யாக்கை எடுத்துவந்தது இங்குநாம் அன்பமைந்து உய்ய அறிமினோ - நேயம், தருமதீபிகை 362
நேரிசை வெண்பா
என்பமைந்த யாக்கை எடுத்துவந்த(து) இங்குநாம்
அன்பமைந்(து) உய்ய அறிமினோ - என்புடலை
முன்னம் இருவர் முதலன்பைப் பேணவிடுத்(து)
என்ன பயனடைந்தார் எண். 362
- நேயம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
இங்கே சிறந்த மனித உடம்பில் நாம் பிறந்து வந்தது எவ்வுயிர்க்கும் அன்பு புரிந்து உய்தி பெறவேயாம்; தாம் எய்தியிருந்த உடம்புகளை விடுத்து அன்பு ஆற்றி முன்னம் இருவர் பெற்ற இன்ப நிலையை உணர்ந்து உய்ய வேண்டும் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், அன்பு புரிவதே அரிய பிறவிப் பேறு. என்கின்றது.
என்பு அமைந்த யாக்கை என்றது அன்பு அமைய வந்த இந்தப் பிறவியின் அருமை அறிய வந்தது. என்பு இல்லாத புழு பூச்சி முதலிய இழிந்த பிராணிகளாய்ப் பிறந்து கழிந்து படாமல் உயர்ந்த உணர்வு நலம் கனிந்த சிறந்த மனித உருவில் தோன்றியதைச் சிந்தித்து நோக்கின் இத்தோற்றத்தின் ஏற்றமும் ஊற்றமும் உணரலாகும். தோன்றிய பயனைத் தோய்ந்து கொள்ள வேண்டும்.
பிற பிறவிகளினும் இது அவயவங்கள் நன்கு அமைந்தது; எதையும் கருதி நோக்கும் கருத்து மிக உடையது; உறுதியான அறிவு ஆற்றல்கள் தோய்ந்தது; விதி விலக்குகள் வாய்ந்தது; செய்வது, தவிர்வது தெளிந்து உய்தி காண உரியது; இத்தகைய அருமை நலங்கள் யாவும் உரிமையுடன் வாய்ந்த இந்த மனிதப் பிறப்பு அன்புடைமையால் பண்பு பல படிந்து பெருஞ்சிறப்பினை அடைகின்றது. ஆதலால் அன்பு புரிவதே இந்த அரிய பிறவியின் பெரிய பயனாய் மருவி நின்றது.
அன்போ(டு) இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்(கு)
என்போ(டு) இயைந்த தொடர்பு. 73 அன்புடைமை
என்றது. பொய்யாமொழி. உய்தியை உரிமையுடன் உணர்த்தியுள்ள இதனை ஊன்றி உணர்ந்து சிந்திக்க வேண்டும்.
அருவமான அரிய உயிர் உருவமான இந்த உடலில் புகுந்து இங்கே வந்தது அன்பு செய்யவேயாம் என்றமையால் அது செய்யாவழி இத்தோற்றம் வெய்யதாய் வீணே இழிந்துபடும் என்பது விளங்கி நின்றது.
உடம்போடு கூடியல்லது அன்பு செய்ய முடியாதாதலால் அதற்குக் தகுதியான வடிவை அது தாங்க நேர்ந்தது.
மாடு, ஆடு முதலிய வேறு உடம்புகளை மருவின் அறிவோடு அன்பு செய்ய இயலாதாதலின் மனித உடம்பை உரிமையாகத் தழுவிக் கொண்டது. தழுவியது பழுதாகாமல் விழுமியது கெழுமியது. உய்தி உறவே உயர் மெய் எய்தியது.
இங்ஙனம் உயர்ந்த பிறப்பை அடைந்து நிற்கின்ற உயிர் தகுந்த அன்பைச் செய்து கொள்ளின் பின்பு வேறே பிறந்துபடாமல் .சிறந்தே பேரின்ப நிலையை விரைந்து பெற்றுக் கொள்ளுகின்றது.
அன்பு யாண்டும் பிறர்க்கு இதமாய் மீண்டு விரிகின்றது; அதன் ஒவ்வோர் அணுவும் இன்பத் துளிகளாய்ப் பரவி வருதலால் அது எங்கும் புண்ணியக் கடலாய்ப் பொங்கி மிளிர்கின்றது; ஆகவே பேரின்பச் சுவையை ஆன்மா நுகர்ந்து மகிழ்கின்றது.
இவ்வாறு சிறந்த ஊதியமாய் அன்பு அமைந்திருத்தலால் அதனை விழைந்து புரிவது ஆருயிர்க்கு அமைந்த உரிமை ஆயது.
தானமும், தருமமும், தவமும், ஞானமும் உயிர்க்கு உறுதியாய் உய்தி புரிவனவாயினும் அன்பைப் போல் அவை எளிதில் இன்ப நலனை ஈந்தருளாது. பொருளைச் செலவழித்துப் புலன்களை அடக்கிப் பட்டினி கிடந்து உடம்பை வாட்டிப் படாதபாடுகள் பட்டபின்பு முடிவில் சிறிது பலனைக் காட்டும் அவற்றினும், யாதொரு பாடும் படாமல் கருதிய உடனேயே அரிய உறுதி நலங்களையும் பெரிய இன்பங்களையும் ஒருங்கே விளைத்தருளுகின்ற அன்பு எவ்வளவு அதிசயமுடையது.
இதயம் சிறிது கனியவே அரிய நலங்கள் யாவும் எனிதே உதயம் ஆகின்றன. தெய்வ கிருபையும் கைவந்து சேர்கின்றது.
'அன்பினுக்கு எளிவந்த அமுதே' என இறைவனைத் துதித்திருத்தலால் அன்பின் அற்புத நிலைமையை அறியலாகும்.
கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
1511 என்பு தோலுடை யார்க்குமி லார்க்கும்,தம்
வன்ப கைப்புலன் மாசற மாய்ப்பதென்?
முன்பு பின்பின்றி, மூஉல கத்தினும்,
அன்பின் நல்லதோர் ஆக்கமுண் டாகுமோ?? 16 மந்தரை சூழ்ச்சிப் படலம், அயோத்தியா காண்டம், இராமாயணம்
வசிட்ட முனிவர் இராமபிரானுக்கு உரைத்த படியிது.
தம் புலன்களை அடக்கிக் கடவுளரை நோக்கிக் கடுந்தவங்கள் புரிவதினும் எவ்வுயிர்க்கும் இரங்கி அன்பு செய்துவரின் அதனால் எல்லா இன்ப நலங்களும் எளிதே வந்து சேருமே என மக்களுக்கு இதமான ஓர் ஞான உபதேசமாய் இது இசைந்திருக்கிறது. ஒரு அரிய தவசி வாயிலாக அன்பின் பெருமையைக் கம்பர் இங்ஙனம் காட்டியுள்ளார்.
’அன்பல்லது வேறோர் ஆக்கம் இல்லை’ என்றதனால் அது எவ்வளவு பெரிய பாக்கியம்! என்பதை எளிதின் உணர்ந்து கொள்ளலாம். உயிர்க்கு எவ்வழியும் உய்வைத் தருதலால் இது தெய்வத் திரு என நின்றது.
பிற உயிர்களுக்கு இரங்கி அருளும் இயல்பினையுடையவர் தமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் உதவ நேர்கின்றனர்.
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. (குறள், 72) என அன்பாளரது பண்பாட்டினை வள்ளுவர் இவ்வாறு கண் காட்டியுள்ளார். ததீசி முனிவரிடம் இந்திரன் ஒரு முறை வந்து குறையிரந்து நின்றான். தமது உடலிலுள்ள ஒரு எலும்பால் அவனது குறை நீங்கும் என்று தெரிந்ததும் உடனே யோக சித்தியால் தமது இனிய உயிரை நீக்கி முனிவர் உதவி புரிந்தார் அந்தப் பேரன்பாளர் புரிந்த ஆருயிர் உதவியை வியந்து யாவரும் புகழ்ந்தனர். தேவ தேவரும் அவரை ஆவலுடன் போற்றி மகிழ்ந்தனர். அத்தூயவர் நேயமுடன் நல்கியது நிலை மிக உயர்ந்தது.
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
நேயயென்(பு) இந்திர நீ,கொள் வாயெனத்
தாயினும் அன்புறு ததீசி என்பவன்
ஏயவெங் கானலின் நீடு நீர்எனும்
காயம்விட்(டு) அரிகழல் கலந்து மேயினான். 1
மன்பெரும் சிறப்பினான் மாலை வெண்குடை
மின்பொழி மணிமுடி வேந்தன் நல்கெனா
என்புமாங்(கு) அளித்தனன் இருந்த வத்தினான்
அன்பினர் யாதுமற்(று) அருள்க லாதவே. 2 பாகவதம், 6-6
ததீசியின் அன்புநிலை இங்ஙனம் பண்பு படிந்துள்ளது.
சீமூதவாகன் என்பவன் மிகுந்த கண்ணோட்டம் உடையவன். ஓரறிவுயிரும் ஊறுபடச் சகியாத பேரருளாளன். ஒரு நாள் பெரிய மலைச்சாரல் அருகில் இவன் செல்லுங்கால் அங்கு ஓர். முதியவள் தனியே அழுது கொண்டிருந்தாள். அருகே அணுகிப் பரிவுடன் வினவினான். தான் அழுதற்குரிய காரணத்தை அவள் தெளிவாகச் சொன்னாள்: இப் பக்கத்தே பறவை உருவில் அதிசயமான ஓர் பூதம் உள்ளது. இவ்வூரிலிருத்து ஆண்டுக்கு ஒருமுறை அகற்கு ஒர் ஆடவனைப் பலி கொடுப்பது வழக்கம். வீட்டின் கணக்குப்படி இந்த முறை எனக்கு வந்துள்ளது. ஒரே ஒரு மகனையே வைத்திருக்கிறேன். நாளை நின்று. இவ்வேளையில் இம் மலைக்கு அனுப்ப வேண்டுமே என நினைந்து அழுகின்றேன்; என் நெஞ்சம் துடிக்கின்றதே; நான் என் செய்வேன்? என அவள் ஏங்கி மொழிந்தாள்.
அம் மொழியைக் கேட்டதும் இவன் உள்ளம் உருகி நின்றான். ஆளைக் கொண்டு வந்த பலியிடுகிற நேரத்தையும் முறைகளையும் விவரமாக அவளிடமே வினவித் தெரிந்து கொண்டான். அவளைத் தேற்றி அனுப்பினான். ஒருநாள் கழிந்தது. மறுநாள் குறித்த நேரத்திற்கு ஒரு நாழிகைக்கு முன்னதாகவே தனியே இவன் விரைந்து சென்று உடல் முழுதும் வெள்ளை உடையால் போர்த்துக் கொண்டு அந்தப் பலிப் பாறையில் படிந்திருந்தான்; பறவை வந்தது; எடுத்துச் சென்றது. தனது இருப்பிடத்திற்குக் கொண்டு போய் உடல் முழுவதையும் கொத்தித் தின்றது. அதன் பசி முழுவதும தீர்ந்தபின் இவன் முகத்தைப் பார்த்தது. உயிர் போகாமல் மலர்ந்த முகத்துடன் உவந்திருக்கும் இவனது நிலைமையைக் கண்டதும் அது வியந்து நின்று விவரம் கேட்டது.
இவன் உற்ற உண்மையை முற்றும் உரைத்தான். இவனுடைய கருணைப் பண்பை அறிந்ததும் அது நெஞ்சம் இரங்கி வருந்தியது; தன் வாழ்க்கை நிலையை இகழ்ந்தது. அன்று முதல் யாதொரு ஊனையும் தின்பது இல்லையென்று உறுதி செய்து விரதம் கொண்டது. தனது மந்திர சத்தியால் இவனது உடலைப் பழையபடியே வளரச் செய்தது. இவனை வாழ்த்தி நிறுத்தி விட்டு விந்த மலைக்கு அது தவம் செய்யச் சென்றது. இவனுடைய அன்புடைமையினால் கொடிய பூதமும் இனிய நீர்மையாய்க் குணம் அடைந்தது; பலி செலுத்தி வந்த அவ்வூரவர் யாவரும் உள்ளம் களித்து உவந்து துதித்து இவனைக் குல தெய்வமாக நினைத்து வணங்கிப் போற்றி வாழ்த்தி வந்தனர்.
இன்னுயிரினும் இனியதாக அன்பொழுக்கத்தை இன்னவாறு இவர் பேணி வந்துள்ளமையால் ’முன்னம் இருவர்’ என ஈண்டு எண்ண நேர்ந்தார். அன்புடையார் எவரும் பேரின்ப நிலையைப் பெறுகின்றார். அந்தப் பண்பு படிந்து பரம பதம் அடைக என்கிறார் கவிராஜ பண்டிதர்.