உண்ணும் உணவு பண்ணும் தொழிலானே பல்கிவரும் - தொழில், தருமதீபிகை 464
நேரிசை வெண்பா
உண்ணும் உணவால் உயிர்களுள; அவ்வுணவு
பண்ணும் தொழிலானே பல்கிவரும் - நண்ணும்
தொழில்ஒன்(று) இலதேல்இத் தொல்லுலகம் எல்லாம்
ஒழியும் அதனை உணர். 464
- தொழில், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
உண்ணுகின்ற உணவுகளால் உயிர்கள் இனிது வாழ்ந்து வருகின்றன; அவ்வுணவுப் பொருள்கள் தொழிலால் விளைந்து நிறைகின்றன; ஆகவே சீவ ஆதாரமான தொழிலொன்று இல்லையானால் உலகமெல்லாம் நிலை குலைந்து ஒழிந்து போகும் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் உழவுத் தொழிலைக் குறித்துள்ளது.
உயிரினங்கள் உடல்களை மருவியிருக்கின்றன. அவை உணவுகளால் நிலைபெற்று வருகின்றன. உணவு இல்லையானால் உடல் யாதொரு தொழிலும் செய்யாமல் ஒழிந்து போகும். ’சோற்றால் அமைந்த சுவர்’ என உடம்பைக் குறித்து வரும் பழமொழி ஈண்டு உணரத் தக்கது. ’அன்னமயம் பிராணன்’ என இன்னவாறு வருவன எல்லாம் சீவிய நிலைமையைத் தெளிவு செய்துள்ளன. உயிர் வாழ்வு உணவில் உள்ளமையால் அது அமுதம் என வந்தது.
அருந்துஉயிர் மருந்துமுன் அங்கையில் கொண்டு
பெருந்துயர் தீர்த்தஅப் பெரியோய் - மணிமேகலை 25
உணவை உயிர் மருந்து என. இது குறித்திருக்கிறது. உயிர் நிலையமான உடம்பு உணவால் நிலைத்து வருதலால் உணவின் பிண்டம் என உடலுக்கு ஒரு பெயர் அமைந்தது.
மக்கள் யாக்கை உணவின் பிண்டம். - மணிமேகலை 10
உண்டி முதற்றே உணவின் பிண்டம். - புறம் 18
மனிதரது உடலை உணவின் பிண்டம் என்று சாத்தனாரும், குடபுலவியனாரும் இங்ஙனம் குறித்திருக்கின்றனர். உணவு உயிராதாரமாயுள்ளமையை இவற்றால் உணர்ந்து கொள்ளுகின்றோம்.
குடி இருக்கும் வீட்டுக்குக் கூலி கொடுப்பது போல் உடலுக்கு நாளும் உணவு கொடுத்து வருதலால் அது ’துச்சில்’ என நேர்ந்தது. கூலி நின்றால் வீடு காலியாய் விடும்.
நேரிசை வெண்பா
ஒருநாள் உணவையொழி யென்றால் ஒழியாய்
இருநாளுக்(கு) ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்னோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது. 11 நல்வழி
வயிற்றை நோக்கி ஒளவையார் இவ்வாறு சுவையாகப் பாடியிருக்கிறார். காலம் தவறாமல் நாள்தோறும் உடம்புக்கு உணவை ஊட்டி வர வேண்டும்; இல்லையானால் அது பெரிய தொல்லையாம் என்பதை இது உணர்த்துகின்றது. . . .
அன்ன விசாரம் அதுவே விசாரம்' என்றார் பட்டினத்தார்.
'உண்டவர்க் கன்றி உட்பசி ஒயுமோ?
கண்டவர்க் கன்றிக் காதல் அடங்குமோ'
என இறைவனை நோக்கித் தாயுமானவர் இவ்வாறு கூறியிருக்கிறார். பசி தீர உண்பதே பரமாயுள்ளது.
மனிதர் பட்டு வருகின்ற பாடுகள் எல்லாம் பசி தீர உண்டு வாழவேயாம். சீவனத்துக்காகப் படிக்கும் கல்வியை ’வயிற்றுப் படிப்பு’ என்கின்றோம். ஒரு சாண் வயிற்றை வளர்க்கவே எண் சாண் உடம்பும் ஏங்கி இயங்குகின்றது. பல மலைகளையும், அலை கடல்களையும் கடந்து சென்று மனிதன் அரும்பாடு படுகின்றான்.
நேரிசை வெண்பா
சேவித்துஞ் சென்றிரந்துந் தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராட்டிப் பாட்டிசைத்தும் - போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம். 19 நல்வழி
நேரிசை வெண்பா
போற்றியே போற்றியே என்று புதுச்செல்வம்
தோற்றியார் கண்எல்லாம் தொண்டேபோல் - ஆற்றப்
பயிற்றிப் பயிற்றிப் பலவுரைப்ப(து) எல்லாம்
வயிற்றுப் பெருமான் பொருட்டு. 130 அறநெறிச்சாரம்
மனிதனுடைய வாழ்க்கை நிலையை இவை வடித்துக் காட்டியுள்ளன. அதிவிசித்திரமான பசித்தீ வயிற்றிலிருத்தலால் அதனை அவித்து வாழும் பொருட்டு சீவர்கள் துடித்து வருகின்றனர். வயிற்றுப் பெருமான் என்று. குறித்திருப்பதிலுள்ள சுவையை நுனித்து நோக்க வேண்டும்; இந்தப் பெருமானை இனிது பூசிக்கவே எல்லாப் பெருமான்களையும் நேசித்து மக்கள் பூசித்துள்ளனர்.
’உண்ணும் உணவால் உயிர்கள் உள’ என்றது உயிர் வாழ்வின் உண்மை நிலையை உணர்த்தி நின்றது.
’ஊண் அறின் உயிர் அறும்’ என்றமையால் உணவுக்கும் உயிருக்கும் உள்ள உறவுரிமை உணரலாம். உணவை உட்கொள்ளாவிடின் பசித்தீ பற்றி எரிந்து உயிரைப் பதைக்கச் செய்யும்.
76 குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
நாண்அணி களையும் மாண்எழில் சிதைக்கும்
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
80 பசிப்பிணி என்னும் பாவி.. - 11 பாத்திரம் பெற்ற காதை, மணிமேகலை
நேரிசை வெண்பா
மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை
தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப்பறந்து போம். 26 நல்வழி
பசியின் கொடுமையைக் குறித்து வந்துள்ள இவை இங்கே சிந்திக்கத்தக்கன. உண்ண உணவில்லாத போது உயிர்கள் படும் துயரம் இவ்வாறு கொடிய பரிதாபமாயிருத்தலால் பசித்தவர்க்கு அன்னமிடுவது புண்ணியம் என்று போற்றப்பட்டுள்ளது.
95 மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
96 உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே. 11 பாத்திரம் பெற்ற காதை, மணிமேகலை
அன்ன தானத்தின் அதிசய மகிமை ஈண்டு உன்னி உணரவுரியது. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்றது உணவின் சீவ நிலையை உணர்த்தி நின்றது.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. 226 ஈகை
ஒருவன் அருமையாக ஈட்டிய பொருளை உரிமையுடன் வைக்க வேண்டிய இடத்தை வள்ளுவர் இங்ஙனம் காட்டியருளினார்.
பசியை நீக்கி உயிரை இனிது பாதுகாத்து வருதலால் உணவு ’உயிரமிர்து’ என உயர் மகிமை பெற்றது.
இத்தகைய உணவை உழவுத்தொழில் உளவாக்கி அருள்கின்றது. பயிர்களை வளர்த்து உயிர்களைப் பேணி வருதலால் உலகிலுள்ள தொழில்கள் எவற்றினும் உழவு தலைமையாய் நின்றது. இதன் பயனையும் பண்பையும் வியந்து மேலோர் யாவரும் புகழ்ந்து போற்றியுள்ளனர்.
உழுவார் உலகத்தார்க்கு ஆணி. (குறள் 1032)
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார். (குறள் 1033)
உழுதுண்டு வாழ்வதற்(கு) ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு. (நல்வழி 12)
தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது. (கொன்றை வேந்தன் 46)
உழவர்க்கு அழகு இங்கு உழுதூண் விரும்பல். (நறுந்தொகை 7)
உழுவான் உலகுக்கு உயிர். (வெண்பாமாலை 165)
நேரிசை வெண்பா
யானை நிரையுடைய தேரோ ரினும்சிறந்தார்
ஏனை நிரையுடைய ஏர்வாழ்நர் - யானைப்
படையோர்க்கும் வென்றி பயக்கும் பகட்டுஏர்
உடையோர்க்(கு) அரசரோ ஒப்பு. - பெரும் பொருள்
நேரிசை வெண்பா
நன்புலத்து வையடக்கி நாளும்நாள் ஏர்போற்றிப்
புன்புலத்தைச் செய்தெருப் போற்றியபின் - இன்புலத்துப்
பண்கலப்பை யென்றிவை பாற்படுப் பானுழவோன்
நுண்கலப்பை நூலோது வார். 59 சிறுபஞ்ச மூலம்
உழவின் பெருமையைக் குறித்து நூல்கள் இவ்வாறு உரைத்துள்ளன. உரைகளிலுள்ள பொருள் நிலைகளை ஊன்றி உணர வேண்டும். பயிரின் தொழில் உயிரின் எழிலாய் ஒளி வீசியுளது.
உயிரினங்கள் உண்டு வாழுதற்குரிய உணவுகளை விளைத்தருளுதலால் உழவு உலகிற்கு உயிரென அமைந்தது. புகழும் புண்ணியமும் பொருந்தியிருத்தலால் இத்தொழில் மனிதனுக்கு ஓரெழில் என வந்தது. இவ்வுண்மையை ஏர் என்னும் சொல் உணர்த்தியுள்ளது. பேரின் அமைதி கூரிய நோக்குடையது.
ஏர் – அழகு, உழவுத் தொழில், கலப்பை, நன்மை, எழுச்சி. இந்தப் பெயர் உரிமையால் உழவின் உயர் நிலையையும், உயிர்களுடைய செயல் நிலைகளையும் உணர்ந்து கொள்ளலாம்.
சீரைத் தேடின் ஏரைத் தேடு.
மேழிச் செல்வம் கோழை படாது.
என ஒளவையார் இங்ஙனம் மேன்மையாகக் குறித்துள்ளார். எவ்வளவு ஆர்வத்தோடு உழவைப் புகழ்ந்திருக்கிறார் இதிலுள்ள உழைப்புக்கு அஞ்சி வேறு வழியால் பிழைப்பை நாடி ஒதுங்குகின்றவர்களை இவர் மிகவும் இகழ்ந்து பேசியுள்ளார்.
நேரிசை வெண்பா
சென்றுழு(து) உண்பதற்குச் செய்வ(து) அரிதென்று
மன்றுழு(து) உண்பான் மனைவாழ்க்கை - முன்றிலின்
துச்சில் இருந்து துடைத்தழுகண் ணீராலேழ்
எச்சம் இறுமேல் இறு. - ஒளவையார்
உழவின் மீது ஔவை கொண்டுள்ள பிரியமும் மதிப்பும் இதனால் அறியலாகும். ஏர் இல்லையானால் சீர் இல்லை என்று அப்பேரிலிருந்தே பாரறியச் செய்தார்.
நேரிசை வெண்பா
ஏர்என்னும் பேரே இனிய தொழில்எழிலைப்
பார்எங்கும் காணப் பகர்ந்துளதால் - சீர்என்றும்
வேண்டின் அதனை விழைந்துகொள்க மேன்மையறம்
காண்டி அதன்கண் கனிந்து.
தனக்கும், பிறர்க்கும், உலகிற்கும் உயிராதாரமாய் ஒளி புரிந்துள்ளமையால் உழவுத் தொழில் மனிதனுக்கு எவ்வழியும் புனிதமானது. புண்ணியமான அது யாண்டும் கண்ணியமாகின்றது.
இதன் சீர்மை நீர்மைகளைக் குறித்து எழுபது பாடல்களால் கம்பர் ஒரு நூல் செய்திருக்கிறார், அதற்கு ’ஏர் எழுபது’ என்று பேர். அதிலிருந்து சில கவிகள் அயலே வருகின்றன.
தரவு கொச்சகக் கலிப்பா
வாழிநான் மறையோர்கள் வளர்க்கின்ற வேள்விகளும்,
ஆழியால் உலகளிக்கும் அடல்வேந்தர் பெருந்திருவும்,
ஊழிபே ரினும்பெயரா உரையுடைய பெருக்காளர்
மேழியால் விளைவதல்லால் வேறொன்றால் விளையாவே. 4 மேழிச் சிறப்பு
நீற்றோனும் மலரோனும் நெடியோனும் என்கின்ற
தோற்றாளர் இலராலே தொல்லுலகம் நிலைபெறுமோ?
மாற்றாத காவேரி வளநாடர் உழுங்கலப்பை
ஊற்றாணி உளதாயின் உலகுநிலை குலையாதே! 5 ஊற்றாணிச் சிறப்பு
ஊட்டுவார் பிறருளரோ? உலகுதனில் உழுபகடு
பூட்டுவார் புகழன்றிப் பிறர்புகழும் புகழாமோ?
நாட்டுவார் சயத்துவசம் நயப்பாரை இவர்க்குநிகர்
காட்டுவார் யார்கொலிந்தக் கடல்சூழ்ந்த வையகத்தே! 16 பகடு பூட்டுதல் சிறப்பு
பார்பூட்டும் திசையனைத்தும் பகடுகளும் பரம்பூணா
போர்பூட்டும் காமனுந்தன் பொருசிலைமேற் சரம்பூட்டான்
கார்பூட்டும் கொடைத்தடக்கைக் காவேரி வளநாடர்
ஏர்பூட்டின் அல்லதுமற்(று) இரவியும்தேர் பூட்டானே! 17 ஏர் பூட்டல் சிறப்பு
முதிராத பருவத்தும், முற்றியநல் பருவத்தும்,
கதிராகி உயிர்வளர்ப்ப(து) இவர்வளர்க்கும் கதிரன்றோ!
எதிராக வருகின்ற எரிகதிரும், குளிர்கதிரும்
கதிராகி உயிர்வளர்ப்ப(து) உண்டாயிற் காட்டீரே! 48 பசுங்கதிர்ச் சிறப்பு
பார்வேந்தர் பெருஞ்செல்வம் பழுதுபடா(து) ஒருநாளும்
ஏர்வேந்தர் பெருஞ்செல்வம் அழிவுபடா(து) இருத்தலினால்
தேர்வேந்தர் போர்க்களத்துச் சிலர்வெல்வர் சிலர்தோற்பர்
ஏர்வேந்தர் போர்க்களத்துள் இரப்பவரும் தோலாரே. 59 போர்க்களச் சிறப்பு
விற்பொலியும் பெருங்கீர்த்தி வேளாளர் விளைவயலில்
நெற்பொலியுண் டாமாகின் நிலமகளும் பொலிவுண்டாம்
பொற்பொலிவுண் டாமுலகம் புகழ்ப்பொலிவுண் டாம்புலவோர்
சொற்பொலிவுண் டாங்கலியின் துயர்பொலிய மாட்டாதே. 63 நெற்பொலி சிறப்பு, ஏர் எழுபது
இந்தக் கவிகளைக் கருதி நோக்கிக் கருத்துக்களை உணர்ந்து கொள்ளுந்தோறும் உவகை சுரந்து திகழும். சூரிய சந்திரர்களை எரி கதிர், குளிர் கதிர் என்றது. உலகம் உழவராலேயே நிலைபெற்று வருதலைப் பல வகையிலும் உறுதி செய்துள்ளார். உழவுத் தொழிலைக் குறித்து வரும் வேளாண்மை என்னும் சொல்லுக்கு உபகாரம் என்றே பொருள். அத்தொழிலைச் செய்து வருபவர் வேளாளர் என நின்றார். உயிர்கள் வாழ உழைத்தருள்பவராதலால் அவர் உபகாரிகள் என உயர்புகழ் கொண்டார். 'உழவினார் கைம்மடங்கின்’ உலகம் உய்யாது என்பது பொய்யா மொழி. உழவின் உளவறிபவர் கிழமை புரிகின்றனர்.
சீர்படைத்த பூபாலர் செங்கோல் பிடிப்பதற்குப்
பேர்படைத்த மேழி பிடிக்குங்கை - கார்படைத்த
மிஞ்சுமதி கீர்த்தியைப்போல் மேதினியெல் லாம்தழைக்கச்
செஞ்சாலி நாற்றைத் தெளிக்குங்கை – எஞ்சாமல்
வெள்ளைக் களைகளைந்து வீறும் பயிர்தழைக்கக்
கள்ளக்களை களைந்த கற்பகக் கை. – திருக்கை வழக்கம்
வேளாண்மை புரிபவரது கையைக் குறித்து இப்படி ஒரு நூல் வந்துள்ளது.
வேளாண் மாந்தர்க்(கு) உழுதூண் அல்ல(து)
இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி. - தொல்காப்பியம், மரபியல்
உயர்ந்த உபகாரிகளுக்குச் சிறந்த உரிமையாக உடையது உழுந்தொழிலே என தொல்காப்பியனார் இங்ஙனம் அருளியிருக்கிறார்,
பல்லுயிர்க்கும் பல வகையிலும் உதவியாக உள்ளமையால் உழவினை எல்லாரும் விழுமிதாக விழைந்து கூறியுள்ளார்.
'வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்' நல்லாதனார் என்னும் சங்கப் புலவர் இங்ஙனம் குறித்திருக்கிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்த நாட்டில் வேளாண்மை இருந்துள்ள சீர்மையும், வேளாளரது நீர்மையும் வியந்து நோக்க நின்றன. அந்நிலைமையும் தலைமையும் கால வேற்றுமையால் இந்நாளில் சீர் குலைந்துள்ளன.
“உழுங்குலத்தில் பிறந்தாரே உலகு உய்யப் பிறந்தாரே' என்று கம்பர் உள்ளம் உருகித் துதித்திருப்பது ஈண்டு உணர்ந்து மகிழவுரியது.
’தொழில் ஒன்று இலதேல் இத்தொல்லுலகம் எல்லாம் ஒழியும்’ உழவு ஒன்றினாலேயே உலகங்கள் எல்லாம் நிலைத்துள்ளன என இஃது உணர்த்தி நின்றது. உழவுத் தொழில் இல்லையேல் பயிர்கள் விளையாது; உணவுகள் ஒழிந்து உயிர்கள் அழியும்; உலகம் பாழாகும். நிலைமையைக் கூர்ந்து ஓர்ந்து கொள்க.
உழவின் வழியே உலகம் வாழ்ந்து வருதலால் இதற்கு அது உயிர் என வந்தது.
‘உணர்’ என்றது உழவின் உண்மை நிலைகளைக் கூர்ந்து உணர்ந்து இத்தொழிலை எவ்வழியும் செவ்வையாக ஓர்ந்து செய்து உயர்ந்து வாழுக என்பதாம்.
Plantations are amongst ancient, primitive, and heroical works. - Bacon
பயிர்த் தொழில் பழமையும் தலைமையும் பெருமையும் உடையது' என பேக்கன் என்னும் ஆங்கில ஆசிரியர் இங்ஙனம் கூறியிருக்கிறார். எந்நாடும் உழவை ஏத்தியுள்ளது.
இந்நாளில் இந்நாட்டில் விவசாய நிலைமைகள் பல வகையிலும் தாழ்வடைந்துள்ளன. அறிவைக் கூர்ந்து செலுத்தாமல் உடலளவில் மாட்டுப்பாடு பட்டு வருவதே உழவுத் தொழிலாய்த் தொடர்ந்து வருகின்றது. உழுது உண்பது இழிவு என்று கருதி அறிவாளிகள் தொழுது உண்பதில் சுவை கண்டு விட்டனர். அதனால், உழவில் நல்ல பலன்கள் காணாமல் போயின. வினைகள் மாற விளைவுகள் மாறின.
ஐரோப்பா, அமெரிக்கா முதலிய மேல் நாடுகளில் ஒரு ஏக்கருக்கு ஆயிரத்து இருநூறு ரூபாய் விளைவுகள் வருவாய்களாய் எழுகின்றன. நிலம், உரம், பருவம், உழவு முதலியவைகளை மிகவும் கவனமாய்க் கருதி வருதலால் அந்நாட்டு உழவர்கள் அவ்வளவு பெரிய வருவாய்களை எளிதே பெறுகின்றனர்.
The taste of the English in the cultivation of land is unrivalled. - Rural life in England
"நிலத்தைத் திருத்திப் பண்படுத்துவதில் ஆங்கிலேயருடைய ஆர்வம் அதிசயமுடையது' என்னும் இது இங்கே அறியவுரியது.
The rudest babitation, the most unpromising and scanty portion of land, in the hands of an Englishman of taste, becomes a little paradise. - W. Irving
பயனற்ற பொட்டலான வறண்ட நிலமும் ஒரு ஆங்கிலேயன் கையில் சிறிய சுவர்க்கமாய் மாறி விடுகின்றது' என வாஷிங்டன் இர்வின் என்னும் அமெரிக்க ஆசிரியர் இவ்வாறு எழுதியிருக்கிறார். கூரிய நோக்கம் சீரிய ஆக்கமாகின்றது.
உழவுத் தொழிலில் மேல்நாட்டார் அடைந்திருக்கும் மேன்மையை இதனால் அறிந்து கொள்கின்றோம். பெரிய சுக சீவிகள் என்ற கருதப்பட்டுள்ள அவர்கள் தொழில் முறைகளில் இவ்வளவு விழுமியராய் முன்னேறியுள்ளனர். இது எவ்வளவு வியப்பு! யூகமாய் உழைக்கின்றவர் யோகமாய்ப் பிழைக்கின்றனர்.
உழுது வாழ்வது யாண்டும் எவ்வகையினும் உயர்வு; அதனைச் செவ்வையாகச் செய்து திவ்விய போகங்களை எய்த வேண்டும்.
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
நிலந்தரு திருவினை நெடிது பேணியும்,
கலந்தரு திருவினைக் கருதி நாடியும்,
புலந்தரு திருவொடு பொழுது போக்கியும்,
வலந்தரு திருவொடு வாழ்ந்து வந்தனர்.
உன் சீவிய வாழ்வை இவ்வகையில் செய்து கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.