நித்தம் குளித்து முழுகிக் குணநீர்மை தோய்ந்துள் அளித்து வருக அருள் - தூய்மை, தருமதீபிகை 358

நேரிசை வெண்பா

சுத்தம் உனக்குநற் சோறிடும் என்றவவ்
ஒத்த முதுமொழியை ஓர்ந்துணர்ந்து - நித்தம்
குளித்து முழுகிக் குணநீர்மை தோய்ந்துள்
அளித்து வருக அருள். 358

- தூய்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

சுத்தம் சோறிடும் என்னும் உத்தமமான பழமொழியின் பொருளை உய்த்துணர்ந்து நாளும் நீரில் குளித்துச் சீரிய குண நலங்களை வளர்த்து யாண்டும் ஆருயிர்களுக்கு அருள் புரிந்து வருக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

மனிதன் அகமும் புறமும் புனிதமாயின் எங்கும் இனியனாகின்றான். தேக சுத்தி ஆன்ம சுத்திக்கு ஆதரவாயமைந்துள்ளது. இருவகைத் தூய்மையும் உயிர்வாழ்வில் உரிமையுடையனவாதலால் அவை பெருமையாகப் பேணப் பெறின், இருமை இன்பமும் காணப் பெறும். வெளியும் உள்ளும் ஒளி செய்து வாழுக.

புறந்தூய்மை நீரான் அமையும், அகந்துாய்மை
வாய்மையால் காணப் படும். 298 வாய்மை

தேகமும் மனமும் தூய்மையாய் இருக்க வேண்டும் என வள்ளுவர் கருதியுள்ள உறுதி நிலையை இதில் உணர்ந்து கொள்கின்றோம். புறம் – உடம்பு, அகம் - மனம்,

செம்பு வெண்கலம் முதலிய பாத்திரங்களை நாளும் சுத்தமாய்த் துலக்கிவரின் அவை தேசு மிகுந்து தெளிவாயிருக்கும்; துலக்காது விடின் மாசு படிந்து மலினமாய்க் கிடக்கும்.

தினமும் நீரில் குளித்து வரின் உடம்பு சுத்தமாம்; அழகும் ஆரோக்கியமும் அமைந்து நிற்கும். குளியாது நின்றால் தெளிவு குன்றும்; ஒளி யாதும் இன்றி இளிவாக நேரும்.

உண்ணும் உணவு போல் தண் நீராடலும் உயிர்வாழ்க்கையின் உயர் இயல்பாக இனிது அமைந்துள்ளது; ஆகவே நீராடி உண்ணுவது மேலான சீலமாக மதிக்கப்பட்டுத் துதிக்கப் பெற்றது.

உண்பொழுது நீராடி யுண்டலும் என்பெறினும்
பால்பற்றிச் சொல்லா விடுதலுந் - தோல்வற்றிச்
சாயினுஞ் சான்றாண்மை குன்றாமை இம்மூன்றுந்
தூஉய மென்பார் தொழில். 27 திரிகடுகம்

பரிசுத்தமாக வாழ்வோம் என்று வாழ்க்கைத் திட்டத்தை வகுத்துள்ள மேலோர்கள் முதலில் நீராடியே உண்பர் என்றதனால் அதன் நீர்மையும் சீர்மையும் ஓர்மையும் அறியலாகும்.

’சுத்தம் சோறு இடும்’ என்பது பழமொழி. இது ஆழ்ந்த பொருள் நோக்கில் அமைந்திருக்கிறது. மனம், மொழி, மெய்கள் சுத்தமாயிருந்தால் அம்மனிதனுக்குத் தெய்வம் உயர்ந்த போகங்களை ஊட்டியருளும் என இது காட்டியுள்ளது.

எடுத்த உடல், உடுத்த உடை, அடுத்த இடம் முதலியவற்றைச் சுத்தமாக வைத்திருப்பவன் சுகமாய்ச் சீவிப்பான்; அல்லாதவன் அவமாய் இழிந்து நாளை அவலமாய்க் கழிப்பான்.

குளியாதிருப்பது சுகக் கேடாகின்றது. குளித்தவுடன் மனிதன் ஒரு புதிய தெளிவை அடைகின்றான். குளிப்பினால் உள்ளமும் உணர்வும் விழிப்பாய்க் களிப்படைகின்றன.

நீராடலால் அரிய பல நலங்கள் அமைந்திருத்தலின் உணவு கொள்ளுமுன் குளித்துக் கொள்வது உயர்ந்த நியமம் ஆயது.

நீர் பலகால் மூழ்கல்; நெறி ஒழுகல் எனத் தவசிகளுடைய இயம நியமங்கள் குறிக்கப்பட்டுளளமையான் குளிப்பின் தலைமையும் நிலைமையும் தவ சீலமும் தெளிவாய் நின்றன.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

பெரும்புலர் காலை மூழ்கிப்
..பித்தர்க்குப் பத்த ராகி
அரும்பொடு மலர்கள் கொண்டாங்(கு)
..ஆர்வத்தை யுள்ளே வைத்து
விரும்பிநல் விளக்குத் தூபம்
..விதியினால் இடவல் லார்க்குக்
கரும்பினிற் கட்டி போல்வார்
..கடவூர்வீ ரட்ட னாரே. 4 திருக்கடவூர் வீரட்டானம், நான்காம் திருமுறை, திருநாவுக்கரசர் தேவாரம்

அதிகாலையில் குளிப்பதே உயர்வாம் என இது உணர்த்தியுளது. துயிலின் அயர்வை நீக்கிச் செயலில் உயர்வை ஊக்கி வருதலால் காலைக் குளிப்பு கரும யோகத்தின் மருமமாய்க் கருதப்படுகிறது.

குளித்து முழுகிக் குணநீர்மை தோய்ந்துள்
அளித்து வருக அருள்.

தன் வாழ்நாளை உயர்ந்த குறிக்கோளுடன் ஒருவன் கழித்து வர வேண்டிய வகையை இது குறித்து வந்தது.

குளிர் நீரால் தேகம் சுத்தம் அடைகின்றது; குண நீர்மையால் ஆன்மா தூய்மையுறுகின்றது. கருணைப் பண்பு உள்ளத்தைக் கனியச் செய்து உயிரைப் புனிதமாக்குதலால், அருள் தூய்மைக்குத் தாய்மையாய் அமைந்தது. தண்ணீரும் தண்ணளியும் உடலுயிர்களைக் கண்ணியம் செய்து வருகின்றன. அவ்வரவுகள் உறவுகளாயின், உயர் நலங்கள் உளவாம்.

எழுபது வயது நிரம்பிய கிழவி ஒருத்தி முப்பது வயதுடையவள் போல் இளமையும் பொலிவும் எய்தியிருந்தாள். அவளுடைய பேரன் ஒருநாள் அவளை வியந்து நோக்கி, அந்த மேனி நிலைக்குக் காரணம் யாது? என அவளிடம் விழைந்து கேட்டான். அதற்கு அவள் "குளிர்ந்த நீரில் நாளும் மும்முறை குளித்து வந்தேன்; தளர்ந்த வயதிலும் இளமை இங்ஙனம் வளர்ந்து வந்துள்ளது.” என உவந்து மொழிந்தாள். அம்முதியவள் வாய்மொழி புதிய ஒளி ஆயது.

தண்ணீர் முழுக்கின் நன்நீர்மையை இதனால் நன்கு தெரிகின்றோம். குளிப்பு, தேய்ப்பு, புசிப்பு என்னும் வளர்ப்பு நிலைகளுள் முன்னது ஆசார சீலத்தின் முதல் படியாயுளளது. குளித்த பின்புதான் தேவ பூசை முதலிய புனித காரியங்களைச் செய்ய நேர்வர்.

ஒத்த மரபினனாயினும், குளியாதவனைக் குளித்தவர் தீண்ட மாட்டார்; தீட்டு என்று ஒதுங்குகின்றார். குளியாமையுள் தீண்டாமை குடி புகுந்துள்ளமையை இதனால் உணர்ந்து கொள்ளுகின்றோம்.

நீரால் எய்தும் தூய நீர்மையை எவ்வளவு பேர் இழந்திருக்கின்றனர்; நியமமாய்க் குளிததுவரும் மரபுகள் அறிவின் தெளிவில் தழைத்து வருகின்றன. அங்ஙனம் குளியாத இனங்கள் உணர்வொளி குன்றி இழிந்து நிற்கின்றன. பிறப்பில் ஒத்திருந்தாலும் தூய செயல் வகையால் சிலர் சிறப்பு எய்துகின்றனர்; அவ்வாறு செய்து கொளளாமையால் பலர் பரிசு குலைந்துள்ளனர்.

புசிப்பு பசிக்களைப்பை நீக்குதல் போல், குளிப்பு மனக் கவலையை நீக்குகின்றது. தலையில் தண்ணீர் விடின் குலையில் துன்பம் விடும் என்பது பழமொழி. இழவு வீட்டாரிடம் இவ்வாறு. இது உரைக்கப்படுகின்றது. இறந்து போனவரை நினைந்து வருந்தி அழுகின்றவர் அத்தீட்டு மாறவும், துக்கம் தீரவும் நீரில் மூழ்கி வருவது நியமமாய் உள்ளது. நியதியாய் நீராடி வரும் பழக்கம் உயர்ந்த நிலைமையை உணர்த்தி வருகின்றது.

பகுத்தறிவுடைய மனிதர் வாழ்க்கையின் உயர்ச்சி நிலைகளை ஓர்ந்துணர்த்து தேர்ந்து முன் வர வேண்டும். தேராதிருந்த தீட்டுப் போக நீராட்டங் கொண்டு சீராட்டுடன் முன்னேறிய போதுதான் பாரில் யாராலும் பாராட்டப் பெறுவர்.

இனிய குண நீர்மைகளை மருவி நியமமுடன் நின்று அகமும் புறமும் தூயராய் மனிதர் வாழ வேண்டும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Jul-19, 3:42 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 87

சிறந்த கட்டுரைகள்

மேலே