நினைவால் மனிதன் நிலாவி வாழ்வை நடத்தி வருகின்றான் - நினைவு, தருமதீபிகை 372
நேரிசை வெண்பா
நினைவால் மனிதன் நெடிது நிலாவி
நனவால் மிகவும் நடந்து - தினமும்தன்
வாழ்வை நடத்தி வருகின்றான் வந்தமைந்த
சூழ்வின் படியே தொடர்ந்து. 372
- நினைவு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
மனிதன் எண்ணங்களால் வளர்ந்து பழகியுள்ள பழக்க வாசனையின் படியே தொழில் புரிந்து யாண்டும் தனது வாழ்வை நடத்தி வருகின்றான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
நினைப்பு, மறப்பு என்பன ஒளியும், இருளும் என மனித வாழ்வில் மருவியுள்ளன. நினைவு அமைந்த அளவுதான் வாழ்வு இனிது நடந்து வருகின்றது; நினைவு நேரமெல்லாம் நனவு என நிலவி நிற்றலால் அது நேராதபோது யாதொரு விளைவும் சேராது என்பது தெளிவாய் நின்றது.
மனிதனது வாழ்வும் தாழ்வும் அவனுடைய நினைவிலேயே நிலைத்து உள்ளன. வித்தில் மரம் அடங்கியிருப்பது போல் நினைப்பில் நிலை அடங்கியிருக்கின்றது.
எண்ணங்கள் வாழ்வின் வண்ணங்களாய் வருகின்றன. எண்ணத்தின்படியே மனிதன் வண்ணமும் வடிவும் அமைந்து வாழ்ந்து வருகிறான். காரண காரிய முறையில் இது பூரணம் அடைந்துள்ளது.உள்ளமே எல்லாம் என உணரவுரியது.
ஒருவன் புண்ணிய சீலன் என வெளி வருவானாயின் அவன் புண்ணியமான எண்ணங்களை நாளும் எண்ணி வந்துள்ளான் என்பது திண்ணமாகத் தெளிவுறுகின்றது.
வெளியே தோன்றுகின்ற விளக்கங்கள் யாவும் உள்ளே ஊன்றிய நினைவுகளிலிருந்தே ஒளி பெற்று நிற்கின்றன.
புகழ் புண்ணியங்களாகிய உயர் நிலைகளும், பழி பாவங்களாகிய இழி நிலைகளும் நினைவிலிருந்து விளைந்த நெடிய விளைவுகளேயாம். நினைவின் நிலைகள் எங்கும் பொங்கி நிலாவுகின்றன.
உள்ளே நினைவு நல்லதாய் உயரின், மனிதன் வெளியே நல்லவனாய் உயர்கின்றான்; அது தீயதாய் இழியின் அவன் தீயவனாய் இழிகின்றான். நினைவுகளே உயிர்களை ஆண்டு வருகின்றன.
தினையளவு தீமை மனதில் ஏறினும் அவ்வளவுக்கு மனிதன் தீயனாகின்றான். நன்மையும் அப்படியே தன்மையை வளர்க்கின்றது. தீய நினைவு தீயனாக்கி மனிதனைத் துன்பத்தில் ஆழ்த்துகின்றது; தூய நினைவு தூயனாக்கி அவனை இன்பத்தில் ஏற்றுகின்றது.
முத்தியின்பத்தையும், நரக துன்பத்தையும் தன்னையுடையானுக்குத் தரவல்லதாய் நினைவு மன்னியிருத்தலால் அதன் தன்மையும் வன்மையும் என்ன நிலையின என்பது எளிது தெளிவாம்.
நிலத்தில் இட்ட வித்து முளைத்து விளைதல்போல் மனத்தில் தொட்டது கிளைத்து வருகின்றது.
நல்ல வித்து நலம் பல தருகின்றது; கெட்ட வித்து கேடு விளைவாகின்றது. விதைத்த விளைவை உழவன் அறுப்பது போல், நினைத்த பலனை மனிதன் அனுபவித்தே தீர வேண்டும்.
A man will reap just what he sows. - Page
‘தான் விதைத்ததையே மனிதன் அறுப்பான்” என இது குறித்திருக்கின்றது. நினைப்பின் நிலையையும் வினைப் பயனையும் மேல்நாட்டார் எவ்வாறு கருதியுள்ளனர் என்பது இதனால் அறியலாகும். கருதியனவே கரும பலன்களாய் மருவி வருகின்றன.
நினைவில் நிமிர்ந்து, நனவில் நடந்து வருகின்றான். என்றது மனித வாழ்வின் இயலும் செயலும் கருதி வந்தது.
நினைவே யாண்டும் உயிரினங்களை ஆண்டு வருகின்றது. அதனைப் புனிதமாகப் பேணி வருகின்றவன் இனிய மனிதனாய் இன்பம் நுகர்கின்றான்; அங்ஙனம் பேணாமல் பிழைபட விட்டவன் ஈனமாயிழிந்து இன்னலுழந்து கெடுகின்றான்.
நல்ல நினைவிழந்த போதே நலமிழந்து
அல்லல் உழந்தான் அவன்.
நனவில் விழித்துத் தொழில் புரிகின்றவன் நினைவிலும் விழிப்பாய் எழில்புரியின் அவன் ஒளி விழியுடையனாய் உயர் பயனடைகின்றான் நினைவிலேயே எல்லா வாழ்க்கை நிலைகளும் நிலைத்து நிற்கின்றன; அந்த உண்மையை ஊன்றி உணர்ந்து தன்மையுடன் நடந்து நன்மை அடைந்து கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

