வருவ தெளிந்து தொழிலில் விரைக துணிந்து - தொழில், தருமதீபிகை 467

நேரிசை வெண்பா

செய்யும் தொழிலைநீ செய்யாது நின்றாயேல்
மெய்யின் வலிகள் மிகமழுங்கி - உய்யும்
வழியும் மறையும்; வருவ தெளிந்து
தொழிலில் விரைக துணிந்து. 467

- தொழில், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

செய்கின்ற தொழில்களை நீ செய்யாது நின்றால் உடல்வலிமை இழந்து உணர்வு ஒளி மழுங்கும்; உயிர் வாழ்வு தேய்ந்து போகுமாதலால் தொழிலை விரைந்து செய்க என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், முயற்சியை மூண்டு செய் என்கின்றது.

உழைப்பே எவ்வழியும் செவ்விய பிழைப்பாய்ச் சிறந்துள்ளது. அதனைச் செய்து வந்த அளவே உய்தி நலங்கள் உளவாகின்றன. சீவ ஆதாரமாய்ச் செல்வங்களின் ஊற்றாய்க் கருமம் மருவியிருத்தலால் அதனை உரிமையோடு செய்து வருபவர் இருமையும் பெருமை பெறுகின்றனர். செய்யாது விடுகின்றவர் வெய்ய மடியராயிழிந்து வையத்தால் இகழப்படுகின்றனர்.

’செய்யும் தொழில்’ என்றது செய்ய உரிய கருமம் என வினையாண்மையின் உரிமையும் உறுதியும் தெரிய வந்தது.

அறிவு, இச்சை, செயல் என்னும் இம்மூன்றும் மானிட சாதியிடம் இயல்பாய் மருவியுள்ளன. முதலில் ஒரு பொருளை அறிகின்றான்; அதன்பின் அதனையடைய விரும்புகின்றான்; தான் விரும்பிய பொருளைப் பெறுதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்கின்றான். அச்செயலே வினை, கருமம், விதி என நின்று கருதிய பயன்களை உறுதியாக உதவி அருளுகின்றது.

தானே தொழில் செய்து அதன் வழியாக வருகின்ற ஊதியத்தைக் கண்டபொழுது ஒரு மனிதனுக்கு உண்டாகின்ற இன்பம் தனி மகிமை யுடையது. அரிய ஊற்றிலிருந்து வருகின்ற இனிய நீர் போல் உரிய முயற்சியிலிருந்து வருகிற பொருள் பெரிய ஆனந்தம் ஆகின்றது.

தொழிலில் பழகிச் சுவை கண்டபொழுது அந்த மனிதனிடம் ஒரு புதிய எழிலும் அதிசய ஆண்மையும் அறிவின் தெளிவும் ஒளி வீசி உலாவுகின்றன. தான் பிறந்த நாட்டிற்கு அவன் ஓர் சிறந்த மனிதனாய் உயர்ந்து திகழ்கின்றான். அவனோடு பழகியவரும் தொழில்களில் முயன்று விழுமிய நிலைகளை அடைய நேர்கின்றனர். ஒரு கரும வீரனால் பல பெருமைகள் உளவாகின்றன.

வினையாண்மைகளில் மூண்டு முனைந்து வருகின்ற மக்களை எந்த நாடு வளமாகப் பெற்றிருக்கின்றதோ அந்த நாடே எல்லாச் செல்வங்களிலும் சிறந்து யாண்டும் உயர்ந்து விளங்குகின்றது.

Industrious habits in each bosom reign, And industry begets a love of gain. - Traveller

தொழில் முறைகள் எல்லாருடைய இதயங்களிலும் குடி கொண்டிருந்தன. பொருள் ஊதியத்தில் யாவருக்கும் ஓர் ஆவலை அவை விளைத்து நின்றன’’ என ஹாலந்து தேசத்து மக்களைக் குறித்து இங்ஙனம் உரைத்துள்ளார். உழைப்பாளிகளையுடைய தேசம் என்றும் உயர்ந்த மதிப்பை அடைந்து கொள்கின்றது. உயர்ச்சி எல்லாம் முயற்சியில் உள்ளன.

நேரிசை வெண்பா

உள்ளம் துணிந்தே உறுதி யுடன்முயன்றார்
வெள்ளம் துணிந்தபொருள் மேவுகின்றார் - உள்ளம்
மடிந்திருப்பார் ஆயினம் மாக்கள் குடியும்
இடிந்திருக்கும் அன்றே இழிந்து.

செயல் இழந்தபோதே மனிதன் உயர்விழந்து ஊனம் அடைகின்றான். முயல முயல உயர்வும் ஒளியும் உளவாகின்றன. அயர அயர இழிவுகளும் துயரங்களும் நிறைகின்றன.

‘தொழிலில் விரைக துணிந்து’ என்றது உழைப்பின் உரிமை உணர வந்தது.

எந்தத் தொழிலும் பழகினாலன்றி யார்க்கும் அது எளிதில் அமையாது; பழகப் பழக எதுவும் எளிமையாய் இனிமை புரிந்து வரும். மனிதன் பழகிக் கொண்ட அளவே தொழிலில் உயர்ந்து கரும வீரனாய்ப் பெருமை பெற்று நிற்கின்றான்.

நல்ல தொழிலாளி என்று பெயரெடுப்பது ஒரு மனிதனுக்குச் சிறந்த புகழாம். தன் உழைப்பும், ஊதியமும் பலர்க்கும் பயன்பட்டு வருதலால் உழைப்பாளி உயர்ந்த புண்ணியங்களை அடைந்து சிறந்த கண்ணியங்களைக் கண்டு உய்தி பெறுகின்றான்.

உரிமையுடன் செய்கின்ற கருமங்கள் யாவும் தருமங்களாய்த் தழைத்து வருவதால், அவ்வினையாளன் நினையாமலே எல்லா உறுதி நலங்களையும் எளிதே மருவி மகிழ்கின்றான்.

சிறந்த ஞானிகளும் கருமங்களைக் கைவிடாமல் செய்து வந்திருத்தலால் உலக வாழ்வுக்கும் தொழிலுக்கும் உள்ள உரிமையும் உறவும் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.

'ஜனக மன்னன் முதலிய ஞானிகளும் கருமங்களைச் செய்தே சித்தியை அடைந்துள்ளனர்; அதனை உணர்ந்து நீயும் உன் தொழிலை உலக நன்மையின் பொருட்டுச் செய்க' என அருச்சுனனை நோக்கிக் கண்ணன் இவ்வாறு கூறியிருக்கிறான்.

கரும பூமியாகிய இவ்வுலகில் பிறந்துள்ள மனிதன் தனக்குரிய ஒரு தொழிலைச் செய்தே தீர வேண்டும்; அங்ஙனம் செய்த போதுதான் பிறவியின் பயனை ஓரளவு அவன் எய்தினவன் ஆகின்றான். பொன்னும் புகழும் வினையில் மன்னி எழுகின்றன.

தன் கடமையைக் கருத்தூன்றிச் செய்தவனுக்கே கடவுள் தன் உடைமையை உவந்து அளிக்கின்றார்; பாடுபட்ட அளவே கூலி வருகின்றது. பாட்டாளி தேட்டாளியாய்ச் சிறந்து தன் நாட்டுக்கு நலம் பல செய்கின்றான்.

எழுசீர் விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

மானிட னொருவன் தனக்கருஞ் செல்வம்
..வாய்க்கவென் றனுதினம் முயற்சி
தாநுஞற் றுவனேற் கடவுளும் அதனைத்
..தந்தளிக் குறுமதா லன்றோ
ஆனபே ரறிஞர் திருவினை முயற்சி
..யாக்குமம் முயற்சியில் லாமை
ஈனமார் இன்மை புகுத்திடு மாலென்
..(றி)யாரும்நன் குணர்தர நவில்வார். 148 குசேலோபாக்கியானம்

முயற்சியின் மூலமாகவே தெய்வம் மனிதனுக்குக் கருணை புரிகின்றது என இஃது உணர்த்தியுள்ளது. செல்வம், புகழ், தெய்வத் திருவருள் முதலிய எல்லா நன்மைகளும் கருமத்தால் வருகின்றன. அந்த மருமத்தை யுணர்ந்து உரிமையோடு தொழில் புரிந்து இருமையும் பெருமையாய் இன்பம் பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Oct-19, 10:42 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 80

மேலே