நேர்மை யுடையான் சிங்க ஏறென்னும் சீர்மை அடைகின்றான் சிறந்து – நேர்மை, தருமதீபிகை 350

நேரிசை வெண்பா

கள்ளம் கரவு கனிய நரிஎனவே
எள்ளல் மருவி இழிகின்றான்; - கள்ளமிலா
நேர்மை யுடையான் நிமிர்சிங்க ஏறென்னும்
சீர்மையடை கின்றான் சிறந்து. 350

– நேர்மை, தருமதீபிகை
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உள்ளத்தில் கள்ளமும் கரவும் சேர்ந்தால் அந்த மனிதன் நரி என்று உலகம் எள்ளியிகழ இழிவுறுகின்றான்; கரவின்றி நேர்மையுடையவன் சிங்க ஏறு என வியந்து புகழச் சிறந்து விளங்குகின்றான் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், உள்ளம் இழியின் உயர்வு அழியும் என்கிறது.

உண்ணும் உணவுகள் உடல்களை ஓம்பி வருதல்போல், எண்ணும் எண்ணங்கள் உயிர்களை வளர்த்து வருகின்றன.

நல்ல நினைவுகள் இனிய பால் போல் வனப்பும் வன்மையும் அருள்கின்றன: புல்லிய எண்ணங்கள் தீய கள் போல் இளிவும் தளர்வும் தருகின்றன. நன்மைகள் தோய்ந்தன நலம் பல பெற்று உயர்ந்து ஒளி மிகுந்து திகழ்கின்றன. புன்மைகள் படிந்தன பொலிவிழந்து மெலிந்து இழிவடைகின்றன.

கள்ளம் - பிறருடைமையைக் கவர்ந்து கொள்ளக் கருதுவது. கரவு - மருமமாய் மறைந்து வஞ்சம் புரிவது.

இந்த இளிவுகள் நெஞ்சம் புகின் அது ஒளியிழந்து ஊனம் அடைதலால், அதனையுடைய மானிடன் ஈனமாய் இழிந்து கெடுகின்றான் எண்ணம் பழுதுபடின் மனிதன் முழுதும் இழிவு படுகின்றான். உள்ளம் பேணி உயர்வு காண வேண்டும் கவிராஜ பண்டிதர்.

இளிவான நினைவுகளை ஒழித்து உயர்ந்த சிந்தனைகளை வளர்த்து வருபவனே என்றும் சிறந்தவனாய்த் திகழ்ந்து தேசு மிகுந்து நிற்கின்றான்.

“A bad conscience will make us cowards; but a good conscience will make us brave.” (Goldsmith)

'கெட்ட எண்ணங்கள் மனிதரைக் கோழைகள் ஆக்குகின்றன; நல்ல நினைவுகள் வீரர்களாய்ச் செய்கின்றன’’ என்னும் இது ஈண்டு எண்ணத் தக்கது;

ஈன எண்ணம் குடிபுகுந்த போதே மனிதன் ஈனனாகின்றான்; அது இல்லையாயின் மேலோனாய் மிளிர்கின்றான் என்றமையால் வெளித் தோற்றங்களுக்கெல்லாம் உள்ளமே மூல நிலையமாயுள்ளமையை உய்த்துணர்ந்து கொள்ளலாம்.

சிறுமையும் செயலும் கருதி கரவுடையானை நரி என்றது.

நெஞ்சின் சீர்மை தெரிய நேர்மையுடையான் நிமிர் சிங்க ஏறு. என்றது, சிங்க ஏறு என்னும் உருவகம் பெருமிதமும் கம்பீரமும் பேராண்மையும் கருதியுணர வந்தது.

செவ்விய நெஞ்சம் திவ்விய மகிமைகளையுடைமையால் அதனை எவ்வழியும் பேணி வருபவன் பெருநலங்களை அடைகின்றான் அஞ்சாமை, ஆண்மை முதலிய மேன்மைகள் எல்லாம் நேர்மையான நெஞ்சின் பான்மைகளாயுள்ளன.

ஆன்மாவின் அற்புத சக்திகள் சித்த சுத்தியிலேயே செழித்து விளங்குகின்றன. அந்த உத்தம நிலையத்தை யாண்டும் புனிதமாய் வைத்து என்றும் நீர்மையுடன் ஒழுகிச் சீர்மை புரிந்து வருக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Jul-19, 5:46 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 66

மேலே