மாண்மரத்தில் புல்லுருவி போலிந்தப் பூதலத்தில் சோம்பேறி - சோம்பல், தருமதீபிகை 474

நேரிசை வெண்பா

ஆண்மகனாய்த் தோன்றியுமே ஆண்மை புரியாமல்
வீண்மகனாய்ச் சோம்பி விளிகின்றாய் - மாண்மரத்தில்
புல்லுருவி போலிந்தப் பூதலத்தில் சோம்பேறி
வல்லுருவம் அல்லல் வசை. 474

- சோம்பல், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

சிறந்த ஆண்மகனாய்ப் பிறந்திருந்தும் ஆண்மையாய் வினை செய்யாமல் அவமே சோம்பி அயர்ந்திருப்பது நல்ல மரத்தில் ஓர் புல்லுருவி போல் பொல்லாத புன்மையாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

ஆண், பெண் என்னும் இருவகைக் கூறுபாடுகளும் சீவ கோடிகள் எங்கணும் பரவியுள்ளன. பறவை, மிருகம் முதலிய தாழ்ந்த பிறவிகளிலும் ஆண்மைக்கு ஓர் மேன்மையுள்ளது. அதிகார ஆற்றல்கள் எல்லாம் ஆணின் இடமே காணியாய்க் கலந்திருக்கின்றன. மானிட மருமம் மாண்பு மிகவுடையது.

உயிர்கள் இயங்கி வருதலால் உலகம் வழங்கி வருகின்றது. சமுதாயம் பெருகி ஞாலம் விளங்கி வருதற்கு உரிய மூல வித்துக்களை ஆண்களிடமே கடவுள் அமைத்து வைத்திருக்கிறார். வித்தின் விளைவுகள் வியத்தகு நிலையின.

சீவ தாதுக்களை மேவியிருத்தலால் ஆண்மை யாண்டும் மேன்மையாய் விபனிலையில் விளங்கி நிற்கின்றது. பெண்மையை மருவிச் சந்ததிகளை நல்கி உலக விருத்திக்கு உரிமையாயுள்ள ஆண்மகன் தன் தலைமையையும் நிலைமையையும் கருதி நோக்கி அரிய பல காரியங்களை ஆற்ற நேர்ந்துள்ளான். வினையாண்மை என்னும் மொழியினால் வினை செயல்வகைக்கும் மனிதனுக்கும் உள்ள இனவுரிமை இனிது தெளிவாம்.

தான் செய்து வருகின்ற கருமங்களே ஒருவனுடைய தகைமைகளை மருமங்களாய் வெளிப்படுத்தி விடுகின்றன. வினைகளின் வழியே யாவும் விளைந்து வெளி வருகின்றன. அகத்தின் நினைவுகள் புறத்தே வினைகளாய் விரிந்து வருதலால் வாழ்வுகள் நினைப்பின் வண்ணங்களாய் நிகழ்ந்து திகழ்கின்றன.

மனிதப் பிறவி சிறந்ததாயினும் உயர்ந்த எண்ணங்களையுடையனாய்த் தகுந்த வினைகளைச் செய்து கொள்ளவில்லையாயின் அவன் தோற்றம் ஏற்றம் இழந்து இழிந்து படுகின்றது.

Unless above himself he can Erect himself, how poor a thing is man!” - Daniel

’தானே முயன்று தன்னை உயர்த்திக் கொண்டால் ஒழிய மனிதன் எவ்வளவு இழிந்த பொருள்!' என்னும் இது ஈண்டு எண்ணத் தக்கது. இழிவும் உயர்வும் விழி தெரிய நின்றன.

எண்ணி வினை செய்கின்றவன் பொன்னும் மணியும் போல் உன்னத நிலையில் உயர்ந்து ஒளி வீசி மிளிர்கின்றான்; வினைசெயல் ஒழிந்து மனம் மடிந்திருப்பவன் மண்ணும் கல்லும் போல் மாண்பிழந்து கழிகின்றான்.

செல்வங்களைத் தந்து சிறப்புகளை அருளுகின்ற முயற்சியை ஒருவன் இழந்திருப்பின் அவனிடம் இகழ்ச்சிகள் பல அடைந்து கொள்கின்றன. ஆண்மையாய் உழைப்பவன் ஆண்மகன்; அங்ஙனமின்றி வீணே சோம்பித் திரிபவன் வீண் மகன் ஆகும்.

எழிலுடையனாயினும் தொழில் இலனாயின் அவன் இழிமகனாய்ப் பழிநிலையை அடைகின்றான்

மரத்தில் இடையே வீணாகக் கிளைத்திருக்கும் ஒரு வகைப் புல்லிய கிளையைப் புல்லுருவி என்றது. யாதொரு பயனுமின்றி வறிதே புன்மையாய் முளைத்திருத்தலால் அது புல்லுருவி என நேர்ந்தது. பயனற்ற பிறவி பழியுற்று இழிகின்றது.

’சோம்பேறி வல்லுருவம் புல்லுருவி போல் வசை’ நல்ல மனிதப் பிறப்பும் பொல்லாத சோம்பலால் புலைப்பட்டுப் போகும் என்பதை இது உணர்த்தி நின்றது. உலகிற்கு ஒரு பயனுமின்றி வீணே தோன்றி நிற்றலால் மடியனுக்குப் புல்லுருவி உவமையாய் வந்தது.

சிறந்த குடியில் ஒரு சோம்பேறி பிறந்திருப்பது நல்ல மரத்தில் புல்லுருவி முளைத்திருப்பது போலாம். தனக்கும் பிறர்க்கும் பயன்படும் அளவே மனிதன் மாண்படைந்து வருகிறான். பயனில்லாத தோற்றம் பாழாய்ப் பழிக்கப்படுகின்றது.

நேரிசை வெண்பா

தீங்கரும் பீன்ற திரள்கால் உளையலரி
தேங்கமழ் நாற்றம் இழந்தா அங்கு - ஓங்கும்
உயர்குடி யுட்பிறப்பின் என்னாம் பெயர்பொறிக்கும்
பேராண்மை இல்லாக் கடை. 199 தாளாண்மை, நாலடியார்

ஆண்மையோடு முயன்று மேன்மையடையாதவன் உயர்ந்த குடியில் பிறந்திருந்தாலும் கரும்பின் நுனியில் பூத்துள்ள களை போல் இழிந்தே போவான் என்று இது காட்டியுள்ளது. தொழில் முயற்சியுடையவன் சுவையுடைய கரும்பு போல் யாண்டும் உயர்வடைந்து நிற்கின்றான்; சோம்பேறி அதன் தோகைபோல் எவராலும் இகழ்ந்து தள்ளப்படுகின்றான்.

முயற்சி மனிதனை நல்ல சாரமுடையவனாக்கி எங்கும் சீரும், சிறப்பும் அவனுக்கு அருளி வருகின்றது. சோம்பல் அவனை வறியனாக்கி வசையும் கேடும் வளர்த்து விடுகின்றது. பழி கேடான அந்த இழிவினை ஒழித்து உறுதியுடன் முயன்று உயர்ந்து கொள்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Sep-19, 2:23 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 120

மேலே