கொஞ்சம் கொஞ்சமாய் காதல் சாரல் - பகுதி 5

கைத்தொலைப்பேசியின் ஒலி பால்கனியிலிருந்து கேட்டது. ஆம். சுஜி வந்தவுடன் பால்கனி சென்றதால், அங்கிருந்த சாய்வு நாற்காலியில் தன் கைத்தொலைப்பேசியை வைத்தாள். அழைப்பது நிச்சயம் அவள் கணவன் தான் என்பது இருவருக்கும் தெரியும்.

சுஜி, அக்கீரை தன் கைகளால் தள்ளி விட்டு அலறிக் கொண்டிருக்கும் கைத்தொலைபேசியை எடுக்க முற்பட்டாள். அவனை தள்ளி சென்ற கைகளின் கரங்களை பற்றினான் அக்கீர். பற்றிய வேகத்தோடு சுஜியை தன் வசம் இழுத்தான். தள்ளாடிய சுஜி அவன் நெஞ்சை இடித்து, அவன் பிடியில் நின்றாள்.

இருவரின் கண்களும் பேசியது. உலகம் கூட இருவருக்கும் ஒரு நிமிடம் நின்றுப் போனது.

அக்கீர்: நான் தெழுவர அல்லா மேல சாட்சியா, நீ கும்பிடற உன் சிவன் மேல சாட்சியா கேட்கறேன் எனக்காக உன்னால ரெண்டு வருஷம் காத்திருக்க முடியுமா?


சுஜியின் கண்கள் கலங்கின. ஆனந்தத்தில். எத்தனை நாற்கள் ஏங்கிய வார்த்தைகள் இது.

அக்கீர்: யார் எதிர்த்தாலும்... நான் வருவேன். உனக்காக வருவேன்.

அக்கீரின் கேள்விக்கு சுஜி கண்ணீரால் ஆமாம் என்று பதில் தந்து, அவன் நெஞ்சில் சாய்ந்தாள். சாய்ந்தவள் சொன்னாள்...

சுஜி:

இரவும் பகலும் உரசி கொள்ளும்
அந்தி சாயும் வேளையில்
லேசான தூறல் மழையில்
நீயும் நானும் வீட்டினில்
இறுக்கி அணைத்தபடி
நிறைய காதலுடன்
கொஞ்சூண்டு வெட்கத்துடன்
அந்த காமமில்லா காதலை சுமந்தப்படி
உனக்கு நான்
எனக்கு நீ என்று உயிர் உருக
உருகிய நிலையில் ஸ்தம்பித்து இருக்கும்
நம்மை யோசித்துப்பார்..

இந்த சிணுங்கலில்
இந்த முத்தத்தில்
இந்த கொஞ்சலில்
இந்த ஸ்பரிசத்தில்
எவ்வளவு அன்பு கொட்டி கிடக்கிறது என்று எண்ணிப்பார்
போன ஜென்மங்களை எல்லாம்
ஞாபக படுத்தும் வல்லல் பெற்றது
இந்த காதல்
என்று நினைத்துப்பார்
பேசிக்கொண்டிருக்கும் வேளையில்
என் எதிர்பாரா முத்தம்
எப்படி உன்னை நிலைகுலைய வைக்கும்
என்று யூகித்துப்பார்

சொல்லியவள் நெற்றியின் கேசங்களை கோதி விட்டு, அக்கீர் வைத்தான் ஓர் அழுத்தமான நீண்ட முத்தம்.

அக்கீர்:

காமம் என்றால் வெறும் புணர்ச்சி
என்று எண்ணி ஏமாந்து கொண்டிருந்த
எனக்கு
காமம் புணர்தலில் மட்டும் இல்லை...
பார்த்தலில்
தொடுதலில்
உரசலில்
கொஞ்சலில்
சீண்டலில்
தீண்டலில்
நடக்கையில்
கடக்கையில்
எழுகையில்
வருகையில்
நனைதலில்
கூட காமமும் காதலும் கொட்டி கிடக்கு
என்பதை அழகாக
எடுத்து சொல்லி விட்டாயடி
இவ்வளவு காதல் இருக்கும் போது
நான் ஏன் உன்னை தொட நினைக்க வேண்டும்
இப்படியே
வாழ்ந்து விட்டு போய்விடுவேன்

இன்னொன்றையும் இந்த நேரத்தில்
புரிய வைத்து விட்டாய்
வேறென்ன பெரிதாக
இருந்து விட போகிறது எங்களுக்கு
பெண் என்பவள் போதையல்ல
வெறும் காமம் கழிக்கும் இடமல்ல
அன்பின் பிறப்பிடம்
என்று உணர்ந்தாலே
ஆண்களுக்காக உயிரையும்
கொடுப்பாள் என்று....
மண்டையில் அடித்தாற்போல
உணரவைத்து விட்டாயடி
இது போதுமடீ
என் வாழ்வை ரசிக்க ருசிக்க
வளமாக்க....
உன்னோடு இந்த ஒரு நாள்....

முடித்தவன் அவள் கால்களுக்கு கீழே மண்டியிட்டு அமர்ந்து அவளது வலது காலை தொட்டு தூக்கினான். அதை அவன் மடியினில் வைத்தான். சுஜியை ஏறெடுத்து பார்த்தான். சுஜி அவன் என்ன செய்ய வருகிறான் என்பதை ஊகிக்க முடியாமல் ஸ்தம்பித்திருந்தாள்.

அவள் பாதங்களை வருடியவன் அதில் முத்தம் பதித்தான். சுஜி அக்கீரின் முகத்தை தன் இருக்க கைகளில் பிடித்தாள். அவன் தலையை தூக்கி,

சுஜி: ஐ லவ் யூ சோ மாச் அக்கீர்...

என்றுச் சொன்னவளை பார்த்து புன்னகைத்த வண்ணம் கீழே பார் என சைகை செய்தான் அக்கீர். சுஜி குனிந்து அவன் தொடையில் இருக்கும் அவளின் பாதத்தை பார்த்தாள். அக்கீர் மூடியிருந்த அவன் கையை திறந்தான். அதில் ஜோடியற்ற ஒற்றை மணிகள் பொருந்திய மிஞ்சி இருந்தது.

அக்கீர்: நான் அஞ்சி வேளையும் தொழுகறவன் இல்ல. ஆனா, கடவுளை நம்பறவன். எங்க மம்மியை உயிரா நினைக்கிறவன். உன்ன எங்க மம்மி எடத்துல வெச்சிருக்கறவன். அல்லாவின் சாட்சியா, நான் இப்போ போடற இந்த மிஞ்சி நீ மரணிச்சே பிறகும் உன் கால்ல இருக்கும்.. என் தீரா காதல், உன் காலில் மிஞ்சியாய்...

அக்கீர் சுஜியின் வலது காலின் இரண்டாவது விரலை பிடித்து அதில் அவன் கையில் வைத்திருந்த அந்த மிஞ்சியை அணிவித்தான். மணியாக குலுங்கிய அந்த மிஞ்சி சுஜியின் வண்ணம் தீட்டிய கால் விரல்களில் அழகாய் மின்னி ஒலித்தது. மிஞ்சி போட்ட மாத்திரத்தில் மீண்டும் வைத்தான் இன்னொரு முத்தம் மிஞ்சி அணிந்திருந்த விரலுக்கு. தலையை தூக்கி அக்கீர், சுஜியைப் பார்த்து சொன்னான்,

அக்கீர்: இப்போ போ...

போ என்று சொன்னவனை, தன் இடையோடு அணைத்துக் கொண்டாள் சுஜி.

அக்கீர்: அடியே, காதல் மூட்ல இருக்கேன்.. கில்மா மூட்டுக்கு மாத்திராதே...

சுஜி, அக்கீரை போலவே அவன் முன் மண்டியிட்டு அமர்ந்தாள். கண்களை மூடியவாறே அவன் முகத்தூடு அவள் முகத்தை ஒட்டிக் கொண்டாள். அக்கீரின் நெற்றி, மூக்கு, கண்கள், காதுகள் அனைத்திலும் முத்த மழை பொழிந்தாள்.

அக்கீர்: எல்லா இடத்திலும் முத்தம் கொடுத்தாச்சா? ஒரு இடம் பாக்கி இருக்கே?

நமட்டு சிரிப்புடன் கேட்டவனை, தலையில் ஒரு கொட்டு வைத்து கிளம்பினாள் சுஜி.

மணி விடியற்காலை ஐந்து. குமாரின் அழைப்பு மீண்டும் அலறியது. வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தவள் போனை புளுதூத்வுடன் கோனெக்ட் செய்தாள்.

குமார்: பாப்பா... எங்க இருக்க? எவ்ளோ நேரமா கால் பண்றேன் நீ எடுக்கவே இல்ல?! எங்க இருக்க?

குமாரின் பதட்டத்தில் தெரிகிறது சுஜியின்பால் அவன் கொண்ட காதல்.

சுஜி: சோ.. சோரி... மலர்க்கு சரியான வயிறு வலி. தாங்க முடியாம எனக்கு கால் பண்ணா. அண்ணா வேற இங்க இல்ல. அதான் எனக்கு கால் பண்ணா. நீங்க நல்லா தூங்கிகிட்டு இருந்தீங்க அதான் நானே போய்ட்டு வந்துட்டேன்...

குமார்: நான் வரட்டா ?

சுஜி: இல்ல, பரவால நானே வந்தறேன்.

குமார்: சரி, சீக்கிரம் வந்துரு.

குமாரிடம் பேசி முடித்து ரிசீவரை வைத்தவள், அவளின் கதைக்கு வந்திருந்த கமெண்ட்டு ஒன்றில் அவள் கை விரல் எதர்ச்சையாக பட்டு அந்த கமெண்ட் திறந்தது.

அதை படித்தவள், உறைந்து போனாள். ஒரு நிமிடம் காரின் பிரேக்கை வேகமாக செலுத்தி காரை சடிர்ரன நிறுத்தினாள்.

அதை மீண்டும் படித்தாள்.

கமெண்ட்:

எனக்கொருத்தியை தெரியும்,
ஒரே நேரத்தில் எத்தனை ஆண்களை வேண்டுமானாலும் பாகுபாடே இல்லாமல் சம அன்பில் அவளால் காதலிக்க முடியும். அதெப்படி ஒருவனோடு வாழ்ந்து கொண்டிருக்கும்போது இன்னொருவன் மீது காதல் வரும்? இது துரோகம் அல்லவா? என்றெல்லாம் அவளிடம் கேட்கமுடியாது. இங்கு பாகுபாடற்ற அன்பை அவளால் வழங்கமுடியும், அதற்கான திறனும் விரிந்த மனப்பாங்கும் அவளிடம் இருக்கிறது என்பது மட்டும்தான் செய்தி.

இனி வேறு யாருமே தன்னை காதலிக்க மாட்டார்கள் என்னும் நிலையினில்தான் ''காதல் ஒரு முறைதான் வரும்'' ''ஒரே நேரத்தில் ஒரு காதல் தான் சாத்தியம்'' போன்ற கோட்பாடுகளை ஆண்மனம் உருவாக்கிக் கொள்கிறது. இதனை மீறுபவர்களை நம்பிக்கை துரோகம் செய்பவர்களாக சித்தரிக்கிறது, அதையே தன் இணையாய் இருப்பவர்களிடம் கற்பித்து அவர்களையும் நம்பச் செய்ய முற்படுகிறது. அவள் கணவனும் அதையே செய்தான்.

எத்தனை முறை அதை மீண்டும் மீண்டும் படித்தாள் என்றே தெரியவில்லை. கைத்தொலைப்பேசியை பக்கத்து இருக்கையில் வைத்து விட்டு காரின் ஜன்னலை திறந்து எதிரே இருந்த சாலையை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். ஜில்லென்ற காற்று அவள் முகத்தையும் தேகத்தையும் உரசி லேசாக அவளை சிலிர்க்க வைத்தது.

காரின் ஸ்டேரிங்கை கெட்டியாக பிடித்து அதில் தலை சாய்த்து கொண்டாள். கண்களில் பஞ்சமில்லாமல் கண்ணீர் வழிந்தது. அவள் நெஞ்சம் குறுகுறுத்தது.

தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள்.

சுஜி, என்னடி பண்ணிக்கிட்டு இருக்க? உனக்கே உன்ன பார்த்த கேவலமா இல்லையா ? சீ... அப்படி என்னடி உனக்கு குமார விட அட்லஸ் மேல லவ்வு... என்னடி லவ் அது? இது லவ்வா? நீ பண்றதுக்கு பேரு லவ்வா? இல்லடி, இல்ல சுத்த காமம்... அழுக்கு, அசிங்கம்.

அவள் மனமே அவளைக் கண்டத்தனமாக கேள்வி கேட்டு காரி உமிழ்ந்தது. அவள் சிந்தை கலைந்தது அந்த கைத்தொலைப்பேசியின் அலறலில். இம்முறை அழைத்தது அட்லஸ் என்கிற அக்கீர்.

அக்கீர்: பாப்பா.. வீட்டுக்கு போய்டியா?

சுஜி அமைதியாக இருந்தாள். விசும்பல்களே அட்லஸின் கேள்விக்கு பதிலானது.

அக்கீர்: பாப்பா.. என்னாச்சி? நீ எங்க இருக்க?

சுஜி: இங்கதான்... நடுரோட்டுல...

அக்கீர்: என்னாச்சி பாப்பா? அங்க என்ன பண்ற? ஏன் இன்னும் வீட்டுக்கு போல நீ?

அக்கீர் மனம் இருப்புக்கு கொள்ளவில்லை. சுஜிக்கு ஏதோ ஒன்று என்று அவன் மனம் பதைத்தது. அவளிடம் பேசிக் கொண்டே அவனின் கார் சாவியின் கொத்தை கையில் எடுத்தான்.

சுஜியிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே சாலையில் பயணித்தான்.

அக்கீர்:
தாலாட்டு பாட்டுக் கேட்டு ரொம்ப நாள் ஆயிற்று
கொஞ்சம் காதோரமா பேசேன்,
என் கண்மணி!

சுஜி: முடியாது போ...

அக்கீர்:
பெண்கள் நட்சத்திரங்கள் எனில்
நீ என் ஈடில்லா நிலா!

சுஜி: பொய்..

அக்கீர்:
என்
அமைதிக்குள்
அடங்கி கிடக்கும்
பேரிரைச்சல் நீ!

சுஜி: அது சரி...

அக்கீர்:
இந்த நிமிடம்
நீ என்ன
செய்துகொண்டிருப்பாய்
என நினைத்து
கொண்டிருப்பதிலேயே
தொலைந்து விடுகிறது
என் எல்லா
நிமிடங்களும்!

சுஜி: உண்மையாவா?

அக்கீர்:
தொலைவில் நீயிருக்க
துரத்தும் உன் நினைவுகள்
என்னுள் உனையே நேசிக்க
அனுதினம் அன்போடு யாசிக்கிறது!

சுஜி: பத்தல... இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறேன்?

அக்கீர்:
ஒவ்வொருத்தியாகத் தேடித்தேடி
உன்னை வந்து சேர்வேன்
அல்லது
உனக்குப்பின் ஒவ்வொருத்தியிலும்
உன்னையே தேடுவேன்
எப்படியாகினும் நீயே நிரந்தரமடி கண்மணி!

சுஜி: ஐ லவ் யூ....

சுஜி அக்கீரின் கவிதைகளைக் கேட்டு ரசித்து அதற்கு பதில் சொல்லிக் கொண்டே காரிலிருந்து இறங்கி காரின் முன்புறம் சென்று எதிரே தெரிந்த சாலை விளக்கின் கீழே அமர்ந்தாள்.

அக்கீர்:
பேசி ஓயாமல்
விரும்பி உருகாமல்
அணைத்து சாகாமல்
திகட்டி சலிக்காமல்
தனிமை சூழாமல்
அழுது தீராமல் ,
அன்பை அலசி ஆராயும்
அறிவை கட்டிக்கொண்டு
உலகை வென்றாலும்
என்ன பயன்?!
நீ என்
முட்டாள்த்தனத்திற்குள்
குடிபுக வருகிறாயா!

எதிரே இருந்த ரோட்டினில் தன் கைகளை நீட்டி வா என்பது போல் சைகை செய்து சொன்னான் அக்கீர் இக்கவிதையை போன் வழியாக சுஜிக்கு.

சுஜி சந்தோசம் தாங்காமல் விருட்டென எழுந்தாள். சாலையை நோக்கி ஓடினாள். அவனை கட்டி அணைக்க. அக்கீர் அங்கேயே இரு நான் வருகிறேன் என்று சைகை செய்தான்.

சாலையைக் கடந்து அக்கீர் சுஜியை கட்டியணைக்க வந்த நொடி அவளின் காதுகளில் போன் வழி சொன்னான்,

அக்கீர்:
கட்டிப்பிடித்தல் என்பது
உடல்கள் இட்டுக்கொள்ளும் முத்தமடி
என் கண்மணி!

காதல் கொண்டு ஓடி வந்தவளை, அணைக்க வந்தவன் நெஞ்சில் கை ஒன்று வேகமாக வந்து தடுத்து நிறுத்தியது.

அவன் இவனையும் இவன் அவனையும் பார்த்துக் கொண்டனர். காதல் மயக்கத்தில் கவி பாடிக் கொண்டிருந்த சுஜியும் அட்லசும், சுஜியின் காரின் பின்னால் இன்னோர் கார் வந்து நின்றதையும் அறியவில்லை; அவர்களின் அன்பான ஆரத் தழுவலை தடுக்க வந்ததையும் கவனிக்கவில்லை.

சுஜி குமாரையும் பார்த்தாள், அட்லஸையும் பார்த்தாள். ஆனால், அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துதான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தொடரும்...

எழுதியவர் : தீப்சந்தினி (26-Aug-19, 1:36 pm)
பார்வை : 255

மேலே