தூய்மையுடையானைப் புனிதனருள் தெரிந்து வருமே தெளிந்து - தூய்மை, தருமதீபிகை 360

நேரிசை வெண்பா

தூயநடை தூயவுடை துாயமொழி தூயசெயல்
துாயநிலை யாவும் தொடர்ந்துமே - நேயம்
புரிந்து வருக; புனிதனருள் உன்னைத்
தெரிந்து வருமே தெளிந்து. 360

- தூய்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

நடை, உடை, மொழி, செயல், இயல் முதலிய எல்லா நிலைகளிலும் தூய்மையுடையனாய் நின்று யாண்டும் அன்பு புரிந்து வருக; இறைவன் அருள் உன்னை நாடி ஒடி வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உலக வாழ்க்கையின் பலவகை நிலைகளிலும் பண்பு படிந்து புனிதனாய் ஒழுகிவரின் மனிதவாழ்வு இனிமையும் இன்பமும் பெருகித் தனி மகிமை அடைகின்றது.

உடலில் புனைவனவும், உள்ளே கொள்வனவும், உறையும் இடங்களும், உரைசெயல் யாவும் துாய்மையாயிருக்க வேண்டும். தன்னைச் சார்ந்த எதையும் சுத்தமாக வைத்துக் கொள்ளும் பழக்கம் உத்தம மனித வாழ்க்கையாய் உயர்கின்றது. அசுசி அடையாமல் பழகிவருவதில் சுசியுடைமை வளர்ந்து வருகின்றது.

’சுகியாய் இருப்பதினும் சுசியாயிரு’ எனத் தனது அருமை மகனுக்கு ஒரு தந்தை இவ்வாறு அறிவு கூறியிருக்கிறான். தேக போகங்களில் திளைத்திருப்பவன் இறுதியில் பரிதாபமாய் இளைத்து வீழ்கின்றான்; ஆன்ம சக்தியாய் அமர்ந்துள்ளவன் மேன்மை மிகுந்து என்றும் குன்றாத மெய்ப்பேறு பெறுகின்றான்.

உள்ளம் புனிதமுற உயர்நலங்கள் வெள்ளமாய் விரிந்து விளைகின்றன. தீய மயல்கள் ஒழிந்து, தூய செயல்கள் வளர்ந்து வரவே உயிர்ப் பயிர்கள் செழித்து ஒளி வீசி எழுகின்றன.

எல்லாவுயிர்களிடமும் அன்பாய் இரங்கி ஆதரவு செய்து வருதலை ’நேயம் புரிந்து வருக’ என்றது. சீவ தயையுடையானிடம் தெய்வ அருள் தானாகவே வந்து பெருகுகின்றது.

புனிதன் அருள் உன்னைத் தெரிந்து வரும். என்றது அன்புடையவன் அடையும் அதிசய ஊதியம் அறிய வந்தது. பிறவுயிர்களிடம் இரங்கி இனியனாய் மனிதன் அன்பு செய்து வரவே அவன் புண்ணிய சீலனாய் உயர்கின்றான்; எண்ணிய இன்பநலங்கள் யாவும் அவன்பால் எளிதே வந்து சேருகின்றன. பரமனது கிருபை அவனுக்குத் தனி உரிமை ஆகின்றது. ஆகவே அவன் பேரானந்தமுடையனாய்ப் பெருகி நிற்கின்றான்.

தான் சுகமாய் இருக்க வேண்டும் என்றே மனிதன் யாண்டும் முயன்று வருகின்றான். இரவும் பகலும் உயிர்கள் படுகின்ற பாடுகள் எல்லாம் இன்ப வரவை எதிர்நோக்கியே என்பது எங்கும் அனுபவமாயுள்ளது. அவ்வரவுகளை அன்பு.அருள்கின்றது.

நோய், வறுமை, பாவம் என்பன துன்ப நிலையங்களாதலால் அவை யாதும் அணுகாதபடி தன்னை மனிதன் பாதுகாத்து ஒழுக வேண்டும். நோயால் தேகமும், வறுமையால் வாழ்வும், பாவத்தால் உயிரும் பாழ்படுகின்றன.

நோயுறின் உடல்நிலை கெட்டு, யாவும் கேடாம். அக் கேடு நேராவகை நாடி ஒழுக வேண்டும்.

வெண்டளை பயிலும் கலி விருத்தம்

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்:
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்:
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. – திருமந்திரம்

உடம்பைத் தூய்மையாகப் பேணி ஒழுகுபவனே உயிரை இனிது பேணியவனாவான் எனத் திருமூலர் இவ்வாறு உணர்த்தியுள்ளார். யோக ஞானங்களுக்கு இனிய சாதனங்களாய் அமைந்துள்ளமையால் தேக நலங்கள் யாவராலும் உரிமையோடு கருதப்படுகின்றன. ’சுவரை வைத்துச் சித்திரம்’ என்றபடி எவரும் உயர் நிலையை அடைதற்கு உடல்கள் இயல் உரிமைகளாய் அமைந்திருக்கின்றன. உரிய கருவிகள் ஊறுபடின் அரிய காரியங்கள் மாறுபட்டு அவமே கெடும். பிணி, மெலிவு முதலிய பிழைபாடுகள் .நுழையாமல் தேகத்தை நன்கு பாதுகாத்து வருதல் யாவர்க்கும் நலமாம்.

உயிர்நிலைய மான உடல்நோய் உறினோ
துயர்நிலையம் ஆகும் துணி.

என்னும் இதனால் பிணியின் பெருங்கேடு தெரியலாகும். நோய் தீயதாதலால் அஃது இல்லாத வாழ்வு நல்ல புண்ணியப் பேறாக எண்ணப்பட்டுள்ளது.

'நோய்ற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்' என இராமலிங்க அடிகள் கடவுளிடம் இங்ஙனம் வேண்டியிருத்தலால் நோயுடையது எவ்வளவு தீயது! என்பது எளிது தெளிவாம்.

’நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்னும் முதுமொழி நோயின்மையின் மேன்மையை நன்கு விளக்கியுள்ளது. புறம் தூய்மையால் பெரும்பாலும் நோய்கள் ஒழிந்து போகின்றன. உணவும், காற்றும், உடையும், இடமும் சுத்தமுடையனவாயிருப்பின் அங்கே இனிய ஆரோக்கிய வாழ்வு தனியே மேலோங்கி நிற்கும். தூய காற்றை உட்கொள்ளுவதால் இரத்தம் சுத்தி ஆகின்றது; ஆகவே தேகம் எங்கும் அது நன்கு பரவி நலம் பல தருகின்றது.

காலை மாலைகளில் வெளியே உலாவி வருவது சாலவும் நல்லது.

காலை நடை காலுக்குப் பலம்;
மாலை நடை மனதுக்கு நலம்

என நடையின் பயனை அனுபவித்துள்ள ஆங்கிலப் புலவர் ஒருவர் தமது பிரசங்கத்தின் இடையே அவையில் இவ்வாறு உரையாடியிருக்கிறார். இதனால் திறந்த வெளியில் நாளும் நடந்து வருதலால் உடல் உயிர்களுக்கு உளவாம் ஊதியங்கள் உணரலாகும். கருமமும் தருமமும் அருமை நலங்களை அருளுகின்றன.

’தூய நடை’ என்றது பரிசுத்தமான ’நல்ல ஒழுக்கத்’தைக் குறித்ததோடு தூய காற்றோட்டத்தில் நியமமாக உலாவி வருதலையும் உணர்த்தி நின்றது.

நேரிசை வெண்பா

ஓடி நடந்தே உலாவி வருதலினால்
நாடி நரம்பெங்கும் நன்காகும் - நீடிவரும்
ஆயுள் வலிதாம்; அகம்புறமும் நன்மையாம்;
தோய்க நடையைத் தொடர்ந்து.

என வரும் இந்த மருத்துவமுறையைக் கருத்துடன் தெரிந்து நடந்து கொள்ள வேண்டும். இருவகை நடையும் மனிதனுக்கு இனிய திருவுடைமையாய் மருவியுள்ளன.

கால்நடந்து ’கால்’பருகிக் ’கை’தழுவி மெய்யொழுகின்
கோல்நடந்து காணார் குனிந்து.

நியமமாய் நடந்து நெறிமுறை ஒழுகுபவர் என்றும் திடதேகிகளாய் இருப்பர் என நடையின் பயனை இஃது நன்கு உணர்த்தியுள்ளது; கால் - காற்று. கை - ஒழுக்கம்.

’Walking is healthy’ ’நடத்தல் நல்ல சுகம்’ என மேல் நாட்டாரும் உலாத்தலைக் குறித்து இங்ஙனம் உரைத்திருக்கின்றனர். நோய்கள் அணுகாமல் உயிர்களைப் பாதுகாத்து வருதலால் ஆரோக்கிய வாழ்வை யாவரும் வியந்து கொள்கின்றனர்.

நல்ல பழக்கங்களைப் பழகி நெஞ்சம் தூயனாய் நின்று எவ்வுயிர்க்கும் நேயம் புரிந்துவரின் அம்மனித வாழ்வு பரம புனிதமுடையது; அந்தப் பாக்கியவான் இறைவன் அருளை இனிதடைந்து யாண்டும் இன்ப நலங்களை எய்தி மகிழ்வான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Jul-19, 5:50 pm)
பார்வை : 82

சிறந்த கட்டுரைகள்

மேலே