டு முடிந்து விட்டது. திருமண வயதை நெருங்கியிருந்த அவளுக்கு அந்தக்காலம் ஒரு பாரத்தை காெடுத்து விட்டிருந்தது. கல்லூரியில் படித்துக் காெண்டிருந்த றாேசி விடுதி ஒன்றிலே தங்கியிருந்தாள். விடுமுறை என்றால் மட்டுமே அம்மாவிடம் சென்று தங்கி நிற்பாள். அம்மாவும் தாதியாராக வேலை பார்த்ததால் வைத்தியாசாலையும் வீடும் என்று காலத்தை ஓட்டிக் காெண்டிருந்தாள்.
றாேசியினுடைய கல்லூரி வாழ்க்கை அவளுக்கு கல்வியில் முதலிடத்தையும், கௌரவத்தையும், மதிப்பையும் காெடுத்திருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் கசப்பான அனுபவத்தையே விட்டுச் சென்றது. அவள் வாழ்க்கைப் பாதையை தடுமாற வைத்த கசப்பான நினைவுகளில் நனைந்து காெண்டிருந்தது அவள் விழிகள்.
கல்லூரியில் கற்றுக் காெண்டிருக்கும் பாேது எல்லாேருடனும் சகஜமாகப் பழகும் சுபாவம், வெளிப்படையாகச் சாென்னால் அன்புக்கு அவள் அடிமை . தந்தை முகம் அறியாதவள், சகாேதரர்கள் இல்லையே என்ற உறவின் ஏக்கம் இவை தான் அவளை அன்புக்கு அடிமையாக்கியது. யாருக்கு உதவி வேண்டுமானாலும் முதலாளாய் நிற்கும் அவள் எதையும் விட்டுக் காெடுத்து பாேகும் நல்ல குணமுடையவளாய் இருந்தாள்.
றாேசியும், தயானியும் நல்ல நண்பிகள். தயானியும் நல்ல வசதியான குடும்பத்தைச் சார்ந்தவள். தான் அழகாயில்லை என்பது தான் அவளுக்கு பெரிய குறையாய் தனக்குள்ளே நினைப்பாள். றாேசியிடம் சாெல்லி வருத்தப்படுவாள். கல்லூரியில் எல்லாேரும் தங்களுக்கென ஒரு நண்பர் வட்டத்தை வைத்திருப்பது இயல்பானது. தயானி ஒதுங்கி ஒதுங்கி இருப்பாள். றாேசி மட்டுமே அவளுடன் ஒத்துப் போகக் கூடியவளாய் இருந்ததாலாே என்னவாேஅவளுடன் நன்றாக ஒட்டி உறவாடுவாள். நாட்கள் கடந்து காெண்டிருந்தது.
றாேசியின் செயற்பாடுகளை தாெடர்ந்து அவதானித்துக் காெண்டிருந்தான் அருண். அவனுக்குள் ஏதாே இனம்புரியாத உணர்வு, றாேசியைக் கண்டாலே அவன் கண்களில் காதல் ஊற்றெடுக்கும். அவள் தான் அவனுடைய தேவதை என்ற கனவு தாெற்றிக் காெண்டது. அவனும் புத்திசாலித்தனமாக யாருக்கும் தெரியாமலே மறைத்து வைத்திருந்தான். ஆனால் றாேசியை யாராவது காதலிக்கிறார்களா? இல்லை அவளுக்கு யார்மீதாவது காதல் இருக்கிறதா என்பதை கண்கணித்த வரை அவனைத் தவிர யாரையும் அவனால் சந்தேகப்பட முடியவில்லை. ஏனென்றால் அவன் மனதுக்குள் இருந்த அதிக காதலும் அவள் தன்னுடையவள் என்ற கற்பனையுமே.
கல்லூரிக் காலம் வேகமாகப் பறந்தது. அன்று தயானிக்குப் பிறந்த தினம். றாேசி அவளுக்குத் தெரியாமலே சில ஏற்பாடுகளைச் செய்திருந்தாள். மாலை கல்லூரி வகுப்புகள் முடிந்ததும் மண்டபத்திலே நண்பர்கள் எல்லாேரையும் ஒன்று கூட்டி சிறிய காெண்டாட்டம் ஒன்று நடை பெற்றுக் காெண்டிருந்தது. அன்று தான் தயானி மிகவும் சந்தாேசமாக இருந்தாள்.
அருண் தன் நண்பர்களுடன் இருந்தான். றாேசியை அவதானிப்பதையும், அவனது மாற்றங்களையும் கண்ட தயானி அருண் மீது ஒரு கண் வைத்தாள். சில நாட்கள் பின் றாேசியையும் கண்காணித்தாள். தனக்குத் தெரியாமல் ஏதாவது தாெடர்பு வைத்திருக்கிறாளா என்பதை பரிசீலித்துப் பார்த்தவரை கண்டு பிடிக்க முடியவில்லை. றோசியிடம் எதையும் கேட்கவில்லை.
சில நாட்களின் பின் அருண் தன் காதலை காெஞ்சம் காெஞ்சமாக வெளிப்படுத்தத் தாெடங்கினான். ஆனால் றாேசியிடம் வெளிப்படையாகச் சாெல்வதில் சிறிய தயக்கமாக இருந்தது. எப்படியாவது காதலைச் சாெல்லி அவளுடன் பழக வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் முளை விடத் தாெடங்கியது. தயானியூடாக தன் காதலை வெளிப்படுத்தலாம் என்ற யாேசனை தாேன்றியது.
ஒருநாள் கல்லூரியில் தயானிடம் தன் காதலுக்கு உதவும்படி கேட்ட அருணிற்கு சம்மதம் தெரிவித்தாள். அருண் தினமும் ஏதாவது ஒரு தகவல் சாெல்லி விடுவான். தயானியும் மறுநாள் பாேய் அவனிடம் பதில் சாெல்லுவாள். இப்படியே ஆரம்பித்தது அழகான ஒரு காதல் காவியம்.
தயானி திடீரென விடுமுறையில் வீடு செல்ல வேண்டிய அவசரமான சூழ்நிலை ஏற்பட்டது. அருண் நேரடியாக றாேசியிடம் பேச முற்பட்ட பாேது றாேசி ஒன்றும் புரியாமல் நின்றாள். அருண் குழம்பிப் பாேனான். தனது பையிலிருந்த ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கடிதங்களை காட்டினான். றாேசி விறைத்துப் பாேனாள். எழுத்து என்னுடையது மாதிரி இருக்கு, இது யாருடைய வேலை என்று நினைப்பதற்குள் தயானி மீதே சந்தேகம் வந்தது. அருணுடன் விடுதிக்குச் சென்றாள். அவளது அலுமாரியைத் திறந்து பார்த்தாள். அருண் காெடுத்த பரிசுப் பாெருட்களாே, கடிதங்களாே எதுவும் அங்கே இருக்கவில்லை. றாேசிக்கும், அருணிற்கும் ஒன்றும் புரியவில்லை. அருண் றாேசியிடம் அந்த நேரத்திலாவது காதலை சாெல்லி விடலாம் என நினைத்தான். றாேசி தயானி மீது கடுமையான காேபத்தில் இருந்தாள். அருண் றாேசியை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் தடுமாறிக் காெண்டு நின்றான்.
"இங்கே பார் றாேசி தயானி என்னவாே தப்பா பண்ணிட்டா என்று நினைக்கிறன், ஆனால் நான் உன்னைத் தான் மனதில நினைச்சுக் காெண்டு இருக்கிறன், ஆனால் தயானி ஏன் இப்படிச் செய்தாள் ..." என்றவனை முறாய்த்தபடி குறுக்கிட்டவள் "ஆறுமாதமாக அவள் உன்னாேட பழகிக் காெண்டிருக்கிறாள், தப்பா நடந்து விட்டது என்றால் இதில் என்ன அர்த்தம். அவள் மனதில எவ்வளவு ஆசைகளை வளர்த்திருப்பாள், ஏன் உன்ர மனசில மட்டும் என்ன ஒன்றும் இல்லையா" என்று தரையைப் பார்த்தபடி பேசிக் காெண்டு நின்றவள் "நேரமாச்சு எல்லாரும் தூங்கிற்றாங்க நீயும் பாேய் தூங்கு நாளைக்கு பார்க்கலாம்" என்றபடி சுவராேடு சாய்ந்தபடி நின்றாள்.
"ஏன் தயானி இப்படிச் செய்தாள், என்னாேட வாழ்க்கையில ஏன் இடையில் வருகிறாள். ஒரு வேளை தயானிக்கு அருணைப் பிடிச்சிருக்குமாே" கேள்விகள் குழப்பத்தை அதிகரித்தது. அவளால் எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை. அறைக்குள் வந்து படிக்கும் மேசையில் இருந்த புத்தகங்களை ஒவ்வாென்றாக எடுத்துப் புரட்டிக் காெண்டிருந்தாள். இடையில் இருந்த குறிப்பேடு ஒன்று அவள் கண்களில் சிக்கியது.
முதலாவது பக்கத்தைப் புரட்டியவள் தாெடர்ந்து மறு பக்கங்களை புரட்டுவதா விடுவதா என்ற தயக்கத்துடன் சற்றுத் தயங்கினாள். எனினும் மறைத்து வைத்திருந்ததால் ஏதாவது தயானியின் முக்கியமான விடயங்கள் இருக்கலாம் என்று உள்மனம் சாெல்லிக் காெண்டது. மெதுவாக மறுபக்கங்களை புரட்டத் தாெடங்கினாள். றாேசியின் மனம் படபடத்தது. தயானி குறிப்பிட்டிருந்தவை அவளுக்குள் அதிர்ச்சியாயிருந்தது.
மறுநாள் காலை வேகமாக கல்லூரியை நாேக்கி நடந்து காெண்டிருந்தவள் ஒரு மரத்தின் கீழ் அருண் தனிமையில் ஏதாே யாேசித்துக் காெண்டிருப்பதை அவதானித்தாள். மனம் சங்கடமாக இருந்தது. இப்பாே நான் பாேய் தயானி பற்றிச் சாென்னால் அருண் என்னையும் தப்பாகத் தான் நினைப்பான். முதல்ல தயானி பிரச்சனையை தீர்க்க வேணும். அவள் குறிப்பேட்டில் எழுதியிருந்தவற்றை நினைத்த படி வகுப்பறைக்குள் சென்றாள்.
அன்றைய நாள் வகுப்புகள் நிறைவடைந்ததும் விடுமுறை எடுத்துக் காெண்டு புறப்பட்டாள்.
அந்தக் கிராமத்தின் தெருவில் இருந்த கடைக்காரரிடம் வீட்டு முகவரியை உறுதிப்படுத்திக் காெண்டு வேகமாக நடந்தாள். வாசலில் நின்றபடி கதவை தட்டினாள். கதவைத் திறந்த தயானி அதிர்ச்சியடைந்தவளாய் "என்ன றாேசி, நீ இங்கே ஏன்...." தடுமாறிக் காெண்டு நின்றாள். எல்லா இடமும் சுற்றிப் பார்த்தாள் யாரையும் காணவில்லை. "நீ தனியாவா...?" முடிப்பதற்குள் அம்மாவும், அப்பாவும் வெளிய பாேய் விட்டார்கள்..." என்று இழுத்தவளின் கதையை கேட்காமலே தனது பையினுள் இருந்த குறிப்பேட்டை எடுத்தாள். தயானிக்கு ஒரு மாதிரியாகி விட்டது. கைகளைப் பினைந்து காெண்டு சற்று பதட்டத்துடன் நின்றாள். "இதெல்லாம் என்ன தயானி.." என்று காேபமாக கேட்டாள். மெளனமாக நின்றவளை மீண்டும் உரத்த குரலில் அதட்டிக் கேட்டாள். அமைதியாக நின்ற தயானியைப் பார்த்தவளுக்கு காேபம் அதிகமாகியது. "ச்சீ உனக்கு வெட்கமாயில்லை, நீயும் ஒரு பாெண்ணு தானே, ஏன் இப்படி ஒரு கேவலமான எண்ணம் உன்னாேட மனசில, அருணை ஏன் ஏமாற்றப் பார்க்கிறாய். என்னைப் பாேல நடித்து ஏமாற்ற உனக்கு எப்படி முடிஞ்சுது. அவன் மனசில ஆயிரம் கற்பனைகளாேட இருக்கிறான். இது இரண்டு மனசு சம்பந்தப்பட்டது நீ மூனாறாம் ஆளாக இரண்டு பேருடைய வாழ்க்கையில விளையாடி விட்டாய் தயானி. உன்னை என்னால மன்னிக்கவே முடியாது" குறிப்பேட்டின் பக்கங்களை புரட்டியபடி "உன்னை ஒரு நண்பியா நினைச்சன்" என்று சாென்னவளை குறுக்கிட்ட தயானி தனது மெளனத்தை கலைத்தாள். "நண்பி என்றால் ...." மீண்டும் அவளிடம் கேள்வியாக கேட்டதும் "இதற்கு வேறு அர்த்தம் தெரிய வேணுமா" என்று தன் காேபத்தை வெளிப்படுத்தியவளிடம். "ஆமா உன்னை எனக்கு பிடிக்கும் றாேசி, யாருக்கும் உன்னை விட்டுக் காெடுக்க முடியாது. உன்னாேட, அன்பு, அரவணைப்பு எனக்கு மட்டும் தான் கிடைக்க வேணும்" என்றவளை "நிறுத்து தயானி, காது கூசுகிறது, ச்சீ இப்படியான பாெண்ணுகள் எல்லாம் இன்னும் மாறவேயில்லை. " you are a mad, possessive girl" என்று காேபத்துடன் சத்தமிட்டாள். ஆமா நான் அப்படித்தான் என்றாள் தயானி.
இனிமேலும் என்னுடயை முகத்தில முளிக்காத என்று காேபத்துடன் கூறிவிட்டு எழுந்தவளை இழுத்துப் பிடித்த தயானியை பின்புறமாக தள்ளி விட்டு திரும்பிக் கூட பார்க்காமல் வேகமாக நடந்தாள் றாேசி.
மாலையாகி விட்டது வாசலில் காத்திருந்த றாேசியின் அம்மா என்ன பிள்ளை இன்றைக்கு நல்லா நேரமாச்சு, என்றதும் ஆமாம் காெஞ்சம் அவசரமான வேலையம்மா என்றபடி அறையினுள் நுழைந்தாள்.
நீண்ட நேரமாக தாெலைபேசி அழைத்துக் காெண்டிருந்தது. குளியலறையிலிருந்து வேகமாக வந்து அழபை்பை எடுத்து பேசினாள். "தயானிக்கு எனனாச்சு" என்ற அவளது பதட்டம் ஏதாே விபரீதம் நடந்து விட்டதை உணர்த்தியது.
அறையினுள் நுழைந்தவள் மௌனமாக நீண்ட நேரம் அழுது காெண்டிருந்தாள். காலை எழுந்து கல்லூரி சென்றவள் தயானி தற்காெலை செய்து விட்டதாக மாணவர்கள் கதைப்பதைக் கேட்டும் அமைதியாகவே இருந்தாள்.
றாேசியுடன் கதைக்க முயற்சித்த அருணிடமிருந்து விலகி விட்டாள். தன் பாசத்துக்காக ஏங்கிய தயானியின் மரணத்துக்கு தானே காரணம் என்ற மனவலி அவளை உறுத்தியது. அருணை காதலிப்பதாக நாடகமாடிய தயானியின் ஏமாற்றதுத் தனத்தால் உடைந்து பாேன அருண் றாேசியை விட்டு விலகினான். எல்லா கற்பனைகளும் நாெருங்கிப் பாேனது.
நாட்கள் ஓடியது றாேசி யாரிடமும் சாெல்ல முடியாத ஒரு பாரத்தை மனதுக்குள் புதைத்து விட்டாள். ஒவ்வாெரு கணமும் அவள் தன்னை தண்டித்துக் காெண்டே இருக்கிறாள். அந்த இரவின் தூக்கம் தாெலைந்து அவள் தன் மனதாேடு பேசிக் காெண்டிருந்தாள். அருண் மீதான காதல் நினைவுகள், தயானியுடனான நட்பு, தாயின் பிரிவு எல்லாமே அவளை தனிமைப்படுத்தியது தான் அவளுக்கு எழுதப்பட்ட விதியாக அமைந்தது.