வாழ்க்கை

ஏதோ ஒன்று எம்மை அசைக்க
நடை பயிலும் மக்கள் நாம்
என்று முடியும் இந்த ஆட்டம்
என்று அறியா மூடர் நாம்

ஆட்டம் போடும் மாந்தர் கூட்டம்
ஆடி முடிந்தால் எடுப்போம் ஓட்டம்
ஆதி என்றால் அந்தம் உண்டு
அறிவோம் அதிலே நன்மை உண்டு

கையில் எதுவும் இல்லா வாழ்க்கை
கணக்கு முடிந்தால் எரியும் யாக்கை
என்ன உண்டு எடுத்துச் செல்ல
நன்மைச் சோற்றை மெல்வோம் மெல்ல

பற்றி எரியும் மெழுகு வர்த்தி
பற்றி முடிய மறைந்து போகும்
பற்றி நின்ற சொந்தம் யாவும்
எட்டி ஓடும் வெற்று வாழ்க்கை

என்ன நடக்கும் நாளை உனக்கு
எந்த மண்ணில் மரணம் உனக்கு
கணக்கு அறியா வாழ்க்கைக் கணக்கு
கருதி வாழ்ந்தால் நன்மை உமக்கு

கொண்டு போக எதுவும் இல்லை
கொடுத்தார் வாழ்வில் குறையும் இல்லை
தீர்ந்து போகும் முன்பு வாழ்க்கை
தீது தீர வைப்போம் வேட்கை

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (6-Aug-19, 11:15 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : vaazhkkai
பார்வை : 482

மேலே