புதிய கல்வி கொள்கை
"புது மலராய் பூத்திருக்கும்
புதிய கல்விக்கொள்கை"
"இது மக்கள் வாழ்வில்
மணம் வீசும் கல்விக்கொள்கையாய் இல்லாமல்
மக்களின் பணம் பறிக்கும்
கல்வி கொள்கையாய் இருப்பது ஏனோ?"
"இரு மொழிகளின் இன்றிமையா இடத்தை
இன்று மூன்றாம் மொழியும் வந்து
பங்கு எடுத்து கொண்டது ஏனோ?"
"என் தாய்மொழியை தள்ளிநிறுத்தி
புது மொழியை மேள தாளமுடன் வரவேற்கும் சூழ்நிலைக்கு
நான் தள்ளப்படுவது ஏனோ?"
"அடிப்படை கல்வியில் கூட
அரசாங்க கொள்கை விதித்து
அறியாத குழந்தைகளை ஆட்டுவிப்பது ஏனோ?"
"ஓடி விளையாடு பாப்பா என்றார் பாரதி
பரிட்சைக்கு படிக்கும் போதே
பைத்தியம் பிடிப்பது போல் ஆகிவிடுகின்றனர்
பட்டாம் பூச்சியாய் பறந்து திரியும் பச்சிளம் குழந்தைகள்"
"உங்கள் கொள்கையினால் குழம்பி தவிக்கின்றனர்
கொடுமைபடுத்தப்படுகின்றனர்"
"வாழ்க்கை பாடம் கற்று தருவதற்கு பதிலாக
ஏன் வாழ்கிறோம் என்ற நிலைக்கு தள்ளிவிட்டது
உங்கள் கல்வி கொள்கை"
"மனித நேயத்தையும்,மதிக்கும் பண்பையும்
கற்று தருவதற்கு பதிலாக
யார் மொழியை இங்கு புகுத்துவது என்ற
புலனாய்விற்கு சென்று விட்டீர்கள்"
"தகுதியற்றவர்களால் கற்று கொடுக்கப்படும்
கல்வியினால் இங்கு எப்படி "கலாம்" உருவாகுவார்கள்"
"அரசினால் கட்டப்பட்ட அரசுபள்ளிகளை விடுத்து
தனியார் பள்ளியை மக்கள்
தேடி செல்வதில் இருந்தே தெரிகிறது
அரசு பள்ளியின் தரம் என்னவென்று"
"இந்த கல்வியாண்டில்
அரசு பள்ளிகள் ஆயிரம் மூடப்படும்
அப்பறமாக தமிழகம்
தனியார் பள்ளிகள் மட்டுமே இருக்கும் மாநிலமாக மாற்றப்படும்"
"அனு உலை உருவாக்குவதில்
அக்கறை காட்டும் அரசே
கொஞ்சம் அரசு பள்ளிக்கும்
தங்கள் ஆதரவு கிடைத்தால் எங்களுக்கும் ஆனந்தமே"
"விரைவு சாலை திட்டத்திற்காக
போராடும் எங்கள் பொறுப்புமிக்க தலைவர்களே
பெற்று எடுத்த பிள்ளைகளின்
படிப்பிற்க்கும் போராடினால் எங்களுக்கும் பேரின்பமே"
"வாழ்ந்து முடித்தவர்களின் வரலாறை
கற்றுக் கொடுப்பதை விட்டு
வாழ போகும் வாழ்க்கான நெறிமுறைகளை கற்றுக்கொடுங்கள்"
" சமானியனுக்கும்
சக்கரவர்த்தி மகனுக்கும்
பாகுபாடில்லாத
சமமான கல்வி வேண்டும்"
"உலகிற்கே மொழி வடிவம்
கொடுத்த மக்களுக்கு
கொடையாய் கொடுப்பது போல்
நுழைக்க பார்க்கிறார்கள் அவர்கள் மொழியை"
"தனித்து நிற்கும் என் தாய்மொழி
தஞ்சை கோபுரம் போல
நிழலைக் கூட எவரும் நெருங்க முடியாத அளவிற்க்கு
நெஞ்சம் நிமிர்த்தி நிற்கும்"
"என் உடன் பிறப்புகள் உயர்வதற்க்கு
உறுதுணயாய் கல்வி அது உதவ வேண்டும்
அது உடன் பிறப்புகளின் மனதை
காயம் கொள்ள செய்யாமல் இருக்க வேண்டும்"
"நுழைவு தேர்வுகளினால்
நொந்து போன என் உடன்பிறப்புகள்
உத்திரத்தில் தொங்குவதை உணராத நிலையில்
உங்கள் மனம் இருப்பது ஏனோ?"
"காசு இருப்பவர்களுக்காக
காத்திருக்கிறது
கல்லூரியின் நுழைவு வாயில்"
"திறமை இருந்தும்
நிராகரிக்க படுகிறது
என் உடன்பிறப்புகளின் உரிமைகுரல்
இவர்கள் காசற்றவர்கள் என்ற காரணத்தினால்"
"கல்வியை காசுக்காக
விற்கும் நாம்
திறமையற்ற மருத்துவர்கள்
பொறியாளர்கள் கிடைக்கவில்லை என
ஏக்கம் கொள்வது ஏனோ?"
"மலைக்கிராமங்களில்
மறைக்கபடுகிறார்கள்
நாளை நாட்டில் மலர்வதற்கான நல்ல மருத்துவர்கள்"
"பழங்குடியினரில் புதைக்கப்பட பார்க்கிறார்கள்
பல கனவுக் கோட்டைகளை தம் மனதில் கட்டி வரும்
பொறுப்பான பொறியாளர்கள்"
"அடிப்படை கல்வி என்பது
அடித்தட்டு மக்களின் அரணாய் இல்லாமல்
ஆடி கார்களில் செல்லுபவர்களுக்கு ஆதரவாய் இருப்பது ஏனோ?"
"அனைவருக்கும் ஒரே கூரையின் அடியில்
அடிப்படை கல்வி கொள்கை கொண்டுவந்து பார்"
"உலகமே இந்தியாவிடம் கையேந்தி நிற்கும்
திறமையான வல்லுநர்களுக்காக"
"எல்லோரும் கல்வி பெறவேண்டும்
கல்வி கற்காத குழந்தை இல்லாத நிலை வேண்டும்
கல்வி காசில்லாமல் கிடைக்க வேண்டும்
கடைநிலை ஊழியனின் பிள்ளையும்
கலெக்டர் ஆக வேண்டும்"
"அன்னை மொழியதை அனைவரும் அறிய வேண்டும்
அகிலமே ஆச்சரியபடுத்தும் விதமாய்
என் அன்னை நாடு அனைவராலும் அறியப்பட வேண்டும்"
"எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்"