வீண நசையால் விளிவு விளைந்து பூண வசையும் பொருந்தும் - நசை, தருமதீபிகை 442

நேரிசை வெண்பா

வீண நசையால் விளிவு விளையுமால்
பூண வசையும் பொருந்துமே - காணவரு
அல்லல் களையா(து) அழிவடைதல் நல்லதோ
எல்லை தெரிக இனிது. 442

- நசை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

இழி நசையால் அழிவு விளைகின்றது; பழி வருகின்றது; இவ்வாறு நிகழ்கின்ற அல்லல்களைக் களைந்து ஒழிக்காமல் அழிந்து படுதல் அவலமாம்; நிலைமையை விரைந்து தெளிந்து தலைமையான தகைமையுடன. நலம் அடைக என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், நசை வசை என்கின்றது.

தன் தகுதிக்கு ஏற்ப விரும்பி முயன்றால் அம்முயற்சி மனிதனுக்கு உயர்ச்சி அருள்கின்றது; தகாத நிலையில் பிழையாய் விழையின் அது பேராசையாய் இழிவு தருகின்றது.

தான் கருதிய பொருளைப் பெறுதற்கு உறுதியாக முயல்வது கடமையாம். அந்தக் கடமைகளின் அளவே உடைமைகளை அடைய ஒருவன் உரிமை ஆகின்றான்.

நசை என்பது இளிவான இச்சையைக் குறித்து வரும். தெளிவான உணர்வு நலம் உடையவரிடம் இந்த இளிவு நேராது. உரிய முயற்சிகளைச் செய்து உயர்ந்த பலன்களைப் பெறாமல் இழிந்த நோக்கில் நச்சி நிற்பது எதுவோ அது நசை என வந்தது. இச்சகம் பேசி இழிந்து நின்று வயிறு வளர்க்கின்ற கொச்சை மக்களிடம் பெரும்பாலும் இது குடி புகுந்திருக்கும்.

’வீண நசையால் விளிவு விளையும்’ என்றது அதன் ஈன நிலை தெரிய வந்தது.

நேர்மையான முறையில் முயன்று பொருளைப் பெறுதல் மாண்பு ஆகும்; அங்ஙனமின்றி மடியும் மடமையும் மண்டிக் கரவும் கபடும் படிந்து வரவு காண விழைவது கொடிய இழிவாம். வீண என்ற அடையால் பாழான அதன் பழிநிலை காணலாகும்.

இந்த இளி நசை நெஞ்சு புகுந்தால் அந்த மனிதனுடைய பெருமையும் கம்பீரமும் அழிந்து போகும்; சிறுமைகளே எவ்வழியும் பெருகி நிற்கும். மனிதத் தன்மையைக் கெடுத்து விடுதலால் நசை கேடு என வந்தது. விளிவு - அழிவு, கேடு

'நசையிற் பெரியதோர் நல்குரவு இல்லை' - முதுமொழிக்காஞ்சி

நசை கொடிய வறுமை என்று இது குறித்துள்ளது. மிகுந்த செல்வம் வாய்த்திருந்தாலும் உள்ளத்தில் நசை தோய்ந்திருக்குமாயின் அந்த மனிதன் அவலமுடையனாய் எங்கும் இழிந்தே நிற்பான். வறுமையுடையனாயினும் நசை இலனாயின் அவன் யாண்டும் மேன்மையாளனாய் மேவி விளங்குவான்

இயன்ற வரை முயன்று அமைந்தது போதும் என்று அமைதியுடன் வாழ்பவன் உயர்ந்த பாக்கியவானாய் ஒளி மிகப் பெறுகின்றான். மன அமைதி மனிதனுடைய வாழ்க்கையை எவ்வழியும் இனிமையாக்கிப் புனிதம் செய்கின்றது.

திருத்தி என்பது திருந்திய பண்பிலிருந்து அரும்பியுள்ளது. நிறைவு, பூரணம், பூரிப்பு, மனரம்மியம் என்னும் மொழிகள் உயர் பொருளுடையன. நசை படிந்த நெஞ்சம் இழிந்து மெலிந்து படுகின்றது. நசை படியாதது உயர்ந்து சிறந்து திகழ்கின்றது. உள்ளத்தைப் பழுதாக்கி உணர்வைச் சிதைத்து விடுதலால் அது இளிவாய் இகழப்பட்டது.

திருந்திய மனநிறைவு பெருந்தகைமை ஆகின்றது.

The noblest mind the best contentment has. - Spenser

'நல்ல நிறைவுடையதே மேலான உயர்ந்த உள்ளமாம்' என ஸ்பென்சர் என்னும் மேல் நாட்டுப் பெரியார் இங்ஙனம் கூறியுள்ளார். இச்சை அடங்கிய அளவு மனிதன் உச்ச நிலையை அடைகிறான்.

எல்லை தெரிக என்றது வீண் ஆசையால் அல்லலும் இளிவுமே உளவாதலால் அதனை ஒழித்து அளவாக அமைந்து வாழுக எனப்பட்டது. இன்பம் புண்ணியத்தால் வருதலால் தன் உள்ளத்தைப் புனித நிலையில் வைத்து மனிதன் ஒழுகிவரின் அவன் கருதியன எல்லாம் எளிதே வந்து கைகூடுகின்றன. கரும தாதாவாகிய இறைவன் தகுதியறிந்து உரியவர்க்கு உரிமைகளை உதவியருள்கின்றான். பண்பு படிய இன்பங்கள் படிகின்றன.

நசை எவ்வழியும் வசையாம்; அப்பழியுள் விழுந்து பாழாகாதே. தரும சிந்தனையோடு கருமங்களைச் செய்; உரிய பலன்கள் உன்னை நோக்கி வரும்; அவ்வரவு இருமையும் பெருமையாம் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Sep-19, 5:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 102

மேலே