கோபப்படும் கோபம்

கோபத்தால் இழந்ததைவிட அதிகம் சாதித்தோர் கோபம் மீது ஒருபோதும் கோபம் கொள்வதில்லை

கோபத்திற்கு நாம் ஆட்படுவதும்… கோபம் தன்னுள் நம்மை உட்படுத்துவதும் சராசரி வாழ்க்கையில் சகஜம். கோபத்திற்கு அடிமையாகாமல் அதை கடப்பதுதான் பெரும் சாமார்த்தியம்.

கோபத்தை கலைப்பது வேறு…. களையெடுப்பது வேறு.

கோபம் விஷமமானது. ஆனால் சபிக்கத்தக்கதல்ல.

கோபம்தான் அடிமைத் தளைகளை தகர்த்தெறிந்தது

கோபம்தான் மக்களாட்சியை உருவாக்கி கொடுத்தது

கோபம்தான் கோழைத்தனத்தை கொச்சைப்படுத்தி வீரத்தை வெளிப்படுத்தியது.

கோபம்தான் அறியாமையை களையெடுத்து.. அறிவை சுத்திகரித்தது.

உரிமைகளை உரக்கப் போராடி பெற்றுத் தருவது கோபமே.

கோபம் இருவகை:

உண்டாகும் கோபம்…. உண்டாக்கப்படும் கோபம்.

முன்னது தவிர்க்க கூடியது. பின்னது தக்கவைத்துக்கொள்ளவேண்டியது.

ஒன்று அவசிய கோபம். மற்றொன்று அவசியமற்ற கோபம்.

அவசிய கோபம் உணர்வுகளில் வேரூன்றி விவேகமாய் வெளிப்படுகிறது

அவசியமற்ற கோபம் உணர்ச்சிகளுக்கு பலியாகி, சுய காவுக்கு வித்திடுகிறது.

கோபம்கூட ஒரு வரப்பிரசாதம்தான் நம் கட்டுப்பாட்டுக்குள் அதை வைத்திருக்கும் வரை.

கடிவாளம் கழன்டு விழுவதையும் உணராதவாறு படும் கண்மூடித்தனமான கோபம்தான் பயணப்பாதையை சிதறடித்து நம்மை விபத்துக்குள்ளாக்குகிறது.

சில வேளைகளில் அறிந்துகொள்ளும் கோபத்தைவிட அறியாமல் கொள்ளும் கோபத்தின் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும். அறியாமையால் அறிவு தடம் புரளலாம். பகுத்தறிவு அன்று.

உயர் இரத்த அழுத்தத்துக்கும் குறைந்த இரத்த அழுத்தத்துக்கும் மத்தியில் நின்று உடலையும் உள்ளத்தையும் சீராய் இயக்கி, சுவாசக்குழாய்களின் கட்டுப்பாட்டில் இதயத் துடிப்புகளை செயலாற்ற வைத்திருப்பதே அசல் கோபம்

கோபத்தை சாதகமாய் பயன்படுத்தும் உத்தி அதை அலைகழிப்பவருக்கே கைகூடுகிறது.

உண்டாக்கப்படும் அவசிய கோபத்தை அணைகட்டி பராமரித்து வந்தால்… அதன் மதகுகளுக்குள் இலகுவாய் நாம் வெளியேற நம் வடிகால்கள் தயாராய் தளும்பி நிற்கும்.

அதிகாரத்தை மூலமாக வைத்து கண்மூடித்தனமாய் கட்டவிழ்த்து விடும் கோபத்தை விட… அதிகாரத்தை எதிர்த்து நிதானமாய் வெளிப்படும் கோபத்திற்குதான் பலம் அதிகம்.

பொறுமை சிதறினால் கடலினும் பெரிதெனில், அந்த பொறுமை மலையில் பனிக்கட்டியாய் கோபம் உறைந்துள்ளது என்றுதானே பொருள்.

இருக்கும் இடம் தெரியாமல் சாந்தமாய் ஒளிந்திருக்கும் அந்த நன்கோபம்தான் சர்வ வல்லமை படைத்தது.

தணிந்த நிலையில் கனன்றுகொண்டிருக்கும் அந்த கோபத்தை எவராலும் சூட்சுமமாய் அடக்கிவிட முடியாது. வெற்று சமரசங்களுக்கும் அது அடங்காது.

இலக்குகளை கோர்வையாய் அணிவகுத்தவண்ணம் துடிப்புடன் காத்திருந்து என்றாவது ஒருநாள் நம் காரியங்களை சாதித்துக்கொள்ள வழிகோலும்

புறக்கணிப்புகளையும் அவமானங்களையும் உயிர்ப்புடன் வைத்திருக்க அவசியம் நமக்கு கோபம் தேவை.

நாம் கஷ்டப்பட்டு கடக்கும் சூழ்ச்சி, துரோகம், வக்ரம், பாகுபாடு, குரூரம், நன்றிகெட்டதனம் இவற்றை மறுபடி, மறுபடி எதிர்கொள்ள நேரும்போது அவற்றை தைரியமாய் உள்வாங்கி நேர்த்தியாய் எதிர்த்தடிக்க.. அணையா அடுப்பாய் கோபம் நம்முள் கனன்றுகொண்டிருந்தால்தான் சாத்தியமாகும்.

கட்டுபடுத்தும் கோப இறகுகளுக்குள் கட்டுண்டு கிடக்கும் கோபச் சிறகுகளால்தான் வானம் வசப்படும்.

பெருமழை நின்றபின் உதயமாகும் வெயில் பெறும் வரவேற்பு போன்று கோபத்தின் வெளிப்பாடு இடம் பொருள் ஏவலுடையதாய் இருக்கவேண்டும்.
கலங்கரை விளக்கமாய் கோபத்தை நம்முள் இருத்திக்கொண்டிருந்தால்தான் கரைகளை இனங்கண்டவாறு நமது பயணக் கப்பல் திணறாமல் வீரசாகசமாய் பயணித்திருக்கும்.

விஸ்தாரமாய் உள்ளடங்கிய வெளிச்சத்தின் வீரியத்திற்குள்…. பிரம்மாண்டமாய் பிரவேசித்துள்ள வழிக்காட்டியான கோபத்தை உள்வாங்கி முகாமிட்டுக்கொள்ளவது அவரவர் சாமார்த்தியம்.

அவசியமற்ற, உண்டாக்கிக் கொள்ளும் கோபத்தை நிச்சயம் தவிர்க்க இயலும்.

பணியிடங்களிலோ… வெளியிடங்களிலோ…. ஏற்படும் மன உளைச்சல்களால் தாக்கப்பட்டு சஞ்சலமடைந்த மன நிலையில் நாம் வீடு திரும்பும்போது…. சொல்லி வைத்ததுபோல் அன்று பார்த்து வீட்டிலும் (எதார்த்தமாய்) நமக்கு அலைகழிப்புகள் உண்டாகும்.

கோப அணலை ஊதிப் பெரிதாக்குவதுபோல் சில நிகழ்வுகள்…….. நீரோ… தேநீரோ….. நாம் கேட்கும் யாவும் அலட்சியமாய் உள்வாங்கப்படும். மீண்டும் கேட்கவேண்டி வரும். சோதனையாய் பொறுமை சீண்டப்படும். நாம் சுணக்கமாய் இருப்பது கூட கவனிக்கப்படாமல் அவரவர் தத்தம் பொழுதுபோக்குகளில் முனைப்பாய் இருப்பார்கள்

அந்த வேளையில்… நமது கோபம் தூண்டப்பட்டு…. விஸ்வரூபமாய் வெளிவந்து… வீட்டுக்குள் பிரயோகித்தால்… நம்முள் உள்ள கோபத்திற்கு நாம் பலியாகிவிட்டோம் என்று அர்த்தம்.

மாறாக… அந்த தருணங்களில்… நாம் பலவந்தமாக நமக்குள் சாந்தத்தை வரவைத்துக்கொண்டு கோபம் கொந்தளிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அவ்வாறு கடக்கும்போது, வகையாக நம்மை வீழ்த்த வந்த ஒரு எதிரியிடம் பலியாகாமல் லாவகமாய் தப்பித்த ஒரு பெருமிதம் உள்ளுக்குள் ஏற்படுவதை உணரலாம்.

தலைக்கு வந்தது.. தலைப்பாகையை கூட தொடாமல் போய்விடும்.

இந்த கோபத்தால் நான் சிறு அளவில் கூட பாதிப்படையவில்லை. இதனால் என்னை எதுவும் செய்ய இயலவில்லை. அதோடு இதுபோன்று இனிமேல் எனக்கு நேரும் கோபங்களுக்கும் இதே கதிதான் என்ற களிப்பு ஏற்படும்.

அதை தொடர்ந்து… நம் பேச்சுத்தொனியில் இயல்பாகவே ஒரு நயவு பிறக்கும். அப்போது வழக்கம்போல் நம்மை ஆத்திரத்துக்கு உட்படுத்தும் சேட்டைகளையும் செயல்களையும் கூட தண்மையோடு கடக்கலாம்.

மின்விசிறியின் சுழற்சி தழுவ, தழுவ.. வியர்வை பிசுபிசுப்பு குறைவதுபோல்… படிப்படியாய் கோபம் நம்மை விட்டு விலகுவதை உணரப்படும்

தெளிவான சிந்தனையில் பரிபூரணமாய் மனம் பக்குவப்படுவதை உணரலாம்.

இருளுக்குள் ஒளிந்துள்ள நிழலை… புகைக்கு ஊடே சரசமாடும் வெம்மையை… அஜீரணப் பிண்ணனிக்குள் புறக்கணிப்பாகும் பசியை எளிதாய் இனங்காணலாம்.

கோபத்தை மனைவி, மக்களிடம் கொட்டிவிடுவதால்…… நம் கோபம் கொஞ்சமும் தணிந்துபோய்விடுவதில்லை. மாறாக, அவர்களும் மனத் தாக்குதலுக்கு உள்ளாகி கலகலப்பை இழக்கும் நிலைக்கு தள்ளப்படும் இல்லம். நம் கோபத்தின் வெளிப்பாட்டால் இக்கட்டான நிலைக்கு அவர்களை உள்ளாக்கிவிட்டோமே என்ற அங்கலாய்ப்பு நம்மை மேலும் சங்கடத்துக்குள்ளாக்கும்.

மருத்துவ அறிவியல் படிப்பினையானது, வயதாக, ஆக Menopausal Syndrome விளைவால் தன்னிச்சையாய் கோபம் தலையெடுத்து சிறுக சிறுக வளரலாகும் என கூற வருகிறது.

இங்கே…. கோபம் சம்பந்தமான இதுபோன்ற மருத்துவ தகவல்களையும் செய்திகளையும் நமது அறிவார்ந்த கவனத்தில் பதித்துவைத்திருந்தாலே போதும். எச்சரிக்கையுடன் எதிர்கொள்ளலாம் கோபத்தை. நாம் அறியாதவாறு இந்த வகையில் கூட கோபப் பகைவன் பின்வாசல் வழியே வந்து தாக்கலாம் என்ற விழிப்புணர்வே மனரீதியாக நம்மை சுதாரிக்கவைத்து அதன் கொடுங்கரங்களுக்கு அகப்படாமல் சூதனமாய் விலகலாம்.

கோபம் கடத்துவது பலவீனம்; கோபத்தை கடப்பது பலம்.
கோபம் கொள்வது மடமை; கோபம் கொல்வது திறமை.

கோபப்படாமல் இருந்து கோபத்தை கோபப்பட செய்யுங்கள்.


**********************

எழுதியவர் : யேசுராஜ் (27-Sep-19, 12:53 pm)
சேர்த்தது : யேசுராஜ்
Tanglish : kobabbadum kopam
பார்வை : 729

மேலே