ஆழிசூழ் உலகு – ------------------------ராகவேந்திரன்

ஜெ

சமகால சமூக வரலாற்றுப் புதினம் எழுதுவதின் சிக்கல், அது உணர்வுகளைப் புண்படுத்துவதாக குற்றம் சாட்டப்படும் வாய்ப்பு உண்டு. ஒவ்வொன்றையும் ஒரு தரப்பு என்று எடுத்துக் கொண்டு மேலதிக விவாதத்தை சுய விமர்சனத்துடன் அணுகும் அறிவியக்கம் நிலைகொள்ளும் காலம் வரையிலும் மிகுந்த கவனத்துடன் இதைக் கையாள வேண்டியுள்ளது. அதிலும் தான் சார்ந்த மக்கள் கூட்டத்தின் மீது காலக் கண்ணாடியைத் திருப்பி வைத்துக் கொண்டு எழுதுபவரின் பணி கடினமானது. அதை இதய சுத்தியுடன் ஆழி சூழ் உலகில் செய்திருக்கிறார் ஜோ டி குரூஸ்.



முதன் முதலாகப் பரதவர் சமுதாயத்தின் வேதனைகளையும் பண்பாட்டையும் ஒரு பரதவர் எழுதி உள்ளது எதிர்காலம் குறித்த நம்பிக்கையை வளர்க்கிறது.

ஆமையோட்டில் ஆமை எண்ணையை ஊற்றி விளக்கு வைத்து கடலில் வரும் படகுகளுக்கு வழிகாட்டும் கிராமம் ; ஆமைகள் வந்து முட்டையிடும் கரையாக விளங்கியதால் ஆமந்துறை என்ற பெயர்கொண்ட மீனவ கிராமமே கதைக்களம். கரை சற்று உள் வளைந்திருப்பதால் புயல் பாதிப்பு குறைவு. இறால் வரத்து மிகுதி.



கடலுக்குள் துலங்கும் நிகர்வாழ்வை அளிக்கும் நாம் அறியாத அரிய தகவல்களை தெளித்துக் கொண்டே கதையை உற்சாகமாக நகர்த்திச் செல்கிறார். உதாரணமாக விரிந்து கிடக்கும் கடலுக்குள் பல இடங்களை லேவைகள் என்னும் அடையாளங்கள் இட்டுச் சொல்வது; பல வகையான மீன் செல்வங்கள்; ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பரதவ மக்கள் போற்றி வரும் நம்பிக்கைகள் (கத்தோலிக்கத்திற்கு மாறிய போதும் முத்தாரம்மன் கோயிலில் ஒரு பரதவர் வந்து தொட்டால்தான் சாமி புறப்படும்; பெரிய மீன்கள் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டவை – அவை குசும்பு பண்ண ஆரம்பித்தால் மீனவர் தொழில் பண்ண முடியாது; கடலில் பிரச்னை வந்தால் குமரி அம்மனை வேண்டிக்கொள்ளுதல்) கடல் மற்றும் நில வர்ணனைகள் (கடலோடும்போது மேற்குத்தொடர்ச்சி மலையின் சிகரம் மற்றும் சோழத்தா மலையும் தெரிதல் – இது புவியியல் உண்மையா அல்லது கற்பனையா எனத்தெரியவில்லை – ஏதாயினும் நம் கற்பனையில் அழகாக உண்மையாக நிலைக்கட்டும்)



மூன்று தலைமுறைக் கதா பாத்திரங்கள் மூலம் கதை சொல்லப்பட்டாலும் 400 ஆண்டுகளுக்கு முன்பு போர்ச்சுகல்லில் இருந்து வந்து முத்துக் குளிப்பரதவர் வாழ்வில் ஒளியேற்றிய புனித சவேரியார் காலத்தையும் அதற்கும் முன்னே பலநூறு ஆண்டுகளாக நனவிலியில் சேர்ந்துவிட்ட கடல்சார் வாழ்வின் நுட்பங்களும் முடிச்சுகளும் விரிகின்றன.



பரதவர் கத்தோலிக்கத்திற்கு மாறியதற்கு இரு காரணங்கள் இருக்கலாம். . திருச்செந்தூர் கோயிலை இஸ்லாமியர்களிடமிருந்து காப்பதற்காக என்று ஒரு கூற்று; மற்றொன்று பிரான்சிஸ் சவேரியாரின் அருட்பணி. ஜெ வின் கருத்துப்படி, இஸ்லாமியர்களாலும் வடுகர்களாலும் விளிம்புக்குத் தள்ளப்பட்ட பரதவர்களுக்குக் கிடைத்த கொழுகொம்பு போர்ச்சுகீசிய கத்தோலிக்கம். ஆனாலும் பரதவர்களுக்கு குமரி அன்னை மீதிருக்கும் ஆழமான பக்தியைக் கண்ட சவேரியார் இவர்களுக்கென ஒரு தாய் தெய்வம் தேவை என்று பனிமய மாதா உருவத்தை மணிலாவிலிருந்து தருவித்து தூத்துக்குடியில் நிறுவுகிறார். வரலாற்றில் பல அடுக்குகள் உண்டு என்ற ஜெ- யின் கூற்றை நினைத்துக் கொள்கிறோம்.



முதல் அத்தியாயம் முழுக்க மீன்பிடிக் கலைச்சொற்கள். பின் இணைப்பாக வட்டாரச் சொல் அகராதி தந்துள்ளார். நற்றிணையிலிருந்து நல்லந்துவனாரின் நெய்தல் திணைப்பாடல்கள் தரப்பட்டுள்ளதோடு அத்தியாயத் தலைப்புகளும் சங்கப்பாடல்களாக அமைத்துள்ளது பேசுபொருளின் காலப்பழமையைக் குறிக்கிறது.



அலையில் அடிபட்டு கட்டுமரம் உடைய, ஒரு கத்தினைப்பிடித்து மிதந்துகொண்டிருக்கும் மூன்றுபேர்களின் மரணப்போராட்டத்தை நேர்கோட்டில் சொல்லிச் செல்பவர், அதைச்சுற்றி முப்பதிற்கும் மேற்பட்ட பாத்திரங்களின் மீன்சார் கரைமேல்வாழ்க்கையைப் பின்னிவிடுகிறார். கோத்ராப்பிள்ளை தான் கடல்மேல் மிதக்கும் மூவரில் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவர். தன் தங்கையின் மூன்று மகள்களுக்காக அவரும் மனைவி தோக்களாத்தாவும் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இலட்சிய இல்லறம் நடத்துகிறார்கள். பசியில் மிதந்துகொண்டே ஆமையையும் மீன்களையும் பிடித்து உண்டு, உறங்கி காலையில் கடல்மேலேயே விழிக்கிறார்கள். கடல்குதிரைகளும் அழகிய வண்ண மீன்களும் சுற்றிவந்து கடலைப் பூந்தோட்டமாக ஆக்குகின்றன. சாளை மீன்கள் கடலில் மின்னொளி பாய்ச்சுகின்றன. அலைஅடிப்பதையே கடல் பூத்ததாகப் பார்க்கும் மரபு உடையவர்கள். சாவின் வாயிலில் இருந்துகொண்டே கடலின் அழகை அனுபவிக்கிறார்கள். கோத்ராப்பிள்ளை மூன்று பேர்களை கட்டை சமாளிக்காது என்கிறார். காகு சாமியாரின் சொற்களை நினைவுபடுத்திக் கொள்கிறார்.



“கோத்ரா, இந்த ஒலகத்துல எல்லாத்தயும் விட மிஞ்சின சக்தி தியாகத்துக்குத்தாம் உண்டு. எல்லாரும் இந்த மாய உலகுல சேக்குறாம். நீ மறு உலகுல சேக்குற. ஆசீர்வாதமா இருப்ப ”. கத்தை விட்டு ஆழிக்குள் சென்று விடுகிறார் கோத்ரா. ஏறக்குறைய அதே நாளில் , ஜெபித்துக் கொண்டும் பின்னர் இழுத்துக்கொண்டும் இருந்த தோக்களாத்தா கிழவியும் மறைகிறாள். நண்பருக்காக உயிரைத் தியாகம் செய்வதன் மூலம் அழியாமையை அடைகிறார் கோத்ராப்பிள்ளை.



நாவலின் நாயகனாக கோத்ராப்பிள்ளையைக் கருதிக் கொண்டால், ஆசிரியர் தனது பிரதியாக உலவவிட்டிருப்பது சேகர் மூலமாக என்று தோன்றுகிறது. படித்து கப்பலுக்குப் போக வேண்டும் என்ற கனவு கொண்டவன். தாத்தாவிடம் கொள்ளை அன்பு. தூத்துக்குடியின் துறைமுகச் சாலைகளில் கனவுடன் நடமாடுபவன். கையில் இருக்கும் காசுக்கு சர்பத் குடித்து விட்டதால் பேருந்தில் பக்கத்து ஊரான மணப்பாட்டில் இறங்கி (சவேரியார் குகையையும் தரிசித்து விட்டு), பின் ஆமந்துறைக்கு நடந்தே செல்பவன். . ஒரு காலத்தில் பெரிய கட்டுமர நிபுணராக இருந்த தாத்தா தொம்மந்திரையாரின் இறுதிக்காலத்தில் அவருக்குப் பணிவிடை செய்யும் சேகர் தாத்தாவின் இறுதி மலத்தைப் பூப்போல அள்ளி கடலில் சேர்க்கிறான். பெயரன் மூலம் மலமாசு அகற்றப்படுகிறார் தொம்மந்திரையார்.



கொழும்புவிற்குச் சென்று சம்பை வணிகம் மூலம் பெரும் செல்வராக வளர்ந்து, காகு சாமியார் கேட்டுக் கொண்டதன் பேரில் ஆமந்துறைக்காக பெரிய மீன்தொட்டிகளை அமைத்துக் கொடுத்த மிக்கேல் பர்னாந்து, கொழும்பில் கத்தியால் குத்துபட்டு இறக்க, வாய்பேச முடியாத அவர் மகனும் கூடவே மருமகளும் அகதிகளாக ஆமந்துறைக்கு வருவதும் அவர்களுக்கு சூசையும் கோத்ராவும் அடைக்கலம் தருவதும் அலைபுரட்டிய மரம்போல வாழ்வின் தலைகீழாக்கலைக் காட்டுகிறது.



இந்த மிக்கேல் பர்னாந்துவின் பேரன் சிலுவையும் அவனை வளர்த்த சூசையும் , கோத்ராவின் தியாகத்திற்குப் பின் கத்தைப் பிடித்துக் கொண்டு மிதக்கும் இருவர்.இப்போது அடுத்த தியாகம் அழைக்கிறது . சூசை சிலுவையின் பெற்றோர்களுக்கு செய்த பிழையை நினைத்து அந்தோணியாரிடம் மன்றாடிக்கொண்டே இருக்கிறார். மிதக்கும் போது திடீரென சூடான நீரோட்டமும் குளிர்ந்த நீரோட்டமும் மேலும் கீழும் பாய்வதை உணர்கிறார்கள். வாநீவாடும் சோநீவாடும் (கடலில் இருந்து கரையை நோக்கி வரும் நீரோட்டமும் கரையில் இருந்து பாயும் நீரோட்டமும்) எதிரெதிர் திசையில் ஓடுவதால் சுழல் உண்டாவதை கணித்து விடும் சூசை பலகையைத் தள்ளி விட்டு சுழலில் மூழ்கி விடுகிறார். மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த சிலுவை காப்பாற்றப் படுகிறான்.



பரதவர்களுக்கிடையே ஒரே துறைக்குள்ளும் துறைகளுக்கிடையிலும் ஒற்றுமை இல்லாத்தை எண்ணி ஏங்கும் ஆசிரியர் நூலின் வெற்றியை விட பரதவரின் உயர்வே நோக்கம் என்று ஒரு பேட்டியில் கூறுகிறார். நெய்தல்பாடிய நல்லந்துவனார் கரையைப் பாடினார் அன்றியும் கடல்மக்களின் சுக துக்கங்களைப்பாடவில்லை என்ற தன் உள்ளத்தின் ஏக்கமாக விளைந்த்து ஆழிசூழ் உலகு எனலாம். நாடார் – பரதவர்; மரப்படகு – விசைப்படகு, மீனவர் – வணிகர், இந்து –கிறித்தவர், ஆசிரியர் – மாணவர், என முரணியக்கங்கள் விரவிக்கிடக்கின்றன.



பி எஸ் ரத்தினசாமி நாடார் மறக்கமுடியாத பாத்திரமாக வளர்கிறார். விருது நகரில் வணிகம் வறண்டாதால் சுவையான கருவாடு கொள்முதல் செய்வதற்காக ஆமந்துறைக்கு வருகிறார். காகு சாமியார் அறிவுரையின் பேரில் தொம்மந்திரை மீன்வினியோகம் செய்ய, தலைச்சுமையாகவே ஆம்ந்துறையிலிருந்து திருச்செந்தூர்க்கு புறப்படுகிறார் நாடார். அயராத உழைப்பால் படிப்படியாக வளர்கிறார். கொழும்பிற்கு வணிகம் விரிவடையச் செய்யும் ஆசையில் மகன் சுயம்பு தனுஷ்கோடி புயலில் போட்மெயிலில் அகால மரணமடைகிறான். ஆடிப்போன வாழ்வின் அடித்தளத்தை திருச்செந்தூர் முருகன் கோயிலிலும் ஆமந்துறை அந்தோணியார் கோயிலிலும் மீட்க முயல்கிறார் ரத்தினசாமி நாடார். புரிந்துணர்வையும் உழைப்பையும் நன்றி அறிதலையும் சாத்தியமாக்கும் வாழ்க்கை.



நாடார்களின் எழுச்சியும் அவற்றின் காரணங்களான ஒற்றுமை, கடின உழைப்பு, சிக்கனமும் பரதவர் பார்வையில் காட்டப்படுகின்றன. “ நீங்க பனையில கஷ்டப்படறீங்க; நாங்க கடல்ல கஷ்டப்படறோம் “கடின உழைப்பு இருந்தும் ஒற்றுமையும் சிக்கனமும் இல்லாமை மீன்பிடித்தொழிலிலேயே உடனுறையும் என்று தோன்றுகிறது. . ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மீறிய ஆபத்து உள்ள தொழிலில் மனம் எப்போதும் கொந்தளிப்புடன் இருக்கிறது. அது சாமானிய வாழ்வின் அலைநீளத்தைத் தாண்டியே ஊசலிடுகிறது. ஆதலால் அற்ப காரணங்களுக்குப் பூசலிடுகிறது. முறைமீறிய காமமும் நெறிபிறழ் வன்முறையும் மரணத்தை தினமும் தரிசிக்கும் சமூகத்துடன் ஒட்டிக் கொண்டுவிட்டன போலும்.



மத்தகம் குறும் புதினத்தின் வாசகர் கடித எதிர்வினையொன்றில் ஜெ இப்படிக் குறிப்பிடுவார். – யானைப்பாகன்களின் வாழ்க்கை சரியாக விளக்க முடியாதது. அவர்கள் மரணத்தின் விளிம்பில் வாழ்வதனால் இருக்கலாம் என்கிறார், எனில், பரதவர் வாழ்க்கையும் இங்கே ஒப்புநோக்கத் தக்கது.



நெய்தல் திணைப்பாடல்களையும் வரிகளையும் கலித்தொகை, நற்றிணை ஐங்குறுநூறிலிருந்து எடுத்தாண்டு. கடலின் விரிவு போலவே பிரிதலின் துயரைத் தீட்டியுள்ளார் ஆசிரியர்.



அருள்திரு அல்போன்ஸ் மரிய காகு சாமியார் 1901 இல் பிறந்து 1984இல் மறைந்த கத்தோலிக்க மகான். ஆமந்துறையில் அருட்பணி செய்யும்போது பரதவர்களுக்காக உருகுகிறார். இறால் பிடிப்பின் முக்கியத்துவத்தை முன்னதாகவே அறிவுறுத்துகிறார். சவேரியாரின் மறுவடிவம். சமயத்தில் வந்து தேங்கிவிடும் கசடுகளைக் கழுவிவிடும் புனிதநீர். காந்தியைப் புரிந்துகொண்டு பரிவுகொண்டவர்.



நெய்தலுக்கான நவீன அம்மூவனார் என்று ஜோ டி குருஸை நினைத்துக் கொள்கிறேன். கொந்தளிப்பு நிறைந்த கடல்சார் சமூகத்தின் வாழ்வை ஒரு குப்பியில் பிடித்துக் கொடுத்திருக்கிறார் குப்பியும் கொந்தளிப்பது வியப்பல்ல.

– ராகவேந்திரன்

எழுதியவர் : ராகவேந்திரன் (26-Jul-19, 4:02 pm)
பார்வை : 43

மேலே