இரும்பு பகல்

அவள் காதுகளில்
தோடு இருக்கும் துளையில்
இருக்கிறது இரும்பாய் ஒரு பகல்.

இரவை சிந்திக்கொண்டிருந்த
அவள் கண்களிலிருந்து
பொங்கி மறைவதெல்லாம்
ஒரு நாளின் சாம்பல்.

அவள் மீது நடைகொள்ளும்
பூமியின் நிழலுக்குள்
ரகசியத்தின் விரசம்
கலைந்து செல்கிறது
குளிரை விரட்டியபடி நதியில்.

அவள் நிர்வாணம் கொண்டு
அலைந்து திரிகிறது
அத்தனை பட்டாம்பூச்சிகளும்
காடொன்றை காலால் கவ்வி.

அவள் சொற்களின் மீது
பவனிக்கும் பூச்சிகள்
உண்டு களிக்கின்றன கனவை
மூட்டையேறி விளையாடி.

அவள் பார்க்கையில்
அந்த பறவை மட்டும்
கண்டும் காணாது
வந்த இரவை கொண்டு
தன் கூடினை அடைக்கிறது.

எழுதியவர் : ஸ்பரிசன் (1-Oct-19, 12:22 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : irumbu pagal
பார்வை : 68

மேலே