ஒரு லட்சம் பேரை வீட்டுக்கு அனுப்பிய IBM அதுவும் வயது அடிப்படையிலா
சான் பிரான்சிஸ்கோ, அமெரிக்கா:
International Business Machine என பெரிய பெயர் கொண்ட IBM தான் உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனம். இவர்கள் தான் உலகின் நம்பர் 1 மென்பொருள் நிறுவனம்என்கிறது சில அறிக்கைகள். கடந்த சில வருடங்களில் (ஏறத்தாழ 5 ஆண்டுகள்) சுமார் ஒரு லட்சம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள். சரி இதில் என்ன தவறு என்று கேட்கிறீர்களா..? இந்த ஒரு லட்சம் ஊழியர்களையும், அவர்களின் செயல்பாடு அடிப்படையில், மதிப்பீடு செய்து அவர்களை வேலையில் இருந்து நீக்கவில்லை. வயது அடிப்படையில் அவர்களை வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள். எந்த அடிப்படையில் இந்த ஒரு லட்சம் பேரையும், அவர்களின் வயது அடிப்படையில் வேலையை விட்டு தூக்கி இருக்கிறார்களாம். இத்தனைக்கு இந்த வயதான ஊழியர்கள், IBM சொல்லும் வேலைகளைச் செய்ய முழு திறன் படைத்தவர்களாகத் தான் இருந்தார்களாம். IBM நிறுவனத்தில் வயது அடிப்படையில் பாரபட்சம் பார்க்கப்படுவதாக IBM நிறுவனத்தின் முன்னாள் ஹைப்ரிட் க்ளவுட் (IBM Hybrid Cloud) விற்பனையாளர், ஜோனதன் லாங்லி (Jonathan Langley) வழக்கு தொடுத்திருக்கிறார். இந்த 61 வயது IBM ஊழியர், தங்கள் பணியை சிறப்பாக செய்ய முடிந்த வயதான பணியாளர்களை, நியாயமற்ற முறையில் வேலையை விட்டு தூக்கிவிட்டு, இளம் வயது பணியாளர்களைக் கொண்டு நிரப்புகிறார்கள் என வழக்கு தொடுத்தார். ஒப்புதல் வாக்குமூலம் வழக்கு விசாரணையில் IBM பாரபட்சம் காட்டுவதை, அந்த நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத் துறையின் துணைத் தலைவராக இருந்த ஆலன் வைல்ட் (Alan Wild) நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்திருக்கிறார். "50,000 முதல் 1,00,000 ஊழியர்களை ஏறத்தாழ கடந்த 5 ஆண்டுகளில் வேலையை விட்டு தூக்கி இருக்கிறோம். " எனச் சொல்லி இருக்கிறார். ஏன் எனக் கேட்டதற்கு IBM பார்க்க "cool and trendy" ஆக கூகுள் மற்றும் அமேஸான் போல மில்லினியல் நிறுவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக வேலையை விட்டு தூக்கினார்களாம். IBM அறிக்கை 108 வயதான IBM நிறுவனத்தின் ஒரு அறிக்கையில் "IBM நிறுவனம், ஒரு ஆண்டுக்கு சுமார் 50,000 ஊழியர்களை புதிதாக வேலைக்கு எடுக்கிறது. இந்த ஊழியர்களுக்கு சுமார் 0.5 பில்லியன் (500 மில்லியன்) டாலர் செலவழித்து பயிற்சி கொடுக்கிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 8,000 விண்ணப்பங்கள், IBM நிறுவனத்துக்கு, வேலை கேட்டு வருகின்றன. இந்த 8,000 என்பது இதுவரை IBM வரலாற்றில் இல்லாத எண்கள்" எனச் சொல்லி இருக்கிறார்கள். புதிய படை IBM நிறுவனம், கடந்த சில ஆண்டுகளில், உலகம் முழுக்க வேலை பார்க்கும், தன்னுடைய மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி இருக்கிறது. அதே காலங்களில் பயங்கரமாக புதிய இளைஞர்களை வேலைக்கு எடுத்திருக்கிறது என்பதும் கவனிக்க வேண்டி இருக்கிறது. இந்த கால கட்டத்தில் தான் நம் ஜோனதன் லாங்லிக்கும் வேலை போனதாம். இத்தனைக்கும் ஜோனதன் லாங்லி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திக் கொண்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் அமெரிக்க அதிபராக 2016-ம் ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்ற உடன், அமெரிக்க வேலைகள் அமெரிக்காவுக்கே என முழங்கிக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு எல்லாம் அல்வா கொடுக்கும் விதத்தில், வயதான அமெரிக்கர்களையே வேலையை விட்டு தூக்கி இருக்கிறதாம் IBM. இதை ப்ரோ பப்ளிகா என்கிற அமைப்பு பல்வேறு நபர்களிடம் விசாரித்து கடந்த மார்ச் மாதத்தில், IBM நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளில், 40 வயதுக்கு மேற்பட்ட சுமார் 20,000 அமெரிக்க ஊழியர்களை வேலையை விட்டு தூக்கியதாகச் செய்திகளை வெளியிட்டதையும் கவனிக்க வேண்டி இருக்கிறது.
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
