அன்பின் அளவே அரியவுயிர் மாண்பெய்தி இன்பம் அளவி இருக்கும் - நேயம், தருமதீபிகை 361

நேரிசை வெண்பா

அன்பின் அளவே அரியவுயிர் மாண்பெய்தி
இன்பம் அளவி இருக்குமால் - அன்புயிரின்
சாரம் அஃதின்றேல் சக்கை எனநின்று
தூரம் இழியும் தொலைந்து. 361

- நேயம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

அருமையான உயிர் அன்பின் அளவே பெருமையும் இன்பமும் பெருகி மிளிர்கின்றது; அன்பு உயிரின் சாரமாயுள்ளது; அஃதில்லாத வாழ்வு சாரமற்ற சக்கையாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் உயிரின் உயர் பண்பை உணர்த்துகின்றது.

அன்பு என்பது ஆன்மாவின் கனிவான இனிய இயல்பு. இந்தப் பண்பு எவ்வளவுக்கு எவ்வளவு அமைந்துள்ளதோ அவ்வளவுக்கு அவ்வளவு அந்த உயிர் இன்ப நிலையில் உயர்ந்து ஒளிர்கின்றது. உள் ஈரம் வெளி நீரமாய் விரிந்து மிளிர்கின்றது.

மணம் நிறைந்த மலரைப் பலரும் விழைந்து போற்றுகின்றனர்; அன்பின் குணம் நிறைந்தவரை உலகம் உவந்து கொண்டாடுகின்றது.

அன்பு என்னும் சொல்லுக்குப் பொருள் இனிய உள்ளக் கனிவு என்பதே. கனிந்தது கனி எனப் பழத்தின் முதிர்ந்த நிலையைக் குறித்து நிற்றல் போல் இந்த அன்பு பக்குவம் நிறைக்க உயிரின் உயர்ந்த நிலைமையை உணர்த்தியுள்ளது.

நெஞ்சம் நெகிழ்ந்து பாய்ந்து எங்கும் கனிவாய் இனிய நீர்மை புரிந்து வருதலால், நேசம், பாசம், நேயம், பரிவு எனப் பல நாமங்களை அடைந்து உலக வழக்கில் அன்பு நிலவி நிற்கின்றது.

அளிநார் சங்கம் நேயம் அன்பே
பாசம் என்றும் பேசப் படுமே. – பிங்கலந்தை

பரிவுநார் வாரம் ஈரம் பற்றளி பாசம் அன்பாம்
புரி(வு)ஆணம் நேய மும்பேர். - நிகண்டு

முன்பிருந்த பிங்கல முனிவர் அன்புக்கு ஐந்து பெயர் குறித்தார்; பின்பு வந்த மண்டல புருடர் அதற்குப் பத்துப் பெயர் வரைந்து காட்டியுள்ளார். பேர்கள் எல்லாம் காரணம் மருவி வந்துள்ளன. மூல வேர்களைத் துருவி நோக்கின் இருதயங்கள் உருகி ஒழுகியுள்ள பரிபூரண அமைதிகளை உணரலாகும்.

அந்தக் கரணத்தின் பிரிய வடிவமான இனிய உணர்ச்சியே அன்பு என வழங்கப்படுகின்றது. சார்பு பற்றிப் பல பெயர்களை இது மருவலாயது. உற்ற தொடர்புகள் உரிமையில் எழுந்தன.

தன்னைப் பெற்ற தாய் தந்தையர் மேல் ஒருவன் உள்ளப் பிரியம் மருவிய பொழுது அது பரிவு என வந்தது. மனைவியிடம் நேரின் காதல்; மக்கள் பாலுறின் பாசம், ஒக்கல் மேல் எழின் வாஞ்சை; எளியவரிடம் சேரின் அளி, துயரமுடையவரிடம் படின் இரக்கம்; தாழ்ந்த பிராணிகள் மேல் சாரின் தயை, ஒத்தவர் பாலுறின் நேசம், உயர்ந்தவர் பாலாயின் ஆர்வம், பொருள்களிடம் புகின் பற்று, தெய்வத்தின் மேல் வைப்பின் பத்தி என இவ்வாறு பல பிரிவுகளாய் அன்பு பரவியுள்ளது.

இத்தகைய அன்பையுடைய உயிரே பண்பு சுரந்து என்றும் இன்பம் கனிந்து மிளிர்கின்றது. நீருக்குத் தண்மையும், தேனுக்கு இனிமையும், பூவுக்கு மணமும் போல் ஆன்மாவுக்கு அன்பு பான்மை படிந்து மேன்மை புரிந்து வருகின்றது.

இந்த அருமைப்பண்பு குன்றிய பொழுது ஒளி குன்றிய விழிபோல் மனிதன் பழியுற்று இளிவுறுகின்றான்.

பாலும் மணமும் பசுமலர்பால் அன்புயிரின்
மேல்மணந்து நிற்கும் மிகுந்து.

பாலால் பசுவும், மணத்தால் மலரும் மாண்புறுதல் போல் அன்பால் உயிர் மகிமையுறுகின்றது என இது உணர்த்தியுளது. அன்பு இல்லாத மனிதன் மணமற்ற மலராய்க் குணம் கெட்ட மலட்டுப் பசுவாய் இழிக்கப்படுவான் என்பது பெறப்பட்டது.

‘அன்பு உயிரின் சாரம், அஃதின்றேல் சக்கை’ என்றது அன்புக்கும் உயிருக்கும் உள்ள உறவுரிமையை ஊன்றி நோக்கி உணர வந்தது. கரும்புக்குச் சாரமும், கனிக்குச் சுவையும் போல் உயிர்க்கு அன்பு இனிமை சுரந்துள்ளது. அந்தச் சாரங்கள் நிறைந்து நிற்கும் அளவே அவை சிறந்து மதிக்கப்படுகின்றன. சுவைகள் குறைந்த பொழுது அசாரங்களாய் அவலமடைகின்றன. அவ்வாறே அன்பின் உண்மை இன்மைகளால் உயிர்கள் முறையே உயர்வு, தாழ்வுகளை உறுகின்றன.

என்பில் அதனை வெயில்போலக் காயுமே
அன்பில் அதனை அறம். 77 அன்புடைமை

என்பு இல்லாத புழு வெயிலில் எரிந்து துடித்தல் போல், அன்பு இல்லாத உயிர் தரும தேவதை முன் பரிந்து பதைக்கும் என வள்ளுவர் இங்ஙனம் உணர்த்தியிருக்கிறார். அன்பு இன்மை எவ்வளவு பாவம்! எவ்வளவு துன்பம்! எவ்வளவு கேடு! எனபதை இதனால் நன்கு அறிந்து கொளளலாம்.

அன்பு எவ்வழியும் பூத தயையாய் விரிந்து யாண்டும் ஆதரவு புரிந்து வருதலால் அதிலிருந்து புண்ணியங்கள் விளைகினறன; அதனால் பாவக் கட்டுகள் ஒழிந்து போகவே, ஆன்மா மேலான இன்ப நிலையை மேவி மகிழ்கினறது.

The redeemer and instructor of souls, as it is their primal essence, is love. - Worship

'அன்பு உயிர்களின் மூல சத்தாயுள்ளமையால் ஆன்மாக்களை ஒளி செய்து உய்தி புரிந்தருள்கின்றது' என எமர்சன் இவ்வாறு கூறியிருக்கிறார். சீவ சஞ்சீவியாய் மேவியுள்ளமை தெரிய வந்தது.

பயிர்க்கு நீர் போல் உயிர்க்கு அன்பு உறுதி புரிகின்றது. அன்பின் அளவே உயிர் இன்ப நலனை மருவுகின்றது என்றதனால் அன்பு இல்வழி அது துன்ப நிலையில் சுழன்று உழலும் என்பது தெளிவாய் நின்றது. உரிய இயல்பு ஒழியவே பெரிய இழிவாய்க் கழிந்து படுகின்றது.

உள்ளம் இளகிக் கனியாவழி மனிதன் கல்லாய், இரும்பாய்க் கடிய வனவிலங்காய்ப் பொல்லா நிலையில் முடிவுறுகின்றான்.

கல்லேனும் ஐயவொரு காலத்தில் உருகுமென்
கல்நெஞ்சம் உருக விலையே
கருணைக்(கு) இணங்காத வன்மையையும் நான்முகன்
கற்பிக்க வொருக டவுளோ

எனத் தாயுமானவர் இங்ஙனம் அலறியிருக்கிறார். அன்பின் பெருமையை நன்கு உணர்ந்தவர்; அதனைப் பரிபூரணமாகத் தான் அடையவில்லையே! என ஏங்கி தன் பிறவியை இங்ஙனம் இகழ்ந்துள்ளமையால் அவரது உள்ளப் பண்பையும் உயிரின் ஆவலையும் நாம் உணர்ந்து கொள்ளுகின்றோம்.

அன்புப் பிறப்பே இன்பப் பிறப்பு; அல்லாதது துன்பப் பிறப்பாதலின் அது தொல்லையென நல்லோர் எல்லாராலும் சொல்ல நேர்ந்தது.

அன்பு உயிரின் இன்ப ஊற்று; அதனை மருவியுள்ள அளவே மனம் மணம் பெறுகின்றது; குணம் பெருகுகின்றது; புனிதன், இனியன், புண்ணியன், கண்ணியன், தண்ணளியாளன் என மனிதனை அது மாண்புறத்தியருள்கின்றது.

As much Iove, so much mind.

அன்பு எவ்வளவோ அவ்வளவே மனம்' என இத்தாலிய நாட்டுத் தத்துவ ஞானி ஒருவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

அன்பு இல்லையானால் முரடுபட்டு மாட்டு மதியாய் மனம் மடிந்து போம் என்பது இதனால் முடிந்து நின்றது.

அன்பு சீவ அமுதம்: அதனை மேவியுள்ள அளவே மனிதன் தேவியல்பமைந்து திவ்விய மகிமை பெறுகின்றான்.

அன்பை மருவிய அளவுதான் மனம் புனித உருவமாய் இனிது திகழ்கின்றது; அது குறையின் சிறுமையுற்றுச் சீரழிகின்றது; நிறையின் பெருமை பெற்றுப் .பேரின்பம் நுகர்கின்றது; மனிதனது மாட்சி எல்லாம் அன்பின் ஆட்சியளவே அமைந்துள்ளமையான் அவ்வுண்மையை ஓர்ந்து உரிமை செய்து கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Jul-19, 3:08 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 87

மேலே