கணினி பொறி

கணினி என்ற பொறிக்குள்
தெரிந்தே மாட்டிக் கொண்ட
கணினிப் பொறியாளர்கள் நாங்கள்..!
தூக்கத்தை விலை கொடுத்து
பெற்றோம் பட்டத்தை
வருங்காலம் வளமாய் ஆகுமென்று
இன்றோ தூக்கமே பறிபோனதாய்...

உலகெங்கும் உண்டாம் சட்டம்
நாளொன்றுக்கு எட்டு மணி நேரம்
வேலை என்று..
ஏனோ எங்களுக்கு மட்டும் விதிவிலக்காய்..

கசங்காமல் இருப்பது என்னவோ
எங்களின் ஆடைகள் மட்டும்தான்
உள்ளமோ கந்தலையும் விஞ்சி
நார் நாராய் கிழிக்கப்பட்டு...

நாளை நிச்சயமில்லை வேலை
அறிந்தும் தொடர்வோம்
கண்ணுறக்கம் இன்றி...
தொடர் முயர்ச்சிகளால்
சாதனைகள் பல புரிந்தாலும்
அயல் தேசம் எல்லாம்
சுற்றி வந்தாலும்
மனம் மட்டும் ஏனோ
நிம்மதிக்காய் ஏங்கி நிற்கும்...

என்ன மக்கா எப்படி இருக்க
ஆளையே காணும் என்ற
நண்பர்களின் விசாரிப்புகளும்
சாப்பிட்டியா? என்று அன்போடு
விசாரிக்கும் அம்மாவின் அழைப்பிர்க்கும்
நேரமில்லை என ஒற்றை வரியில்
பதில் தந்து அழைப்பை துண்டிக்கும் போதும்
விழி ஓரம் நீரும்...
மனதினூடே என்னடா வாழ்க்கை
என்ற எண்ணமும்
துளிர் விடத்தான் செய்கிறது...

சிறு குழந்தையாய்
சிறகடித்து பறக்க
இதயம் ஆசைப்பட்டாலும்
மீண்டும் சிறைப்படுத்தினோம் மனதை
கணினி என்ற பொறிக்குள்
இதுதான் வாழ்க்கை என்று...!

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (16-Sep-19, 10:09 am)
சேர்த்தது : சகாய டர்சியூஸ் பீ
Tanglish : Kanini poRi
பார்வை : 1807

மேலே